January 29, 2023

கும்பகோணத்தைச் சேர்ந்த பிளேபாய் போட்டோகிராபர் எல். ராமச்சந்திரன்!

இந்த கொரோனாக் காலத்தில் பலர் முடங்கிக் கிடந்தாலும் சிலபலர் தங்கள் பணிகளை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய்சேதுபதி லேட்டஸ்டாக ஒரு போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார். அந்த போட்டோக்கள் அம்புட்டும் அழகு என்ற சொல்லுக்கும் அப்பால் இருக்கிறது..ஒவ்வொரு ஃப்ரேமும் பிரமிக்க வைக்கிறது.. உடனே அந்த போட்டோ ஆல்பத்தை நம்ம கட்டிங் கண்ணையாவுக்கு அனுப்பி இதை எடுத்த போட்டோ கிராபரிடம் பேசி ஒரு ரிப்போர்ட் அனுப்பச் சொன்னேன்..

இதோ கட்டிங் கண்ணையா ரிப்போர்ட்

உலகின் பிரபலமான ‘ப்ளேபாய்’ பத்திரிகையில் வேலை செய்யும் முதல் இந்தியப் புகைப்படக் கலைஞர் இவர். நம்ம கும்பகோணத்தைச் சேர்ந்த இவரின் பெயர் எல்.ராமச்சந்திரன். கலைநுட்பத்துடனான சிறந்த போட்டோக்களை எடுத்ததற்காக ஏகப்பட்ட சர்வதேச விருதுகளை பெற்றவர். இவரின் போட்டோகிராபி அனுபவம் குறித்து விசாரித்த போது

“நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். என் தந்தை லட்சுமணனுக்கு விவசாயம்தான் தொழில். தாயார் அவுடையம்மாள். எனக்கு ஒரு அக்காவும் உண்டு. எனக்குள்ளே இருந்த கலைஞன் முதலில் ஓவியனாகத்தான் வெளிப்பட்டான். தெருக்களில் ஓவியம் தீட்டுபவர்களை பார்த்து, நானும் ஓவியம் வரைந்தேன். பள்ளியில் பாராட்டு கிடைத்தது. அந்த சிறு பருவத்திலே எங்கள் ஊரில் உள்ள நாடகக் குழுக்களோடு இணைந்து அவர்களுக்காக செட்டிங் ஓவியங்களை உருவாக்கினேன். அதற்காக அவர்களோடு பல இடங்களுக்கு பயணப்பட்டேன். என் தந்தைக்கு அது பிடிக்கவில்லை. அதனால் சென்னை வந்தேன் . இப்படி வாழ வழி தெரியாம வர்றவங்களுக்கு என்னவெல்லாம் சவால் இருக்குமோ அத்தனையும் எனக்கும் இருந்தது. வாழ்க்கையை ஓட்டறதுக்காகவே பேனர் ரெடி பண்றது போட்டோ கிராபர்களுக்கு அஸிஸ்டென்டா போறதுனு எல்லா வேலைகளும் செஞ்சேன். அப்பதான் ‘முருகன் இட்லிக் கடை’ ஓனர் மூலமா ஒரு புகைப்படம் எடுக்கற ஆஃபர் வந்துச்சு.

என் வேலைகள் பத்தி அவருக்குத் தெரியும். அவர் கடைக்கு ஃபுட் புராடக்ட் எடுத்துக் கொடுத்தேன். இப்ப வரைக்கும் அந்த ஹோட்டலோட எல்லா கிளைகள்லயும் என் போட்டோஸை பார்க்கலாம். இதைப் பார்த்துட்டு நிறைய கமர்ஷியல், புராடக்ட் ஷூட்னு வர ஆரம்பிச்சது. இப்படியே நம்ம வாழ்க்கை போகக் கூடாதுனு ஒரு மாடலை வெச்சு கிளாமர்… அப்புறம் ஆடையில்லாம ஷூட் செஞ்சேன். அதாவது முகம் தெரியாது. ஆனா, உடலோட மெய்சிலிர்ப்பு போட்டோல அப்படியே தெரியும்! இந்த போட்டோ சர்வதேச அளவுல பல விருதுகளை வாங்கிச்சு” அப்ப்டீன்னார்.

இதை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள பிரபலமான பெண்களின் உள்ளாடை நிறுவனங்களுக்காக, உள்ளாடைகள் மட்டும் அணிந்த மாடல்களை படமெடுத்திருக்கிறார். அப்போது இவருக்கு சிறந்த போட்டோகிராபர் என்ற அங்கீகாரம் கிடைத்துவிட்டாலும், தொடர்ந்து ஒரே மாதிரியாக படம் எடுத்துக்கொண்டிருப்பது ஒருவித அலுப்பை உருவாக்கி யிருக்கிறது.

