உலகின் யங்கஸ்ட் ரிப்போர்ட்டர்!

இன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தை களுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. ”அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்!

அந்த வகையில் 10 வயது நிரம்பிய பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஜான்னா ஜிஹாத் நிருபராக இருக்கிறார். அதுவும் இஸ்ரேல் ஆக்கிர மித்துள்ள பகுதியில், ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகிறார். நபி சலே கிராமத்தைச் சேர்ந்த ஜான்னா, மிக இளம் வயதிலேயே போர் கொடூரங்களை நேரில் கண்டிருக்கிறார்..“தன்னைவிடச் சிறியவனான ஒரு நண்பனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்தபோது, அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனாள் ஜான்னா. அதிலிருந்து மீண்டவள் தன்னுடைய எண்ணங்களை எல்லாம் ஒவ்வொரு இரவிலும் எழுதி வைக்க ஆரம்பித்தாள். அவளுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, அநியாயங்களை அம்பலப்படுத்த விரும்பினாள். 7 வயதில் நிருபராக மாறினாள். என்னுடைய ஐபோனைப் பயன்படுத்தி இஸ்ரேலிய ராணுவம் செய்து வரும் கொடுமைகளை வீடியோவாகவும் படமாகவும் எடுக்கிறாள். சர்வதேச அமைதிப் போராட்டக்காரர்கள், பத்திரிகைகளுக்கு அதை அனுப்பி வைத்து விடுகிறாள். என் மகளை நினைத்து பயப்படவில்லை. ஒரு சின்னக் குழந்தை வன்முறையை எதிர்த்துப் போராடுகிறாள் என்பது இந்த உலகத்துக்கு எவ்வளவு பெரிய பாடம்! என் மகளை நினைத்து பெருமைகொள்கிறேன்” என்கிறார் ஜான்னாவின் தாய் நவால்.

Reporter young

“நான் பார்ப்பதை எல்லாம் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களை மட்டுமே எழுதுவேன், படம் பிடிப்பேன். டிவி, யுடியூப், ஃபேஸ்புக் என்று நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினரின் வன்முறைகளை அம்பலப்படுத்தி வருகிறேன். நான் செய்யும் வேலை மிகவும் ஆபத்தானது. பலமுறை என் வீடு கண்ணீர்ப் புகையால் நிரப்பப்பட்டிருக்கிறது. இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் எங்களுக்கு வாழ்வதற்கு வேறு வாய்ப்புகளே கிடையாது. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும். ஆனால் இதுவா வாழ்க்கை? இங்கே சுதந்திரத்துக்காகப் போராடுவதையே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக நானும் இந்தப் பணியைச் செய்து வருகிறேன்” என்கிறார் ஜான்னா.

2014-ம் ஆண்டு உலகின் மிகச் சிறிய நிருபர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜான்னா. தன் அம்மாவுடன் ஜெருசலம், ஹெப்ரான், நப்லஸ், ஜோர்டான் பகுதிகளுக்கு பயணம் செய்து, அனுபவங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இதழியல் படித்து, சி.என்.என்., ஃபாக்ஸ் நியூஸ் சானல்களில் பணிபுரிய வேண்டும் என்பதே ஜான்னாவின் லட்சியம். ஏனென்றால் பாலஸ்தீன தரப்புச் செய்திகளை ஊடகங்கள் வெளியிட மறுப்பதால், தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் ஜான்னா.

Follow Her:

http://jannajihad.com/
https://www.instagram.com/janna.jihad