May 17, 2021

உலகின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் – துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது! – வீடியோ!

இன்றளவும் நம்மில் பலர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் காலடி எடுத்து வைக்காதவர்களாகவே இருக்கிறார்கள். இதற்கு காரணங்கள் பல சொல்லலாம். குறிப்பாக உண்மைத் தமிழன் என்ற நண்பன் சொன்னது போல் பாம்புக்கு பால் வார்ப்பதும் போலீஸுக்கு துணை போவதும் ஒன்றுதான் என்பார்கள். இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல.. உலக மக்களுக்கே பொருத்தமானதுதான். அதிகாரம் இருக்குமிடத்தில் ஆசையும், ஆணவமும் அதிகம் இருக்கு. எப்படியாவது பதவியைப் பயன்படுத்தி சமூகத்தில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நினைப்பதற்கு போலீஸ் அதிகாரிகளும் விதிவிலக்கல்ல. இந்தியா மாதிரியான ஜனநாயகம் என்கிற கேலிக்கூத்தான அரசியல் அமைப்பை வைத்திருக்கும் நாட்டில் காவல்துறையின் ஒட்டு மொத்த பிம்பமும் சிதைந்து போயிருப்பது கண்கூடு.

இதனால்தான் ஒரு கொலையோ, சட்ட விதி மீறலோ.. பொதுமக்கள் புகார் அளிக்கவும், சாட்சியம் அளிக்கவும் முன் வருவதில்லை. சட்டத்திற்குட்பட்டு நடக்கின்ற அதிகாரிகளை பூதக்கண்ணாடி வைத்துதான் தேடி வேண்டியிருக்கிறது.. சட்டத்தை அமல்படுத்த போலீஸுக்கு உதவுபவர்களை பாதுகாக்க காவலர்களே முன் வருவதில்லை என்பதால்தான் காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது.இந்தியாவில் போலீஸ் அமைப்பே ஒரு குறு நில மன்னர்கள் கொண்ட அமைப்பாகத்தான் இருக்கிறது. அதன் அதிகாரிகள் அவரவர் தகுதிக்கேற்ப தாங்கள் கோலோச்சும் பகுதிக்கு சிற்றரசர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கின்ற மரியாதை அரசியல்வாதிகளுக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்குக் கூட கிடைப்பதில்லை. காரணம் இன்னமும் நாம் பயன்படுத்திவரும் உளுத்துப் போன இந்திய அரசியமைப்புச் சட்டம்தான்..!” என்று சொன்னது மட்டுமில்லாமல் போலீஸ் ஸ்டேஷன் செல்லவேண்டுமானால் அந்த ஏரியாவில் யாராவது அரசியல்வாதிகளைக் கூட்டி கொண்டு போவது நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாடிக்கை.அந்த கரவேஷ்டி போலீஸ் ஸ்டேஷன் சென்று, பஞ்சாயத்து செய்து விட்டு, இரண்டு பக்கமும் காசு வாங்கி பையை நிரப்பிக் கொள்வார்கள். இது தமிழகம் முழுவதும் வாடிக்கையாக நடந்து வரும் ஒரு செயல் என்று நினைப்பதும் இன்னொரு காரணம்.

இப்படியான நமக்கான சூழ்நிலை கொஞ்சம் கூட மாறாத நிலையில் உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய இந்த காவல் நிலையத்துக்கு ‘எஸ்.பி.எஸ்.’ (ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் போலீஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் உதவிக்காக தற்போது அங்கு 2 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மக்கள் முழுமையாக இந்த சேவையை பயன்படுத்த தெரிந்துகொண்ட பின் 2 போலீசாரும் அங்கிருந்து திரும்பப்பெறப்படுவார்கள்.

ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக்கிறார்களோ அதற்கான டோக்கனை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் காத்திருப்பு அறையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்படுள்ளது.