இனி யுடியூப் பேட்டிகளும் வேண்டாம் என்று ஒதுக்கப் போகிறார்கள்!

இனி யுடியூப் பேட்டிகளும் வேண்டாம் என்று ஒதுக்கப் போகிறார்கள்!

தன் ரவிச்சந்திரனும், வெண்பா கீதாயனும் அளித்துவரும் அவர்களின் ஸ்டிங்க் ஆபரேஷன் வீடியோக்கள் பார்க்கும்போது.. முதலில் அவர்கள் இருவரின் தைரியத்தை வியக்கத் தோன்றுகிறது.

அடுத்து.. ஜனநாயகத்தில் பொறுப்புமிக்க நான்காவது தூண் என்று மதிக்கப்படும் ஊடகத்துறையிலும் நேர்மையைக் கழற்றி மதுவுக்கும், கரன்சிக்கும், தங்கத்திற்கும், எலெக்ட்ரானிக் பொருள்களுக்கும் விலை போகிற நபர்களின் நிஜ முகங்கள் பார்க்க..அருவெறுப்பாக இருக்கிறது. இவரா, இவருமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

ஊடகத் துறை என்றில்லை, கல்வி, மருத்துவம், ஆன்மிகம், விளையாட்டு, கலை என்று எந்தத் துறையில் இது போல ஸ்டிங்க் ஆபரேஷன் நடத்தினாலும் இப்படியான அதிர்ச்சியளிக்கும் வீடியோக்கள் தயாரிக்க முடியும்.

அந்த அளவிற்கு மலிவான மக்கள் எங்கும் பெருகிவிட்டார்கள் என்பது கசக்கும் நிஜம்.

ஆனால்.. எங்கு தவறு நடந்தாலும் அதை துணிச்சலுடன் தட்டிக்கேட்கிற கடமையும், தார்மீகப் பொறுப்பும் கொண்டுள்ள ஊடகத்துறையினரிடம் குறைந்த பட்ச நேர்மை முக்கியம்.

இனி..எந்த நேர் காணலைப் பார்த்தாலும் அதன் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். நரம்பு புடைக்க அறச் சீற்றத்துடன் எவர் கேள்விகள் கேட்டாலும் இதுவும் நடிப்போ என்கிற சந்தேகம் வரத்தான் செய்யும்.

ஊடகத் துறைக்கென்று அமைப்புகள் இருக்கின்றன. அமைச்சகம் இருக்கிறது. அதிகாரிகள் இருக்கிறார்கள். அடையாளம் காட்டப்பட்டிருக்கும் இந்தக் கபட வேடதாரிகள் மீது அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

டெலிவிஷன் பேட்டிகள், விவாதங்கள் பார்ப்பதை பலர் நிறுத்திவிட்டார்கள். இனி யுடியூப் பேட்டிகளும் வேண்டாம் என்று ஒதுக்கப் போகிறார்கள்.

மொத்தத்தில்..மதிப்பான நேரம் மிச்சம்!

பட்டுக்கோட்டை பிரபாகர்

error: Content is protected !!