October 16, 2021

எமன் ! பாஸா? பெயிலா?- திரை விமர்சனம்

இப்போது இளைஞர்கள் கையில் போய் விட்ட அரசியல் களத்தை கையிலெடுத்து வழக்கமான தமிழ் சினிமாவின் பார்முலாவை அப்படியே ஃபாலோ செய்து அதே நேரத்தில் பார்வையாளர்களை ரிலாக்ஸாக பார்க்க வைக்கும் லாவகத்தனமயுடன் எமன் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஜீவா சங்கர். சாம்பிளுக்கு படத்தில் வரும் “இது சகுனிகளும் சாணக்கியங்களும் ஆடுற ஆட்டம்னு அவனுக்கு புரிய வைக்கனும்.” “எதுத்து நின்னு அழிக்கிறத விட கூட நின்னு முடிக்கிறது தான் புத்திசாலிதனம்” “ அரசியல்லே எதிரே எதிர்லே இருக்க மாட்டேன்.. கூடவேதான் இருப்பான்” என்பது போன்ற டயலாக் படத்தின் ஓட்டத்தை சொல்லி விடுகின்றது.

yeman review feb 25

படம் திருநெல்வேலியில் தொடங்குகிறது. நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் விஜய் ஆண்டனி (தந்தை)க்கு எம்.எல்.ஏ ஆகும் சான்ஸ் கிடைக்கிறது .ஆனால் இது எக்ஸ் எம்.எல்.ஏ.-வின் மகனால் சகிக்க முடியவில்லை. எனவே விஜய் ஆண்டனியின் திருமணத்தில் சாதிப்பிரச்னையைத் தூண்டி அவரைச் சாகடிக்கிறார். குடும்பப் பிரச்னையில் நிகழ்ந்த பரஸ்பர கொலை என்பது போன்ற நாடகத்தை உருவாக்குகிறார். அப்பா விஜய் ஆண்டனி இறந்த சோகத்தில் இவரின் அம்மாவும் அரளி விதையை அரைத்து குடித்து செத்து விட பிறந்த குழந்தை அப்பா + அம்மா- வை இழந்து போனதால் ‘எமன்’ என்ற பெயரில் தாத்தா ஆதரவில் வளர்ந்து தன் தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கும் விதத்தில் வில்லன் உபயோகப்படுத்திய அதே பாணியை தானும் உபயோகப்படுத்தி அந்தப் பாதையின் வழியாக வில்லனை அடைந்து மகன் பழி வாங்குகிறான். எம்.எல்.ஏ-வாகவும் ஆகிறான்.

விஜய் ஆண்டனி -வெளியே சாதுவான தோற்றத்தில் தெரிந்தாலும் சமயம் வரும்போது எதிராளியின் மீது பாயும் விஜய் ஆண்டனியின் வழக்கமான பாத்திர அமைப்பு இந்த திரைக்கதைக்கு உதவுகிறது. ஆனால் இதுவே தொடர்ந்து பலனளிக்கும் என்று உத்திரவாதமில்லை. அவரது தோற்றமும் தோரணைகளும் பாத்திரத்துக்கு ஏற்ப பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சண்டைக்காட்சிகளில் நல்ல முன்னேற்றம். நடனக்காட்சிகளில் சொதப்புகிறார். தந்தை – மகன் என்று இரண்டு பாத்திரத்திலும் விஜய் ஆண்டனி. எந்த வித்தியாசமும் இல்லை. நல்ல வேளையாக அப்பா விஜய் ஆண்டனி பாத்திரம் முதல் சில நிமிடங்களிலேயே சாகடிக்கப்பட்டு விடுவதால் நாம் பிழைத்து விடுகிறோம்.

