September 20, 2021

ஆபத்து.. ஆபத்து.. ஃபேஸ்புக்-கால் நம் ஜனநாயகத்துக்கே ஆபத்தா!- மத்திய அமைச்சர் எச்சரிக்கை!-

உலகம் முழுக்க வியாபித்துள்ள பேஸ்புக், அதிகம் ஆக்கிரமித்துள்ளது இந்தியாவில்தான். 25 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இரண்டாவது இடத்தில் அமெரிக்கா (23 கோடி பேர்) உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பிரேசில், இந்தோனேஷியா உள்ளன. உலகளவில் 216.7 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துபவர்களாக உள்ளன. அப்படியாப்பட்ட  பேஸ்புக் நிறுவனம் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. சுமார் 5 கோடி பயணர்களின் தகவல்கள் ஒரு செயலி மூலம் திருடப்பட்டு அது கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த விவரங்கள் அரசியல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து எம்.பி. டாமியன் கொலின்ஸ் என்பவர் தலைமையில் எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, முகநூல் அதிபர் மார்க் ஜூக்கர்பெர்க், 26-ந் தேதிக்குள் தங்கள் முன்பு நேரில் ஆஜராகி, இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது.

ஆம்.. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய திட்டமிடலும், தொழில்நுட்ப பலமும் இருக்கிறது.

இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸாண்டர் நிக்ஸ் வீடியோவில் இதை ஒப்புக்கொள்வது வெளியாகி உள்ளது.

அதாவது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். தேர்தல் ஆலோசனை மையம் என்ற பெயரின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. உலகம் முழுக்க தேர்தல் தொடர்பான குழப்பங்களை தீர்க்க ஆலோசனைகளை வழங்கி, வெற்றி பெற வழிகாட்டி வருகிறது. இவர்கள்தான் பேஸ்புக் மூலம் பல கோடி மக்களின் தகவல்களை திருடி இருக்கிறார்கள். தேர்தல் சமயங்களில் அந்த தகவலை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்கள். அதே போல் ஒவ்வொரு பேஸ்புக் பயனாளிகளையும் மயக்கும் வகையில் தேர்தல் விளம்பரங்களை, அவர்கள் திருடிய தகவலை வைத்து உருவாக்குகிறார்கள்.

இதுவரை மொத்தம் 50 மில்லியன் பேஸ்புக் கணக்குகளில் விவரங்களை இவர்கள் திருடி இருக்கிறார்கள். 50 மில்லியன் மக்களின் தகவலை வைத்து அவர்களை எப்படி எல்லாம் தேர்தலில் மாற்றி ஒட்டு போடா வைக்க முடியுமோ அப்படி எல்லாம் செயல்பட வைப்பார்கள். இதற்கு உலகின் டெக் ஜாம்பவான்கள் பணியாற்றியுள்ளார்கள்.

உதாரணமாக உங்கள் தெருவில் இரண்டு பேர் தேர்தலில் நிற்கிறார்கள். ஒருவர் குப்புசாமி, ஒருவர் கருப்பு சாமி. குப்புசாமி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திடம் பணம் கொடுத்தார் என்றால் , குப்புசாமியை பற்றிய நல்ல தகவல்களை மட்டுமே பேஸ்புக்கில் கட்டுரைகளாக வர வைப்பார்கள், அதுவும் உங்களுக்கு பிடித்தது போல. மேலும் கருப்புசாமி குறித்து மோசமான கட்டுரைகளை வர வைப்பார்கள். இதன் மூலம் ஒரு தலைவர் பற்றிய உங்கள் பார்வையை மாற்றி உங்களை வேறு ஒரு நபருக்கு ஒட்டு போட வைப்பார்கள். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் இப்படித்தான் வெற்றி பெற்றார் என்ற சர்ச்சை நிலவி வருகிறது. அதேபோல் ஐரோப்ப யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியே நடந்த வாக்கெடுப்பில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் கோல்மால் வேலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது. இவர்கள் பேஸ்புக் கணக்கில் தகவல்களை திருடுவது மிகவும் சுவாரசியமான ஒன்று. பேஸ்புக்கில் சமயங்களில் சில விளையாட்டுகள் வைரல் ஆகும். அதை கிளிக் செய்தால் நமக்கு எப்போது திருமணம் நடக்கும், நமக்கு எப்போது மரணம் வரும், முன்ஜென்மத்தில் எப்படி இருந்தோம் என்று சொல்லும். இந்த லிங்குகளை கிளிக் செய்யும் போது, நம்முடைய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் எடுத்துவிடும். இப்படித்தான் உலகம் முழுக்க 50 மில்லியன் கணக்குகளை அபேஸ் செய்து இருக்கிறார்கள்.

