September 25, 2022

உலகம் சுற்றிய நிஜத் தமிழன் ’ஏ.கே. செட்டியார்!’

ன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை அமைத்தவர் ஏ.கே.செட்டியார் என்று அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார். அவர் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநாட்டுப் பகுதியான கோட்டையூரில் 03.11.1911 ஆம் நாள் பிறந்தார். திருவண்ணாமலை யில் படித்துக் கொண்டிருக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியைத் தமது தலைவராக ஏற்றார். தமது இருபதாவது வயதில் மியான்மரின் (பர்மா) தலைநகரமான ரங்கூனில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் வெளியிடப்பட்ட ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். புகைப்படக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, 1930 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று ‘இம்பீரியல் ஆர்ட்ஸ் கலாசாலையில்’ சேர்ந்து புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றார். அவர் ஜப்பான் நாட்டில் தாம் கண்ட காட்சிகளையும், பெற்ற அனுபவங்களையும் கட்டுரைகளாக வரைந்து ‘தனவணிகன்’ இதழுக்கு அனுப்பினார். இதழில் வெளியிடப்பட்ட அவரது பயணக் கட்டுரைகள் படிப்போரின் உள்ளத்தைக் கவர்ந்தது. அக்கட்டுரைகள் தொகுக்கப் பெற்று ‘ஜப்பானில் சில நாட்கள்’ என்னும் நூலாக வெளியிடப்பட்டது. இது தான் அவரது முதல் நூல்.

ஜப்பானில் புகைப்படக் கலையைப் பயின்ற செட்டியார் மேல்பயிற்சிக்காக அமெரிக்கா சென்று நியூயார்க்கிலுள்ள ‘போட்டோகிராபிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில்’ சேர்ந்து பட்டயப் படிப்பில் (டிப்ளமா) தேர்ச்சியடைந்தார். படிப்பு முடிந்து இந்தியா திரும்புகையில் இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தார். இந்தப் பயண அனுபவங்களைக் கட்டுரைகளாக வெளியிட்டார். அக்கட்டுரைகள் பின்னர் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்னும் பெயரில் நூலாக 1940 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்குப் பிறகு ஏ.கே.செட்டியார் ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்றே மக்களால் அழைக்கப்பட்டார். பெயருக்கேற்ப, தம் வாழ்நாளில் அவர் சுமார் நான்கு இலட்சம் மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நூல்களிலேயே அதிகமான பதிப்புகள் வெளிவந்த நூல், ‘உலகம் சுற்றும் தமிழன்’ ஆகும். அந்த நூல் மாணவர்களுக்குப் பாட நூலாகவும் வைக்கப்பட்டது. பல பதிப்புகள் வெளியிடப்பட்டு பதிப்புத்துறையில் ஒரு சாதனை புரிந்தது எனலாம். ஏ.கே.செட்டி யாரின் பயண நூல்கள் எளிமையும், தெளிவும் கொண்டு விளங்குபவை. அவர் தேவைக்கு மேல் எதுவும் எழுதுவதில்லை. மேலும், மனிதப் பண்பு, மனித நேயம் என்பவற்றையே முன்னிறுத்தி அவரது எழுத்துக்கள் அமைந்துள்ளன.

நியூயார்க்கிலிருந்து 1937 அக்டோபர் 2-ல் டப்ளின் நகருக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்து  கொண்டிருந்த சமாரியா கப்பலில் 26 வயதுகூட நிரம்பாத அந்த தமிழ் இளைஞர் கனவொன்று கண்டார் – அதாவது காந்தியின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக எடுக்க வேண்டும் என்று. இதற்க்காகவே இரண்டரை ஆண்டுகள். இருமுறை உலகைச் சுற்றினார். கப்பலிலும் விமானத்திலும் ரயிலிலும் ஒரு லட்சம் மைல் பயணித்தார்.30 ஆண்டுகளில், 100 கேமராகாரர்கள் படம் பிடித்த 50,000 அடி நீளப் படச் சுருள்களைக் கண்டெடுத்தார். 1940-ல் ‘மகாத்மா காந்தி: அவரது வாழ்க்கையின் சம்பவங்கள்’ என்ற இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படம் ஆகஸ்ட் 1940-ல் வெளிவந்தது.

