September 25, 2022

உலக இதய நாள் – செப்டம்பர் 29

ந்த உலகில், முதலிடம் வகிக்கும் உயிர்கொல்லி நோயான “மாரடைப்பு” எனும் கொடிய நோயினால் வருடத்திற்கு 17மில்லியன் மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது உலகத்தின் மொத்த இறப்புகளில் 29% ஆகின்றது. அதிலும் 82% வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளிலும்தான் காணப் படுகிறது.இந்நிலையில்தான் செப்டம்பர் 29-ம தேதியான இன்று உலகம் முழுவதும், ‘இதய நாள்’ இன்று கொண்டாடப்படுகிறது.

உலக இதய நாளின் முக்கிய குறிக்கோளே, ‘மாரடைப்பை’ வரும் முன் காப்பதும், வந்தபின் பூரண குணம் அடையச் செய்வதும்தான். உலகளவில் சிந்தித்து, வீட்டளவில் செயல்பட்டு, ஒவ்வொரு தனி மனிதனும் அவர்தம் இதயத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டால், உலகளவில் மாரடைப்பு அற்ற சமுதாயத்தையே உருவாக்கமுடியும்.

“மாரடைப்பு (heart attack)” எனும் நோயே, தவறான வாழ்கை முறையினால் ஏற்படுவது. எனவே, சீரான வாழ்க்கை முறையினால் மட்டுமே அந்நோயைத் தடுக்க முடியும். வாழ்க்கை முறை என்பதை வரையறுப்பது அவர்தம் மனநிலையேதான்.

எதிர்மறை எண்ணங்களான, கோபம், போட்டி, பொறாமை, ஆவேசம், ஆத்திரம் போன்றவற்றால் மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்விளைவாக வேண்டாத அட்ரினலின், கார்டிசால் போன்ற ஆர்மோன்களை உடலில் அதிகமாகச் சுரக்க வைத்து அவை, இரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் :

ஆவேசத்தையும் , ஆத்திரத்தையும் அதிகமான கொழுப்பு உணவைச் சாப்பிடுவதில் காட்டுவது. உடல் எடை கூடுவது. உடற் பயிற்சியைத் தவிர்ப்பது.

இந்நிலையில் மகிழ்ச்சி என்னும் மாய உணர்வினால் புகை பிடிப்பது , மது அருந்துவது போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது. பதற்றம், உடல் நடுக்கம், அதிக வியர்வை. இதயத் துடிப்பு அதிகரித்தல். இரத்த அழுத்தம் கூடுதல். கல்லீரலில் உற்பத்தியாகும் கெட்ட கொலசுட்ரால் கூடியும் , நல்ல கொலசுட்ரால் குறைந்தும் இரத்தத்தில் கலக்கின்றது. இரத்தச் சர்க்கரை அளவு கூடுதல்.

இவை அனைத்தும், இதய இரத்தக் குழாய்களில் அடைப்பு வருவதற்கும், சுருங்குவதற்கும் காரணமாகி மாரடைப்பை ஏற்படுத்துகிறது. மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை டாக்டரை அணுகி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். யோகா, தியா னம் செய்ய வேண்டும். சத்துள்ள காய்கறிகள், பழங் களை சாப்பிட வேண்டும். அரிசி கோதுமை உணவையும் மற்றும் எண்ணெய், நெய், வறுத்த உணவு பொருட்கள், ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும். இதனை நாம் கடைப்பிடித்தால், இதய நோய் வராமல் தடுக்க முடியும்

அத்துடன் தினமும் அரை மணி நேரமாவது காலார நடை போடுங்கள். சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுதுவதை பெருமளவு குறைத்து விடலாம். பொதுவாக இதயத்தை வலுவாக்கும் உடற்பயிற்சிகளை நடைப்பயிற்சி (walking), மெல்லோட்டம்(jogging), சைக்கிள் பயிற்சி(cycling), நீச்சல் பயிற்சி(swimming) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இவற்றில் உங்கள் வயது, உடல் அமைப்பு, ஓய்வு நேரம்,உடல் ஆற்றல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

குறிப்பாக வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள். இப்படி முறையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, உயரத்திற்கேற்ற உடல் எடை என்று ஆரோக்கியத்தைக் கடைப்பிடித்தால் மாரடைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

அதிலும் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துகொள்ள பழகுங்கள். புத்துணர்வு பெற சிறிது ஓய்வு எடுங்கள். கோபத்தைத் தூக்கியெறியுங்கள் இருதயம் கடைசி வரை ஆரோக்கியமாய் இயங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்ரீவித்யா