நாயகனாக முன்னேறி வரும் அதே சமயத்தில், ஓர் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. எந்தப்பாடலும் ரசிக்கும்படியாக இல்லை. திரைக்கதையில் பாடல்களும் அசந்தர்ப்பமான நேரங்களில் வந்து பொறுமையைச் சோதிக்கின்றன. ஆனால் சாமர்த்தியமான பின்னணி இசையின் மூலம் இதைச் சமன் செய்துவிடுகிறார்.

நாயகி மியா ஜார்ஜூக்கு பெரிதாக வாய்ப்பில்லை. படத்திலும் நடிகையாக வரும் இவர் எதிர்கொள்ள நேரும் பாலியல் சீண்டல், சமகால துயரச் சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்துகிறது. இவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் உருவாகும் காதல், கண்ணியத்துடன் அமைந்திருக்கிறது. இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனி, எம்.ஜி.ஆரையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. படம் ஏறத்தாழ அதன் இறுதிப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது ‘அடடே.. எந்தவொரு டூயட்டும் இல்லாமலேயே எடுத்திருக்கிறார்களே’ என்று வியந்துகொண்டிருக்கும் நேரத்தில் பொறுமையைச் சோதிக்கும் ஒரு பாடல் காட்சி சரியாக வந்து நிற்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் தமிழ்த் திரைக்கு வந்திருக்கிறார். ஏறத்தாழ அதே தோற்றத்தில் நீடிக்கும் இளமை ஆச்சரியத்தைத் தருகிறது. தோற்றத்தில் மாற்றமில்லாததைப் போலவே நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. இயக்கி விடப்பட்ட ரோபோ போலவே பேசுகிறார். ஆனாலும் ‘சூப்பராக நடித்திருக்கிறார்’ என்று நிச்சயம் சிலர் பாராட்டுவார்கள்.

அமைச்சர் தங்கபாண்டியனாக நடித்திருப்பவரின் பங்களிப்பு சில இடங்களில் மிகையாக இருந்தாலும் பல காட்சிகளில் கவனிக்கத்தக்க அளவில் சிறப்பாக அமைந்திருந்தது. திருநெல்வேலி வட்டார வழக்கை இயன்ற வரையில் காப்பாற்றியிருக்கிறார். சில காட்சிகளில் வந்தாலும் சார்லியின் நடிப்பு இயல்பு. இது தவிர சங்கிலி முருகன், சுவாமிநாதன், மாரிமுத்து உள்ளிட்ட சிலபல பாத்திரங்கள்.

ஆரம்பத்தில் சொன்னது போல வழக்கமான அரசியல் திரைப்படங்களின் சாயல் இருந்தாலும், இயக்குநர் ஜீவா சங்கர் திரைக்கதையை கையாண்டிருக்கும் வித்தியாசமே இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. தொடக்கக் காட்சியில் வில்லன் பின்பற்றும் அதே சூழ்ச்சியையே நாயகனும் படம் முழுக்கவும் பின்பற்றுகிறான். இறுதிக் காட்சியைத் தவிர அவன் நேரடியாக எவரையும் கொல்வதில்லை. தன்னுடைய எதிரிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் சந்தர்ப்பத்தை மட்டுமே உருவாக்குகிறான். இந்த வித்தியாசமான டிரீட்மெண்ட் கவர்கிறது.

அரசியல் திரைப்படமென்பதால் படம் முழுவதும் எவரையாவது எவராவது துரோகித்துக்கொண்டே இருக்கிறார்கள். முடிவே இல்லாத இந்தத் துரோகத்தின் பாதை ஆயாசத்தை தருகிறது. படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சில சம்பவங்கள், தமிழக அரசியலை நினைவூட்டுகின்றன, அல்லது அரங்கிலுள்ள பார்வையாளர்கள் அவ்வாறுதான் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். பல இடங்களில் வசனங்கள் அபாரமாக அமைந்திருக்கின்றன.

