October 25, 2021

உ.பி. முதல்வாரானார் – ஆர் எஸ் எஸ் விசுவாசி யோகி ஆதித்யா!

உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா முதல்வராக பதவி ஏற்றிருக்கும் யோகி ஆதித்யா நாத்வுக்கு விஸ்வ இந்து பரிஷத் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது. விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா டெல்லியில் இதை தெரிவித்தார்.

up mar 19a

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யா நாத் முதல்வராக பதவி ஏற்றிருப்பதன் மூலம் நீண்டகால கோரிக்கையான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது நிறைவேறும் என்று பிரவின் தொகாடியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநில துணை முதல்வர்களாக பதவி ஏற்றிருக்கும் கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர்களுக்கும் தொகாடியா தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் ஆதித்யா நாத் தலைமையில் உத்தரப்பிரதேசம் உன்னத நிலையை அடையும். அவர் அயராது உழைத்து மாநிலத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு வருவார். பாரதத்தில் இந்து மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பார்கள். எங்களுடைய ஆதரவு ஆதித்யாவுக்கு எப்போதும் இருக்கும். யோகி தலைமையில் பகவான் ராம் கோயில் கட்டும் நீண்டகால ஆசை விரைவில் நிறைவேறும் என்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகவும் தொகாடியா மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, அமீத் ஷா உள்பட ஏராளமான தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடைசி கட்டமாக கடந்த 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணிக்கை கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. இதில் எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா 312 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. அதைவிட மோசமாக பகுஜன்சமாஜ் கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது.

உ.பி யில் முடிவுகள் கடந்த 11-ம் தேதியே அறிவிக்கப்பட்டபோதிலும் ஒருவார காலமாக பாரதிய ஜனதா முதல்வர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது. ராஜ்நாத் சிங் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் கேசவ பிரசாத் மவுரியா உள்பட பலரின் பெயர் அடிபட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் லக்னோவில் நடைபெற்றது. மத்திய பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் புபேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் யாரும் எதிர்பார்க்காதபடி தீவிர இந்துத்துவா கொள்கையை பின்பற்றும் யோகி ஆதித்யா நாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது. இதில் முதல் அமைச்சர் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள் 3 பேருமே எம்.எல்.ஏ.க்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.