சர்வதேச தண்ணீர் தினம்!

சர்வதேச தண்ணீர் தினம்!

னிதன் ஒவ்வொருவரும் உயிர் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்றுதான் தண்ணீர். கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டது போல் முதல் உலக போர் நிலத்திற்காகவும், இரண்டாம் உலக போர் அதிகாரத்திற்காகவும் நடைபெற்றது. மூன்றாம் உலக போர் வருமேயானால் அது தண்ணீருக்கான போராகத்தான் இருக்கும் என்று சொன்னது எப்போது நிஜமாகுமென்றுதான் தெரியவில்லை. ஒரு விஷயம் தெரியுமா? இந்த நீரும், காற்றும் பூமியைத் தவிர வேறு எந்த கோள்களிலும் இல்லை என்று இதுவரை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகும்.

ஆக உலகில் வாழும் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாத அடிப்படை தேவை என்றால் அது தண்ணீர் தான்.நாம் வாழும் பூமியானது சுமார் 70 சதவிகிதம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், வெறும் 2.5 சதவிகிதமே நிலப்பரப்பில் காணப்படுகிறது.இதிலும் முக்கால் வாசி பயன்படுத்த முடியாத அளவில் பனிப்பாறைகளாக துருவ பகுதிகளில் உள்ளன, எஞ்சியுள்ள 0.26 விழுக்காட்டை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் நீர் சாராத இயற்கை நிகழ்வுகளே இல்லை எனலாம். அது போலவே, நீரில்லாமல் எந்த ஒரு தொழிலும் இயங்காது. விவசாயம் (உணவு உற்பத்தி), அன்றாட பயன்பாடு, தொழிற்சாலை ஆகியவற்றிற்கு முறையே 69 சதவீதம், 12 சதவீதம், 19 சதவீதம் நீர் பயன்படுகிறது.

ஆனால் அன்றாடம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வரும் உலக மக்கள் தொகையால் தண்ணீரின் தேவையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அத்துடன் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர், கடலுடன் கலக்கும் மழைநீர் என பலவழிகளில் தண்ணீர் மாசுபடுவதுடன் வீண் விரையமாகிறது.எனவே நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1992ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினத்தை கொண்டாட ஐ.நா சபை முடிவு செய்து நடைமுறைப்படுத்தியும் வருகிறது.

இந்த பூமியில் 80 லட்சத்துக்கு மேலான உயிரினங்கள் வாழ்கின்றன. தாவர உணவை உண்ணும் உயிரினங்கள், மாமிச உணவை உண்ணும் உயிரினங்கள், இருவகை உணவையும் உண்ணும் உயிரினங்கள் என இவை உலகின் 17 வகையான வெவ்வேறு சுற்றுச்சூழலில் வாழ்கின்றன. அப்படி வாழும் எல்லா உயிரினங்களுக்கு தேவைப்படும் நீரையும், அவை உண்ணும் உணவை, உணவுச் சுழற்சியில் வழங்கி வருவதும் நீர். உணவுச் சுழற்சியின் ஆணிவேராகவும், உயிரினங்கள் பெருக்கத்தின் தாயகமாகவும் சுற்றுச்சூழல்கள் இயங்குகின்றன. இவ்வாறு, உணவுச் சுழற்சியில், உலக உயிரினங்களின் உணவுத் தேவையில் தன்னிறைவு அடையச் செய்வதும் நீர்.

நம் மனிதன் வாழ்க்கையை நீர் நிலைகள் இருக்கும் இடங்களிலேயே ஆரம்பித்தான் என்பதை சிந்து சமவெளி நாகரிகம் உறுதிபட தெரிவிக்கிறது. புதிய ஊர்களுக்குச் சென்று அங்குள்ள நீர் நிலைகளில் நீராடும் முன் அந்நீரை சிறிதளவு உட்கொள்ள வேண்டும் எனக் கிராமங்களில் சொல்வார்கள். இத்தனையையும் விட நீர் மிகப்பெரிய மருந்து என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும?. மனிதன் மயக்கமடைந்தால் உடனே நாம் தேடுவது தண்ணீர். அதை தெளித்தவுடன் மயக்கம் தெளிகிறது. ‘தாயை பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பது பழமொழி. உணவருந்தாமல் ஒருவாரம் வாழலாம். ஆனால் நீர் அருந்தாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது.

இச்சூழலில் உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள், தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் இறக்கின்றனர். அதாவது 74 கோடி பேர் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் இல்லாமல் பாதி்க்கப்பட்டுள்ளனர். போர்களில் இறப்பவர்களை விட பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளிலேயே இந்த அவலநிலை இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தனைக்கும் .நீர் என்பது பொதுப்பொருள்,இயற்கை கொடுத்த அரும் கொடை. ஏழை, பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு இல்லாமல் அவர்களுக்கு தேவைப்படும் அளவிற்கு கிடைக்க வேண்டும். ஆனால் இன்று தண்ணீர் பயன்பாட்டிலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.இன்னும் சில காலத்தில் ஒரு பேரல் தண்ணீரானது ஒரு பேரல் ஆயிலை விட மதிப்பு அதிகமாகும் என்று வல்லுநர்கள் பலர் எச்சரிக்கை செய்கிறார்கள்

இதை எப்படி சமாளிக்க போகிறோம்? எதிர்கால சந்ததியினர் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி நம் முன்னே பூதாகரமாக எழுந்து நிற்கிறது. தண்ணீரை சேமிக்க வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு நிச்சயம்!!

அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!