ஒரு திட்டமிட்ட அரசியல் கொலை நடக்கிறது. ஆனால் ஊடகங்களில் அது விபத்தாக பதிவாகிறது. விஜய் ஆண்டனி, அதிர்ச்சியுடன் இது குறித்து கேட்கும் போது ‘சில உண்மைகள் பொய்யாக வெளிப்படும்போது நாமும் அதை பொய்யாகவே நம்பிவிடவேண்டும். அப்போதுதான் மனச்சாட்சி உறுத்தல் இல்லாமல் இருக்கமுடியும்’ என்று தியாகராஜன் பாத்திரம் பதிலளிக்கிறது. இது நம் அரசியல்வாதிகள் பொதுவெளியில் எவ்வாறு சிரித்த முகத்துடன் பொது வெளியில் உலா வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

வெளிப்பார்வைக்கு ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எலியும் பூனையுமாகக் காட்சியளித்தாலும் பலவிதமான உள்பேரங்களில் எவ்வாறு ரகசியக் கூட்டணியாக இணைந்திருக்கிறார்கள் என்பதை சார்லி விளக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது. உண்மையில் இந்த விஷயம்தான் இந்தப் படத்தின் மையம் என்றுகூட சொல்லி விடலாம்.

பல ஆண்டுகாலமாக பின்னிக் கொண்டிருந்த திரைக்கதை இந்தத் திரைப்படத்தின் பலம் என்றாலும் காட்சிகள் உருவாக்கப்பட்ட விதத்தில் சொதப்பல்தான் பளிச்சிடுகின்றன.சகலரும் எதிர்பார்க்கும் விதத்தில் போகும் கதையில் பெரிதாக கொஞ்சமும் ட்விட்ஸ் இல்லை. அது மட்டுமின்றி நடப்பைகளில் நம்பகத்தன்மையும் மிகவும் குறைச்சல். எவ்விதப் பின்புலமும் இல்லாமல் நாயகன் எவ்வாறு தனியாளாக தன் மீதுள்ள சிக்கல்களைச் சமாளிக்கிறான் என்கிற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. அதிலும் தியாகராஜனின் கேரக்டர் பில்ட் அப் மற்றும் ஃபாலோ அஃப் குழப்பத்தைத்தான் கொடுக்கிறது. ஒட்டு மொத்த சம்பவங்களின் மூளைக்காராராக, இருப்பவர் விஜய் ஆண்டனியிடம் கேஷூவலாக தோற்று செத்து போவதும், ஓர் அமைச்சர் அந்தச்தில் இருந்தவரை ஜஸ்ட் லைக் தட் சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு போய் பல நாள் மறைத்து வைத்து தூக்கில் தொங்க விடுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.

மொத்தத்தில் எமன் – அரசியல் என்ற களத்தில் ஒட்டுமொத்தமாக கெட்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற ரீதியில் ஒரே கோட்டில் சிந்தனைய ஓட விட்டு இருப்பது மைனஸ் பாயிண்ட். அதிலும் ஜாதி, குடி, சிகரெட், கத்தி, ரத்தம் என்ற கொஞ்சம் குரூரமான ஸ்கிரின் பிளேக்கு பெயில் மார்க்-தான் கொடுக்க வேண்டும்..ஆனாலும் இக்களத்திற்கு புதுசாக விஜய் ஆண்டனி தொடங்கி வில்லன் ரோல் வரை தங்கள் பங்களிப்பை ஃப்ர்பகெட்டாக கொடுத்திருப்பது பிளஸ் பாயிண்ட்.. அதிலும் அப்பாவித்தனான முகத்துடன் விஜய் ஆண்டனி தொடங்கி தியாகராஜன் மற்றும் சார்லி மூலம் வெளிப்படுத்தும் வசனங்களுக்கு பாஸ் மார்க்குதான் கொடுக்க வேண்டும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எமன்  ஜஸ்ட் பாஸ் .. அவ்வளவே!

மொத்தத்தில் எமன் – ஜஸ்ட் பாஸ் .. அவ்வளவே!