March 22, 2023

ஹிஜாப் சரியாக அணியாததால் கைதான இளம்பெண் மரணம்!- ஈரானில் கலவரம்!

ரானில் ஹிஜாப் சரியாக அணியாமல் போனதாக சொல்லி போலீஸாரால் பிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான இளம் பெண் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. அங்கு 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்கள் ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் மேற்கு ஈரான் பகுதியான குர்திஸ்தான் பகுதியில் இருந்து தலைநகரில் தெஹ்ரானுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்த பெண் முறையாக ஹிஜாப் அணியாமல் இருந்துள்ள நிலையில், நெறிமுறை காவல்துறையினர் அந்த பெண் வந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்துள்ளனர். இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியாததால் அவரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது அந்த இளம்பெண் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டுசெல்லும் போதும் பெண்ணை காவல்துறை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டு சில மணி நேரத்தில் அந்த பெண் மயங்கி விழுந்ததாகக் கூறி காவலர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் இளம்பெண் கோமாவில் இருப்பதாக கூறியுள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியையைும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பெண் உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக ஈரான் உச்சபட்ச தலைவர் அயோதா அல் காமேனி மற்றும் அதிபர் இப்ராஹிம் ரைசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இளம் பெண் மாஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து நீதிகேட்கும் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது.