December 2, 2022

`வீரியம் மிக்க-சாதனை மனிதர்` ஜியோனா சானா மரணம்! -சிவா பரமேஸ்வரன்

டந்த ஞாயிறு (ஜூன் 13) காலமானார் 76 வயது நிறைந்த ஜியோனா சானா.

அவரின் `அசாத்தியமான உடலுழைப்பு` உலகப் புகழ் பெற்றது. ஓய்வு, தளர்ச்சி, பாரபட்சம் இல்லாமை, சமத்துவம் என அனைத்தையும் தனது வாழ்நாளில் நடைமுறைபடுத்திக் காட்டியவர்.

இவர் காலம் முழுக்க அசராது உழைத்தவர்; இவரின் கதை ஈடு இணையற்றது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் சாமானியர்கள், ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மானுடவியலாளர்கள், சமையல் கலையைப் பயிலும் மாணவர்கள், அரசியல்வாதிகள் என்று பல்துறையினர் இவரை வந்து சந்தித்து உரையாடிச் செல்வது பல ஆண்டுகளாக நடைபெறும் ஒன்று. அது சரி! அவர் ஏன் தனித்துவமானவராக விளங்குகிறார்? அப்படி என்ன பெரிய சாதனை படைத்துவிட்டார்?

அவரது சாதனை என்பது 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரப் பிள்ளைகள் மற்றும் ஒரு கொள்ளுப்பேரன் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் என்பது தான்.

கட்டிய ஒரு மனைவியை காலம் முழுவதும் கண்கலங்காமலும்,அவருக்கு விசுவாசமாகவும் இருந்து `நல்ல பெயர்` வாங்குவதற்தே படாத பாடுபடும் 21ஆம் நூற்றாண்டில், இவர் 39 மனைவியரையும் சமமாகப் பாவித்து இல்லற சுகத்தை அளித்து, அவர்களிடையே சண்டை சச்சரவுகள் இன்றி எல்லோரையும் `அணைத்துச் சென்றார்`.

“ இந்தியா ஒரு மிகப்பெரும் சுற்றுலாச் சிறப்பை இழந்துவிட்டது“ என்று இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமின் முதலமைச்சர் ஜோரம்தாங்கா டிவிட்டர் மூலம் தெரிவித்த தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மிசோரம் மற்றும் அவரது கிராமமான பக்டாவங் டிலாங்குனவும் அவரது குடும்பம் காரணமாக எமது மாநிலத்தில் முக்கியமானதொரு சுற்றுலாத்தலமாக விளங்கியது என்றும் அவர் `சாதனைச் சிகரம்` ஜியானா சானாவின் மறைவு குறித்துக் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக அவரையும் அவரது கூட்டுக் குடும்பத்தாரையும் காண வருவோர் `மூக்கின் மேல் விரல் வைத்து` வியக்கும் ஒரு விஷயம்-`இந்த மனிதர் இவர்களை எப்படிச் சமாளிக்கிறார், குடும்பத்தை எப்படி நிர்வகித்தார்` என்பதே?

அவரது முதல் மனைவி இவரைவிட மூன்று வயது மூத்தவர். மற்ற 38 பேரும் இவரது பேச்சுக்கு மதிப்பளித்து பிரச்சனையின்றி கணவருடனான நேரத்தை `பகிர்ந்து கொண்டனர் என்பதுதான் ஆச்சரியமான உண்மை`.

நம் நாட்டில் பலதார உறவு அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், சில பழங்குடியின பிரிவினருக்கு இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜியோனா-` ச்சானா பவல்` எனும் எனும் பிரிவைச் சேர்ந்தவர். அந்தப் பிரிவு தமது திருச்சபையின் உறுப்பினர்கள் பலதார உறவுகளை வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. அந்தத் திருச்சபையில் 400 குடும்பங்களிலுள்ள சுமார் 4000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவரது மகன்கள் மருமகள்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் தனித்தனி அறையில் வசித்தாலும், ஜியானாவின் மனைவிகள் அனைவரும் அவரது படுக்கையறைக்கு அருகிலிருந்த ஒரு தங்குமிடத்தில்-டார்மட்ரியில்-தங்குவார்கள்.

அவரது குடும்பம் 100 அறைகளைக் கொண்ட ஒரு நான்கு மாடி குடியிருப்பில் தங்கியுள்ளது. மிகவும் எழில் கொஞ்சும் மிசோ மலைச் சரிவிலுள்ள பக்டாவங் டிலாங்குன கிராமத்தில் அவரது வீடு உள்ளது. அதைத் தவிர விருந்தினர் இல்லம் ஒன்று, குடும்பத்தினருக்கான ஒரு பாடசாலை மற்றும் விளையாட்டு மைதானம் ஒன்றும் பரந்து விரிந்த அவர்களின் குடும்பத்திற்கு உள்ளது. குடும்பத்திலுள்ள ஆணிகள் அந்த மைதானத்தில் குழுக்களாகப் பிரிந்து அன்றாடம் கால்பந்து விளையாடி மகிழ்கின்றனர்.

