August 13, 2022

சர்வ தேச யோகா தினம் : நாடு முழுவதும் கோலாகலம்!

கடந்த 2015-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் ஒரு மனதாக ஒப்புக் கொண்டு அறிவிக்கப்பட்டதுதான், சர்வதேச யோகா தினம். அதன்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் 5ஆவது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி நாட்டின் பல்வேறு பகுதியில் ஏராளமானோர் யோகாசனம் செய்தனர். டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நூற்றுக்கணக்கானோருடன் இணைந்து ஆசனங்களை செய்தார். பின்னர் உரையாற்றிய குடியரசு தலைவர், ”உலகம் முழுவதும் யோகாசனங்களை செய்பவர்களுக்கு சர்வதேச யோகா தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்திற்கு இந்தியா வழங்கிய பரிசுதான் யோகா. நல்ல உடல்நலத்துடன் வாழ யோகா உதவியாக இருக்கும். ஆகையால், வாழ்க்கையின் ஒரு அங்கமாக அனைவரும் யோகாவை ஏற்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, டில்லியில் உள்ள செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகமும், பிரம்ம குமாரிகளும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகா ஆசனங்களை செய்தார். பின்னர் உரையாற்றிய வெங்கையா நாயுடு,

”அனைவரின் வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளும் அழுத்தங்களும் உள்ளன. இந்த நேரத்தில் யோகா பயிற்சிகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையை நல்வழியில் நடத்தவும் பயனுள்ளதாக அமையும்” என்று கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் மோடி பங்கேற்று உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்; உலகம் முழுவதும் மக்கள் யோகா தினத்தை கொண்டாடி வருகின்றனர். நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா எப்போதுமே இடம் பிடித்து வருகிறது. யோகாவின் பயன்களை அனைவரும் ஒன்றிணைந்து பரப்ப வேண்டும். யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம் யோகா ஆயுள் முழுவதும் கைகொடுக்கும். நம் அன்றாட வாழ்வின் அங்கமாக யோகா மாறி வருகிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும். உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்’ இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து, பல்வேறு யோகாசனங்களையும் பிரதமர் மோடி செய்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மைதானத்தில் 28 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மாநில ஆளுநர் திரெளபதி முர்மு, மாநில முதல்வர் ரகுவர் தாஸ், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் ஸ்ரீபாத் நாயக், மாநில சுகாதார துறை அமைச்சர் ராமசந்திர சந்திரவன்ஷி ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் யோகா பயிற்சி மேற்கொண்டனர். அவர்களுடன் நடிகை தன்ஷிகாவும் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், யோகாவின் மூலம் அனைவரும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்து டன் இருக்க வேண்டும். கவனச்சிதறல் இன்றி கல்வி கற்க மாணவர்களுக்கு யோகா உதவுகிறது. மத,மொழிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக பள்ளிகளில் யோகா கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.மேலும் 13000 பயிற்சியாளர்கள் தயாராக இருக்கின்றனர். யோகா பயிற்சிகாக விரைவில் நிதி ஒதுக்கி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதேபோல், மும்பையில் யோகா குரு பாபா ராம்தேவுடன் இணைந்து முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் யோகாசனம் செய்தார். சிக்கிம் மாநிலம் டோர்ஜிலாவின் மைஸ் 15 டிகிரி குளிரிலும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் செய்தனர்.

அருணாச்சலில் குதிரையில் அமர்ந்தவாறு இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் யோகா செய்தனர். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களுடன் இணைந்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா யோகாசனம் செய்தார். தில்லி ராஜ்பாத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜாவேடகர் உள்ளிட்டோர் யோகாசனம் செய்தனர்.