உறியடிக்கும் மனித கோபுரத்தில் மைனர்கள் பங்கேற்கத் தடை !- சுப்ரீம் கோர்ட்

உறியடிக்கும் மனித கோபுரத்தில் மைனர்கள் பங்கேற்கத் தடை !- சுப்ரீம் கோர்ட்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் தஹி ஹண்டி என்ற பெயரிலான உறியடி விழாவில் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் பங்கேற்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

uriyadi aug 18

கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும்விதமாக அந்தரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் தயிர் பானையை மனித கோபுரம் அமைத்து இளைஞர்கள் உடைக்கும் விழா மகாராஷ்டிரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும். இந்த விழாவின்போது மிக அதிக உயரத்தில் தயிர் பானை கட்டிவைக்கப்படுவதால், மனித கோபுரமும் அதிக உயரத்துக்கு அமைக்கப்படுகிறது. சில சமயங்களில் அந்தப் பானையை உடைக்க முயலும்போது, மனித கோபுரம் சரிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், இந்த விழாவுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கோரி, கடந்த 2014-ஆம் ஆண்டு, மகாராஷ்டிர ஐகோஎட்டில் சமூக ஆர்வலர் ஸ்வாதி சாயாஜி பாட்டீல் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை அந்த ஆண்டு விசாரித்த ஐகோர்ட், 18 வயதுக்கும் குறைவான சிறார்கள் இந்த விழாவில் பங்கேற்க தடைவிதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தயிர் பானையை உடைக்க 20 அடிக்கு மேல் மனித கோபுரம் அமைக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அந்த மாநில அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முதலில் மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தபோதிலும் பின்னர், மகாராஷ்டிர அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனிடையே, ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தாமல் அவமதித்தாகக் கூறி அந்த மாநில அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் ஸ்வாதி சாயாஜி பாட்டீல் புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்தஐகோர்ட், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்குமாறு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டை மகாராஷ்டிர அரசு அணுகியது.

அந்த மனுவை நேற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தயிர் பானையை உடைக்கும் விழாவில் 18 வயதுக்குள்பட்டோர் பங்கேற்கக் கூடாது என்றும் மனித கோபுரத்தை 20 அடிக்கு மேல் அமைக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த மனு மீது அடுத்த விசாரணை வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் அறிவித்தது.

Related Posts

error: Content is protected !!