நீங்களும், அலெக்சாவும், சாட் ஜிபிடி மென்பொருளும்!

நீங்களும், அலெக்சாவும், சாட் ஜிபிடி மென்பொருளும்!

மீம்களும், வீடியோக்களும் தான் இணையத்தில் பொதுவாக வைரலாகும் என்றாலும், இப்போது அரட்டை மென்பொருள் ஒன்று வைரலாகி பரவலாக கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜிபிடி சாட் (Chat G. P. T.?) தான் அந்த அரட்டை மென்பொருள் என்பதை இதற்குள் நீங்கள் ஊகித்திருக்கலாம்.

சாட் ஜிபிடி பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதால், இந்த பதிவில் நாம் அதன் போட்டியாளர் அல்லது சகாக்களில் ஒருவரான அலெக்சா பற்றி பார்ப்போம். அலெக்சா, அமேசான் நிறுவனத்தின் மெய்நிகர் உதவியாளர் சேவை. கூகுள் உதவியாளர் போல, ஆப்பிளின் சிறி போல, இதுவும் ஒரு டிஜிட்டல் உதவியாளர் சேவை. அடிப்படையில் இவை எல்லாமே சாட் பாட் எனப்படும் அரட்டை மென்பொருள் கீழ் வருகின்றன. இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும், ஜிபிடி சாட் அரட்டை மென்பொருளும் இதே ரகம் தான்.

மேம்பட்ட அரட்டை மென்பொருளான சாட் ஜிபிடிக்கும், அலெசாக்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்றாலும், உரையாடல் முறையில் மனிதர்களுக்கு இயந்திர நுட்பம் பதில் அளிப்பது என்ற வகையில் பொதுவானவை தான்.

எனவே, சாட் ஜிபிடியை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அலெசாக்களை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அலெக்சா செயல்பாடு பற்றி பார்க்கலாம்.

அலெக்சா செயல்படும் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் எழுத வேண்டும் என்பதால், இந்த பதிவில் அலெக்சா பதில்கள் (https://alexaanswers.amazon.com/) பற்றி பார்க்கலாம்.

அலெக்சா மென்பொருளுக்கு நீங்களும், நானும், ஆர்வம் உள்ள இன்னும் பிறரும் உதவுவதற்காக அமேசான் நிறுவனம் துவக்கியுள்ள இணையதளம். இந்த தளத்தில் நீங்கள் அலெக்சாவிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். இந்த பதில்கள் அடிப்படையில் அலெக்சா தனது பதில்களை மேம்படுத்திக்கொள்ளும்.

ஆக, அலெக்சா ஆன்சர்ஸ், கூட்ட அறிவின் அடிப்படையில் செயல்படும் இணையதளம்.

எதற்காக இந்த தளம்?

அலெக்சா போன்ற அரட்டை மென்பொருள்கள் இயந்திர புத்திசாலிகள். கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ப இவை பொருத்தமான பதில்களை வரி வடிவில் அளிக்கும் என்றாலும், இவற்றுக்கு வரம்புகளும் உண்டு.

அலெக்சா பதில் தெரியாமல் விழிக்கும் கேள்விகள் அல்லது தவறாக பதில் சொல்லும் கேள்விகள் ஆயிரமாயிரம். இந்த கேள்விகளுக்கு எல்லாம் தரவுகளை சேகரித்து அதனடிப்படையில் மேம்படுத்துவது ஒரு வகை. மற்றொரு வகை, அலெக்சா தடுமாறும் கேள்விகளுக்கு இணையவாசிகளை பதில் அளிக்க வைத்து அவற்றின் மூலம் அலெக்சா பாடம் படிக்க வைப்பது. அமேசான் ஆன்சர்ஸ் தளம் இந்த நோக்கிலானது.

அலெக்சாவிடம் கேட்கப்படும் கேள்விகள் இந்த தளத்தில் பட்டியலிடப்படுகின்றன. இவற்றுக்கு பதில் தெரிந்த இணையவாசிகள் தங்கள் பதிலை சமர்பிக்கலாம். இவை எல்லாம் அலெக்சாவுக்கான தரவுகளாகும். அடுத்த முறை இந்த கேள்வி அலெக்சாவிடம் கேட்கப்பட்டால், இந்த தரவுகளில் இருந்து எடுத்து பதில் அளிக்கும்.

தவறான பதில்கள் சமர்பிக்கப்படுவதை முறைப்படுத்த, பயனாளிகள் பதிவு செய்து கொண்டு பதில் அளிக்க வேண்டும் என அமேசான் வலியுறுத்துகிறது. மேலும் பதில்களுக்கு புள்ளிகள் அளிக்கப்படும். இந்த புள்ளிகள் பயன்பாளிகளுக்கு ஊக்கமாக அமைவதோடு, பதில்களின் தரத்தை காக்கும் நம்பகத்தன்மைக்கும் வழி வகுக்கும்.

சரி, சாட் ஜிபிடி என்றால் எனும் கேள்வி கூட அல்கெசா பதில்கள் தளத்தில் கேட்கப்படும் பதில் அளிக்கப்பட்டுள்ளன தெரியுமா? – https://alexaanswers.amazon.com/question/4DZwZFNSTX1jkFjLgzHw2p/ref=cbqa_pqd_sim_q

சைபர்சிம்மன்

error: Content is protected !!