எமன் படத்தின் ஒன் லைன் கதை இதுதான்!

எமன் படத்தின் ஒன் லைன் கதை இதுதான்!

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எமன்’. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை, ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். ‘அமரக்காவியம்’ முதல் சமீபத்தில் வெளியான ‘ரம்’ திரைப்படம் வரை, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்து வரும் இந்த ‘எமன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ‘எமன்’ படம் குறித்து அப்படக்குழுவினரின் பத்திரிகயாளர் சந்திப்பு நடந்தது.

eman feb 21

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “இப்படத்திற்காக தான் யாரையும் பின்பற்றவில்லை. கதைக்கு தேவையானதை இயக்குநர் கேட்டதால் அதற்கேற்ப நடித்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்

படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர் பேசும் போது ‘எமன்’ படம் தற்போதைய அரசியல் கண்ணோட்டத்தை மையமாகக் கொண்டு உருவான கதை அல்ல. இப்படத்தின் கதையை பல ஆண்டுக்கு முன்பே தான் எழுதிவிட்டேன். ஒருவன் தான் செய்யும் செயல்களுக்கான கர்ம வினைகளை அதே பிறவியிலேயே அனுபவிப்பான் என்பதை முக்கிய கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கான கதை, வசனங்கள் அனைத்தும் முன்பே எழுதப்பட்டிருந்தாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மக்களை திருப்திபடுத்தும் படியாக ‘எமன்’ இருக்கும். பிச்சைக்காரன் படத்தில் 500, 1000 ரூபாய் ஒழிப்பு வசனம், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அமைந்தது போல் ‘எமன்’ படமும், அதன் வசனங்களும் பெரிய அளவில் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.

தியாகராஜன்பேசும் போது, “சில  வருட கால இடைவேளைக்கு பிறகு  நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’.  எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்” என்று  நடிகர் தியாகராஜன்  தெரிவித்தார்.

நடிகை மியா ஜார்ஜ் பேசுகையில், “இந்த ‘எமன்’ படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று, என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜீவா சங்கர். மற்றொன்று, எப்போதுமே தனித்துவமான தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி. ஜீவா சங்கரோடு நான் இணைந்து பணியாற்றியிருக்கும் இரண்டாவது படம் ‘எமன்’. இந்தப் படத்துக்காக ஜீவா சங்கர் ஸார் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். ‘இப்படியொரு படம் இருக்கு. இதுல ஒரு கேரக்டர். நீதான் நடிக்கணும். ஓகேவா..?’ என்றார். அவர் கேட்டவுடனேயே நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டேன். ‘மார்ச், ஏப்ரல்ல ஷூட்டிங் ஆரம்பிக்கும்’ என்றார். ‘மார்ச்ல நான் ப்ரிதான் ஸார். வேற படம் எதுவும் இல்லை. நடிக்கிறேன்’னு சொன்னேன்.

எனக்கு ‘அமரகாவியம்’ படத்துல மிகப் பெரிய பெயரையே வாங்கிக் கொடுத்தவர் இயக்குநர் ஜீவா ஸார். அதுலேயே அவருடைய டைரக்ஷன் திறமையை நான் பார்த்திருக்கேன். அதுனால எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். அதுக்கப்புறம்தான் இன்னொரு நாள் போன் செஞ்சு 4 மணி நேரமா கதை சொன்னார். சீன் பை சீனாவே சொன்னார். அடுத்தடுத்த காட்சிகள்ல என் போர்ஷன் எப்படியிருக்கும்..? நான் இல்லாத காட்சிகள்ல அடுத்து என்ன நடக்கும்..? திரும்பவும் நான் எப்படி சீனுக்குள்ள வர்றேன்ற மாதிரியெல்லாம் திரைக்கதையை அவ்வளவு அழகா சொன்னார்.

‘அமரகாவியம்’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில்தான் இந்த ‘எமன்’ படத்தில் நான் நடித்திருக்கிறேன். அஞ்சனா என்னும் ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்த படத்தில் நான் முதல்முறையாக சோலோ டான்ஸும் ஆடியிருக்கேன். அந்த பாடல் காட்சி என்னை முற்றிலும் ஒரு மாறுபட்ட மியா ஜார்ஜாக ரசிகர்களுக்கு காண்பிக்கும்.

விஜய் ஆண்டனி ஸாரை பத்தி சொல்லணும்னா அவர் ரொம்ப, ரொம்ப எளிமையான மனிதர். நடிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு, 24 மணி நேரமும் உழைச்சுக்கிட்டே இருக்கார்.. அவரோடு இணைந்து பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி..” என்று தெரிவித்தார்

error: Content is protected !!