உலக செஞ்சிலுவை தினமின்று!

உலக செஞ்சிலுவை தினமின்று!

‘ ரெட் கிராஸ் சொசைட்டி’ எனப்படும் செஞ்சிலுவைச் சங்கம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு சர்வதேச மனிதநேய அமைப்பு. அதை கவுரவிக்கும் விதமாகவும், அதன் தன்னலமற்ற சேவை பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தி, அதன் மகத்தான சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்துடனும் மே 8-ம் தேதியை ‘சர்வதேச செஞ்சிலுவை தினம்’ ஆக இவ்வுலகம் நினைவுகூர்ந்து கொண்டாடி மகிழ்கிறது.உலக மக்களிடையே மருத்துவம், துயர் துடைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தன்னலமற்ற இந்த செஞ்சிலுவை சங்கத்தை உருவாக்கிய ஹென்றி டுனன்ட்டின் (Henry Dunant) அடிப்படை நோக்கமே, ‘இவ்வுலகில் ஜாதி, மத, இன பேதமின்றி மக்கள் அனைவருக்கும் தன்னலமற்ற சேவையை வழங்க வேண்டும்’ என்பதாகும். அதன்படி இன்றுவரை செஞ்சிலுவை சங்கம் தனது சேவையை செவ்வனே ஆற்றிவருகிறது.

red cross may 8

செஞ்சிலுவை சங்கம் உருவான வரலாறு:ஜெனீவாவில் மக்களிடம் அன்பும் கருணையும் குடிகொண்டிருந்த வர்த்தகர் குடும்பமொன்றில், 1828-ம் ஆண்டு, மே மாதம் 8-ம் தேதி ஹென்றி டுனன்ட் பிறந்தார். தனது பெற்றோரிடமிருந்து கற்ற மனிதநேய அனுபவங்கள் காரணமாக, சிறுபிராயத்தில் இருந்தே பல்வேறு சமூக சேவைகளில் ஆர்வமிக்கவராக விளங்கினார். மற்றவர்கள் படும் வேதனைகளைக் கண்டு வேதனையுற்றார். தங்கள் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனவேதனை அடைந்தார். அங்குள்ள சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார்.பின்னர், தனது இளமை பருவத்தில் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார். 1859-ம் ஆண்டு, ஜூன் 25-ல் அவர் வட இத்தாலிக்கு வியாபார விஷயமாகச் சென்றபோது, அங்கு சோல்பரினோ யுத்தம் நடைபெற்றிருந்தது.

அங்கு ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய படைகளை சேர்ந்த 3 லட்சம் பேர் 16 மாதங்கள் போரிட்டதன் விளைவாக, சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து எத்தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. டுனன்ட், அந்த ஊர் மக்களின் உதவியுடன், போரில் காயம் பட்டோருக்கு எத்தகைய பேதங்களுமின்றி மருத்துவ சிகிச்சை அளித்தார்.1863-ல் போர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மருத்துவ தொண்டர்களை தனியே அடையாளம் காட்டுவதற்காக, வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவை சின்னம் தேர்வு செய்யப்பட்டது.1864-ல் ஐவர் அடங்கிய குழுவொன்றினால் ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்க மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான சட்டங்களே, ஜெனீவா சாசனத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

‘ஒவ்வொரு நாட்டிலும் உள்நாட்டு போர், சுனாமி மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலம் கருதாமல் அனைத்து வகையிலும் உதவ வேண்டும்’ என்பதே செஞ்சிலுவை சங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.1910-ம் ஆண்டு, அக்டோபர் 30-ல் உயிர் நீத்த ஹென்றி டுனன்ட்டின் பிறந்த நாளான மே 8-ம் தேதி, 1948-ம் ஆண்டிலிருந்து தன்னலமற்ற சேவையாற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.1983-ம் ஆண்டு 9 நாடுகளுடன் உருவாக்கப்பட்ட செஞ்சிலுவை சங்க அமைப்பு, இன்று 194 நாடுகளை அங்கத்தினர்களாகக் கொண்டு, உலகம் முழுவதும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தனது அடிப்படை குறிக்கோளை விட்டு விலகாமல் மனித சேவை ஆற்றி வருகிறது.

பரந்துபட்ட இவ்வுலகில் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிப்படையும் மக்களுக்கு மனிதாபிமான நோக்கில் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் ஆகியன சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய தன்னலமற்ற சேவை செய்து வருகிறது.இந்த அமைப்பில் இதுவரை சுமார் 97 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்து சேவை ஆற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.காலப்போக்கில் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறைச் சங்கம் என்பவை பெயரில் வித்தியாசத்தைக் காட்டி நின்றாலும் கூட, அவை இரண்டும் ஒரே நோக்கத்தையே முன்னெடுத்து செல்கின்றன.

குறிப்பாக ஈரான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் சிலுவை எனும் குறியீட்டுக்கும் வார்த்தைப் பதத்துக்கும் பதிலாக, பிறை எனும் குறியீடும் வார்த்தைப் பதமும் செம்பிறை சங்கத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.தற்போது உலக நாடுகளில் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம், தனது தன்னலமற்ற சேவையால் 178 தேசிய கிளைகளுடன் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.சர்வதேச அளவில் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கம் – மனிதாபிமானம், பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுதந்திரத் தன்மை, தொண்டு புரிதல்,மனிதர்களிடையே ஒற்றுமை, சர்வ வியாபகத் தன்மை என்ற 7 முக்கிய கோட்பாடுகளை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினத்தின் பிரதான கருப்பொருளே – இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் யுத்தங்களினாலும், சுனாமி உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும், முரண்பாடுகள் மிக்க பல்வேறு தரப்பினரிடையே நடுநிலை வகித்து, அங்கு சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு உதவுவதுமாகும்.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஸ்தாபகரான ஹென்றி டுனன்ட் பிறந்த தினமான மே மாதம் 8-ம் தேதியைத்தான், உலக மக்கள் அனைவரும் அதன் மனிதநேயத்தை கவுரவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் உலக செஞ்சிலுவை சங்க தினமாக கொண்டாடி வருகிறோம்.

error: Content is protected !!