“என்னை இந்த சமூகம் ஒரு சிறந்த கலைஞனாக ஏற்றுக்கொண்டது. என் மனைவியும் என் தொழிலையும், கலை ஆர்வத்தையும் முழுமையாக புரிந்து கொண்டார். அதனால் இந்த கலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது பற்றி என் மனைவியிடம் பேசினேன். ஆடை களற்ற நிலையில் பெண்களை படம்எடுக்கும் கலை உலக அளவில் வளர்ந்துகொண்டிருப்பதை உணர்ந்தோம். நான் அத்தகைய மாடல்களை படமெடுக்கத் தொடங்கினேன். ஓவியர்கள் நிர்வாண நிஜ மாடல்களை வைத்து எப்படி ஓவியம் உருவாக்குவார்களோ அதுபோன்ற கலை ஈடுபாடுதான் இதுவும். நான் இந்தியாவில் முதன்முதலில் 18 வயது பெண்ணை நிர்வாணமாக படமாக்கினேன். முகம் காட்டாமல் இடுப்புக்கு மேல்- தோளுக்கு கீழ் மார்புகூட தெரியாமல் அதை புதிய கண்ணோட்டத்தில் வித்தியாசமான முறையில் பிளாக் அன்ட் ஒயிட் படமாக எடுத்தேன்.

அந்த பெண்ணின் உடலை புல்லரிக்கவைத்து படம் பிடித்தேன். அந்த பெண்ணின் உடல் புல்லரிப்பது படத்தில் தெளிவாகத் தெரியும். அந்த போட்டோ சிறந்த நிர்வாண படங்களுக்காக சர்வதேச அளவில் வழங்கும் ‘ஐ.பி.ஏ’ விருதினை பெற்றுத் தந்தது. அமெரிக்கா வழங்கும் அந்த விருதை இந்தியாவில் முதன் முதலில் பெற்றது நான்தான். வேறு யாரும் இதுவரை அந்த விருதினை பெறவில்லை. அந்த போட்டோவை ஒரு வெளிநாட்டு நிறுவனம் 8 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதில் ஒரு பகுதி பணத்தை அந்த முகம் காட்டாத இந்திய மாடலுக்கு வழங்கி விட்டேன்.

அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற நினைத்தபோதுதான் பிளேபாய் நிறுவனத்தின் பிரபல போட்டோகிராபர் ஜெர்மோ போஜனமி தொடர்பு கிடைத்தது. அவரது அழைப்பின் பேரில் அமெரிக்காவில் நடந்த பல்வேறு போட்டோகிராபி பயிலரங்குகளில் பங்குபெற்று, நிர்வாண படங்களின் நவீன தொழில் நுட்பங்களை கற்றேன். அங்கு நடந்த பல்வேறு கட்ட பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு பின்னால் என்னை பிளேபாய் பத்திரிகைக்கான இந்திய போட்டோகிராபராக அங்கீகரித்தார்கள். இது எனது கலை உணர்வுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். பிளேபாய் அட்டையில் நான் எடுத்த பிரபலமான அழகிகளின் படங்கள் இடம்பிடித்துக் கொண்டிருக்கின்றன. இதுவரை அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி உள்பட 20 நாடுகளை சேர்ந்த 150 அழகிகளை ஆடையின்றி படம் பிடித்திருக்கிறேன். இந்த கலைத் துறையில் நான் இன்னும் வெகுதூரம் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது..” என்று கூறும் பிளேபாய் போட்டோகிராபர் அடுத்தும் புதுமைகள் செய்யத் தயங்கவில்லை. (கட்டிங் கண்ணையா)

“இந்த கலை ஒரு கடல். நான் இன்னும் கடக்கவேண்டியது வெகுதூரம் இருக்கிறது” என்று அடக்கமாக சொல்லும், எல்.ராமச்சந்திரன் பிரபல நடிகைகள் டாப்ஸி, சுனைனா, சஞ்சனா, சுஜா வாருணீ, பிரதாயினி, ரகுல் ப்ரீத்தி சிங், ரன்யா உட்பட பலரையும் விதவிதமான கோணங்களில் தன் கேமராவால் படம்பிடித்திருக்கிறார். இந்தியாவின் முன்னணி மாடல்கள் பலரையும் விளம்பரங்கள், பேஷன் நிகழ்ச்சிகளுக்காக படமெடுத்திருக்கிறார். இவர் எடுத்த புகைப்படங்கள் பல முன்னணி இதழ்களின் அட்டைகளை அலங்கரித்துள்ளன. அப்பேர்ப்படவர் இப்போ விஜய்சேதுபதியை எடுத்த போட்டோக்கள் கீழே:

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

இந்த எல். ராமச்சந்திரன் சுனிதா தம்பதியரின் மகள் தரன்சியா. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியங்கள் வரைவதில் அதிகம் ஆர்வம். . இவர். மது பிரியர்கள் குடித்துவிட்டு குப்பையில், சாலையில் வீசும் பாட்டில்களில் வண்ண வண்ண ஓவியங்களை வரையத் தொடங்கினார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் எளிமையாகவும் பார்த்தவுடன் பிடிக்கும் அளவிற்கு வண்ண வண்ண நிறங்களில் வித்தியாசமான ஓவியங்களை பாட்டில்களில் தீட்டி அதை விற்பனை செய்து அதிலிருந்த கிடைத்த தொகை ரூ. 25 ஆயிரத்தை கரோனா தடுப்பு நிதிக்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழங்கியுள்ளாராக்கும் .