September 25, 2021

ஆலோசனைக் கூட்டத்தில் நோ ஸ்நாக்ஸ் – ஒன்லி ட்ரை ப்ரூட்ஸ் & எக்ஸட்ரா!- மத்திய அரசு முடிவு!

பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் ‘ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனியால் உடல் நலம் கெடும் என்று பலவித ஆய்வு முடிவுகள் தெரிவித்த நிலையிலும் பலரும் இந்த பழக்கத்தை தவிர்க்க மறந்து விடுகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ஆலோசனை கூட்டங்களின் போது பிஸ்கட்டுகள், நொறுக்குத்தீனிகள் வழங்க கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும் எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்து எடுக்கப்படும் வகைகள்தான் அதிகம்.

‘டெம்ப் பக்கிங்’ என்று சொல்லப்படுகிற மைக்ரோவேவ் போன்ற குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்துச் செய்யப்படும் உணவுகளும் அதிகமாக விற்கப்படுகின்றன. இவற்றில் டிரான்ஸ்ஃபேட் அதிகமாக இருக்கும். தொடர்ச்சியாக, இதுபோன்ற உணவுகளைத் தினமும் சாப்பிட்டு வந்தால், கொழுப்புச்சத்து, இதயநோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு அனைத்து நோய்களையும் உடலுக்குள் வேகமாக கொண்டுவந்து விடும்.

மேலும் ஒரே எண்ணெயை திரும்பத்திரும்பப் பயன்படுத்திச் செய்யும் உணவுகளால் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நாள் ஒன்றுக்கு நம் உடலுக்கு ஐந்து கிராம் உப்புதான் தேவை. சிப்ஸ் போன்ற கொரிக்கும் பண்டங்களால் உப்பின் அளவும் உடலில் அதிகரித்துவிடும்.’

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு முறையை ஊக்குவிகும் நடவடிக்கையாக, ஆலோசனை கூட்டங்களின் போது பிஸ்கட்கள், நொறுக்குத்தீ னிகளுக்கு பதிலாக பேரிச்சம்பழம், வறுத்த கடலை, பாதாம், அக்ரூட் போன்றவைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலன் துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜூன் 19 ஆம் தேதி இந்த சுற்றறிக்கை வெளியானது. உடல் நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவு களையோ, பிஸ்கட் அல்லது நொறுக்குத்தீனிகள் போன்றவற்றையோ கண்டிப்பாக வழங்கக் கூடாது என்றும் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள், “இந்த புதிய நடவடிக்கை எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அமைச்சர் ஒரு மருத்துவர் என்பதால், துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை அவர் நன்கு அறிவார். எனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த முடிவை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வோம்” என்றார்.