ஜனாதிபதி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா தேர்வு!- யாரிவர்? முழு விபரம்!

நாட்டின் முதல்குடிமகன்  ,குடியரசுத் தலைவர் மற்றும் ஜனாதிபதி என்றழைக்கப்படுபவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். சரத்பவார் தலைமையில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆளும் பா.ஜ.க சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் இறுதிசெய்யப்படாத நிலையில், கடந்த 15-ம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

மம்தா 22 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மம்தா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்கள் பொது வேட்பாளர் தேர்வில் முன்மொழியப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மூவருமே தேர்தலில் போட்டியிட தங்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர். ஆனாலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் , திமுக, திருணாமுல் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட 17 கட்சிகள் அவரை வேட்பாளராக முன்னிறுத்துகிறது. எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்த அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

அது சரி இந்த யஷ்வந்த் சின்ஹா யார்?-

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யஷ்வந்த் சின்ஹா. இவருக்கு வயது 85. ஐ.ஏ.எஸ். அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய நிதித்துறை அமைச்சராகவும், பிரதமர் சந்திர சேகர் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பா.ஜ.க.வில் இருந்து இவர், கடந்த 2018- ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, 2021- ஆம் ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யஷ்வந்த் சின்ஹாவுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியை வழங்கியிருந்தது அக்கட்சி. இவர் நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர்.

பெரிய தேசிய நோக்கத்திற்காக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதாகத் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.