காந்தியைப் பற்றிய முதல் முழு நீளப் படம் என்ற பெருமை இதற்கு உண்டு. தமிழ் வடிவம் வெளிவந்த சில மாதங்களில், அப்படம் தெலுங்கு விவரணையுடன் வெளி வந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் சூடுபிடித்த வேளையில், சில ஆண்டுகள் அதன் படச்சுருள்கள் தலைமறைவாயின. சுதந்திரக் கொண்டாட்டம் கோலாகலமாக அரங்கேறிக்கொண்டிருந்த வேளையில், 14 ஆகஸ்ட் 1947 இரவு புது டெல்லியில் இப்படம் திரையிடப்பட்டது. காந்தியின் இறுதிக்கட்ட வாழ்க்கை வரையுள்ள நிகழ்ச்சிகளையும் சேர்த்து முழுமைப்படுத்தி அதனை 1950-ல் இந்தியில் தயாரித்தார் அவ்விளைஞர்.

சில ஆண்டுகள் கழித்து, ஜோசப் மக்கார்த்தியின் கம்யூனிச எதிர்ப்பு வேட்டை ஹாலிவுட்டைப் பதம் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அப்படத்தை ஆங்கிலத்தில் தயாரித்து, அமெரிக்காவிலும் வெளியிட்டார். இப்படி சாதனைக்கு மேல் சாதனை புரிந்த இளைஞர் ஏ.கே. செட்டியார்.

1938-ல் ‘டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் லிமிடெட்’ என்ற குழுமத்தை ஏ.கே.செட்டியார் நிறுவினார். முதலில் இந்தியாவில் காந்தி பற்றிய படப் பதிவுகளைத் திரட்டிய ஏ.கே.செட்டியார், பிறகு வெளிநாடுகளில் தம் தேடலைத் தொடர்ந்தார். இரண்டாம் உலகப் போர் வெடிக்கவிருந்த நெருக்கடியான தருணம் இது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கூடவே, அவர் நிறவெறியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விடுதிகளில் அறை கொடுக்க மறுத்த முதலாளிகள்; பயணச்சீட்டு விற்க மறுத்த கப்பல், ரயில், விமான முகவர்கள்; அவமானப்படுத்திய பணியாளர்கள் – இவர் களைப் புறங்கண்டே ஏ.கே.செட்டியார் தம் பணியை மேற் கொள்ள வேண்டியிருந்தது.

படங்களைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பெரிய விடுதிகளிலேயே ஏ.கே.செட்டியார் முதலில் தங்குவார். காரியம் முடிந்ததும் மலிவான விடுதிக்கு இடம்மாறிவிடுவார். குறைந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு காந்தி படத்தை உருவாக்கிய ஏ.கே.செட்டியார், செலவினங்களில் கறாரான சிக்கனத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்தி ருக்கிறார். செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் அன்றன்றே கணக்கு எழுதியிருக்கிறார். ஹாலிவுட்டில் படத்தைத் தயாரித்து, உலகப் பிரமுகர்களுக்கு அரங்கேற்றக் காட்சியைத் திரையிட்டுவிட்டு, நியூயார்க் புறப்படு முன்னர் வாஷிங்டன் விமான 0நிலையத்தில் படுத்துறங்கியிருக்கிறார்!அந்த ஆவணப்படத்தைப் பலர் அதிகத் தொகைக்குக் கேட்டும் அவர் தரவில்லை. அப்படத்தை இந்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டார் என்பது வரலாற்றுச் செய்தி ஆகும்.

இதழாளராக, எழுத்தாளராக, புகைப்படக் கலைஞராக, ஆவணப்படத் தயாரிப்பாளராக விளங்கி, தமிழகத்துக்குப் பெருமைச் சேர்த்த ஏ.கே.செட்டியார், தமது எழுபத்திரெண்டாவது வயதில், 10.09.1983 ஆம் நாள் சென்னையில் காலமானார். பயண இலக்கிய வரலாற்றின் முன்னோடியான ஏ.கே.செட்டியாரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

– பி.தயாளன்