அந்த குடும்பத்தினர் சுயச்சார்பு திட்டத்தின் அடிப்படையில் வாழ்கின்றனர். விவசாயச் செயல்பாடு, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு ஆகியவற்றில் பெண்கள் ஈடுபடுகின்றனர். ஆண்கள் அனைவரும் தச்சுத் தொழிலைச் செய்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு தச்சுப் பட்டறை மற்றும் மரத் தொழிற்சாலை ஒன்றும் உள்ளது.

இரவு நேரம் அவர்கள் உணவுக்காக ஒன்றுகூடும் போது அது கல்லூரி உணவுக் கூடம் அல்லது சமுதாய உணவுக் கூடம் போல அந்தச் சூழல் காணப்படும்.சராசரியாக நாளொன்றுக்கு குறைந்தது 100 கிலோ அரிசி பொங்கப்படுகிறது. அத்தோடு 60 கிலோ உருளைக் கிழங்கு, 40 கோழிகள் ஆகியவையும் உணவாகின்றன.

“சமைப்பது ஒரு போதும் பிரச்சனையாக இருந்ததில்லை, அது ஒரு கூட்டு முயற்சி மற்றும் மகிழ்ச்சியான வாழ்வின் ஒரு பகுதி“ என்கிறார் குடும்பத்தின் மூத்த மருமகள் த்லெங்கி லிவியானா.

சுழற்சி முறை

இதை எல்லாம் விட ஹைலைட்டான சமாச்சாரம் என்னவென்றால் 39 மனைவிகளும் ஒற்றுமையாக இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அட்டவணையின் படி சுழற்சி முறையில் கணவருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்ததை ஆய்வு செய்வதற்காகவே வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிசோரம் வந்து அந்தக் குடும்பத்தினருடன் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

“எங்களுக்கென்று நேரமும், காலமும் உள்ளது-எனவே இதில் சிக்கலில்லை, நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம்“ என்று மனைவியர் அனைவரும் ஒரே குரலில் கூறினர்.

வீட்டு வேலை, சமையல், பிள்ளைகள் பராமரிப்பு, சுத்தம் செய்தல் என அனைத்திலும் ஜாய்தியாங் சொல்வதே இறுதி வார்த்தை. இப்போது மருமகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகளும் உடன் இணைந்து குடும்ப வேலைகளைச் செய்கின்றனர்.

லண்டனிலுள்ள `ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்` ஆச்சரியமூட்டும் அருங்காட்சியகம் மிகவும் பிரபலம். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சென்று கண்டுகளிக்கும் ஓரிடம். பத்தாண்டுகளுக்கு முன்னர் உலகின் விந்தையான கதைகள் என்னும் தலைப்பில் அவர்கள் காட்சிப்படுத்திய 10 அம்சங்களில் ஜியோனா சானாவின் குடும்பமும் ஒன்று.

இப்பேர்பட்டவர் கடந்த ஞாயிறன்று அவர் மரணமடைந்ததாக மாநில முதலமைச்சர் ஜோரம்தாங்கா டிவீட் மூலம் தெரிவித்து அஞ்சலி செலுத்திய நிலையில், திங்கட்கிழமை பின்னிரவு புதிய சர்ச்சை ஒன்று தோன்றியுள்ளது.

அவரது மனைவியரும், அவர் தலைமையேற்றுள்ள திருச்சபையைச் சேர்ந்தவர்களும் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று கூறு அவரது நல்லடக்கத்தை செவ்வாய்க்கிழமை நிலவரப்படி நிறுத்தி வைத்துள்ளனர். ஜியானா சானாவில் உடலில் வெப்பமும் நாடித் துடிப்பும் இருக்கும் வரை அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறாது என்று “ச்சுவான் தார் கொஹ்ரான்“-அதாவது புதிய தலைமுறை தேவாலயத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜியானா சானாவின் `வீரியம் மிகுந்த சாதனை` இன்று உலகளவில் பேசப்படுகிறது.

ஆம், உலகின் மிகப் பெரிய குடும்பி காலமானார். அவர் ஒரு வகையில் தனித்துவமானவர். சாதனைகளுக்கு அளவுகோல்கள் கிடையாது!