இதனிடையே பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இந்திய தேர்தல்களில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு தலையிட்டால் கடும் நடவடிக்கையை சந்திக்க நேரும் என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று எச்சரித்தார். இந்நிலையில் இது தொடர்பாக நேற்று பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ நான் ஒன்றை தெளிவாக கூறிகொள்கிறேன். அனைவரது கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்வது போன்றவற்றை இந்திய அரசு மதிக்கிறது. ஆனால், அதேசமயம் இந்திய தேர்தல்களில் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு தலையிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும். இந்த விஷயத்தில் பேஸ்புக் நிறுவனத்தையும் அதன் நிறுவுனர் மார்க் ஜூகெர்பெர்கையும் கடுமையாக எச்சரிக்கிறேன்.

மறுபடியும் சொல்கிறேன் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டை மத்திய அரசு வரவேற்கிறது. அதேசமயம் இந்திய மக்களின் தகவல்கள் திருடப்பட்டால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு நடந்தால் ஐடி சட்டத்தின் கீழ் பேஸ்புக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பேஸ்புக் நிறுவுனர் மார்க் ஜூகெர்பெர்கை இந்தியாவுக்கு வரவழைத்து நேரில் விசாரணை நடத்தும் நிலை ஏற்படும்’’ என ரவிசங்கர் பிரசாத் எச்சரித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு விசாரணை நடத்துமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ‘‘அவ்வாறான குறிப்பிட்ட புகார்கள் ஏதேனும் வந்தால் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்’’ என தெரிவித்தார். மேலும், குற்றம்சாட்டப்பட்ட காம்பிரிட்ஜ் அனால்டிக்கா நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார். வரும் 2019ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் காம்பிரிட்ஜ் அனால்டிக்கா நிறுவனம், காங்கிரஸ் கட்சியின் பிரம்மாஸ்திரமாக செயல்படும் என சில சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எனது கேள்வி என்னவென்றால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வெற்றி, தகவல் திருட்டு, பொய்யான செய்திகள் பரப்புவது போன்ற நடவடிக்கைகளை நம்பி தான் உள்ளதா? ராகுல் காந்தியின் சமூக வலைதள விவரங்களை உருவாக்கியதில் காம்பிரிட்ஜ் அனால்டிக்காவின் பங்கு என்ன? என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டுக்கு  காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பதிலாக, ‘‘பீகாரில் 2010ம் ஆண்டில் பாஜவும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டனி அமைத்து வெற்றி பெற்றன. இதில் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா சேவை பயன்படுத்தப்பட்டதாக அந்த நிறுவன இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ல் இந்த நிறுவன சேவையை ராஜ்நாத் சிங் பயன்படுத்தியுள்ளார். காங்கிரஸ் ஒருபோதும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதில்லை’’ என தெரிவித்துள்ளார்.

 டெயில் பீஸ்:

பேஸ்புக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 4 ஆண்டில் இல்லாத அளவு 7 சதவீதம் சரிந்துள்ளது. ஒரே நாளில் நிறுவன மதிப்பு இந்திய ரூபாயில் 2.5 கோடி சரிந்துள்ளது.  பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜூகர்பர்க் சொத்து மதிப்பு 40,000 கோடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது