November 27, 2022

ஆயுள் காலத்தை கணிக்க வைத்து விடும் நுரையீரல் புற்றுநோய்!

ண்டு தோறும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் புற்றுநோய்களின் பொதுவான வகைகளில் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இப்போது வரை, புற்றுநோய் தோன்றுவதற்கான முக்கிய காரணம் இன்னும் நிச்சயமற்றது. அதே சமயம் நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களுக்கு ஆயுட்காலத்தை 1 வருடத்திற்குள் மருத்துவர்களும் கணிப்பதால் சிகிச்சை அளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.அதையொட்டி மக்களிடையே எச்சரிக்கை ஏற்படுத்த உலகம் முழுவதும் ஆக்ஸ்ட் 1 அன்று நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது

நுரையீரல் புற்றுநோயைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களில் முதலிடத்தில் இருப்பது நுரையீரல் புற்றுநோய் (Lung cancer). இதற்கு முக்கியக் காரணம் புகைப்பழக்கம். நுரையீரல் புற்றுநோய் பெண்களைவிட ஆண்களைத்தான் அதிகம் தாக்கும் என்ற ஒரு கருத்து உள்ளது. முன்பெல்லாம் பெண்களைவிட அதிகமாக ஆண்கள்தாம் வேலைபோன்ற காரணங்களுக்காக வெளியில் அதிகம் செல்வார்கள். சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று மாசு காரணமாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது பெண்கள், ஆண்கள் அனைவருமே படிப்பு, வேலை இன்னும் பிற காரணங்களுக்காக வெளியில் செல்வதால் ஆண், பெண் பாகுபாடின்றி யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணமாக மருத்துவ உலகம் சொல்வது புகைப்பழக்கம். 90 சதவிகித நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் புகை பிடிப்பதால் ஏற்படுகிறது. மேலும் காற்றுமாசு, சிகரெட் புகை, ரேடான் வாயு, மரபியல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவர் மணிக்கணக்கில் புகைத்துக்கொண்டிருந்தாலோ, புகைப்பவரின் அருகில் நின்றுகொண்டிருந்தாலோ சுவாசத்தின் வழியே நுரையீரலுக்குள் செல்லும் சிகரெட் புகை, நுரையீரல் செல்களைப் பாதித்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

மேலும் இது எளிதில் ஏற்படக்கூடிய மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம் என்பதுதான். கவனம்… நாம் வசிக்கும், வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் (Asbestos) கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நுரையீரல் புற்றுநோய் ஏற்பட காற்று மாசும் ஒரு காரணம். அதிலும் மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற உறுப்புக்களை விட, நுரையீரல் நேரடியாக சுவாசிக்கும் காற்றுக்கு தொடர்புடையது. அதாவது நாம் சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வாயிலாக நுரையீரலுக்கு சென்று, பின்னர் மற்ற உறுப்புகளுக்கு ரத்ததின் மூலம் செல்கிறது.எனவே தொற்று கிருமிகள் (பாக்டீரியா, வைரஸ், புஞ்சை), காசநோய் கிருமி, கொரோனா கிருமி போன்றவை நேரடியாக நுரையீரலுக்கு சென்று சுலபமாக நுரையீரல் தொற்றை ஏற்படுத்துகிறது.

இதில், நாம் ஆறுதல் அடையக்கூடிய விஷயம் ஒன்று இருக்கிறது. நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்!

புற்றுநோயின் அறிகுறிகள்…

* தொடர்ச்சியாக தொண்டைவலியோ, உணவை விழுங்கும்போது தீவிரவலியோ ஏற்பட்டால், அது டிஸ்பேகியாவாக (Dysphagia) இருக்கலாம். டிஸ்பேகியா நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது. இது, மிகவும் அபாயமான அறிகுறியும்கூட. புற்றுநோய் தொண்டையிலிருந்து உணவுக்குழாய் வரை பரவும்போது, இதுபோன்ற வலிகள் ஏற்படும்.

* தொடர்ச்சியாக உடல்வலி இருப்பின் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியே. புற்றுநோய் செல்கள் எலும்புகளில் பரவி, அவற்றை வலுவிழக்கச் செய்வதால் வலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

* சிலருக்கு மார்பகத்தில் நீண்ட நேரத்துக்கு மிதமான வலி இருக்கும். சிலருக்கு நுரையீரலைச் சுற்றி கூர்மையான வலி அவ்வப்போது ஏற்படும். இதனுடன் சேர்ந்து முதுகு, தோள்பட்டையிலும் வலி உண்டாகும்.

* திடீரென அசாதாரணமான, அதிகளவு எடை இழப்பு ஏற்படும். பொதுவாகவே உடல் எடை அதிக அளவில் குறைவதென்பது, `உடல் ஆரோக்கியமாக இல்லை’ என்பதைக் குறிக்கும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுவே முக்கிய அறிகுறி. ஏனெனில், புற்றுநோய் உண்டாக்கும் செல்கள், உங்கள் உடம்பில் உள்ள ஆற்றலைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் தேவையின்றி சத்துக்களை வெளியே தள்ளுகின்றன.

* நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் விசில் அடிப்பதுபோன்ற சத்தத்தை உணர்கிறீர்களா? இதற்கு சுவாசப் பாதையிலுள்ள வீக்கம் அல்லது அடைப்பு காரணமாக வரும் மூச்சுத்திணறலே காரணம். பொதுவாக மாசு, அலர்ஜி, தூசியின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் இதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஓர் அறிகுறியே.

* உங்களின் குரல் கரகரப்பாக மாறி இருக்கிறதா? அப்படி என்றால் உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளியுங்கள். அதைச் செய்த பிறகும் உங்கள் குரல் அப்படியே இருந்தால், உடனே மருத்துவரை நாடுங்கள். ஒருவேளை, குரல் வளையில் உள்ள நரம்புகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், உங்கள் குரல் வளையை இது குலைத்துவிடும்; குரல் வளத்தையும் பாதித்துவிடும்.

சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மைத் விலக்கி வைத்திருக்கும். இதன் அறிகுறி தென்பட்டால், கவலைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக இதன் பிடியில் இருந்து விடுபடலாம்.