உலக தபால் தினமின்று!

உலக தபால் தினமின்று!

ர்வதேச அளவில் உலக தபால் தினம் இந்த அக்டோபர் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1874ம் ஆண்டு, இதே நாளில் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ‘சர்வதேச தபால் ஒன்றியம்’ தொடங்கப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில்தான் இந்த உலக தபால் தினம் அனுசரிக்கப்படுகிறது. தபால் எனப்படும் அஞ்சல் சேவை என்பது முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஆண்டாக இது கருதப்படுகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை சங்க இலக்கிய காலங்களிலேயே மயில் விடு தூது, கிளிவிடு தூது, புறா விடுதூது என்றெல்லாம் புகழப்பட்டவை நவீன அஞ்சலின் அஸ்திவாரங்கள் என்பது பெருமைக்குரியது.

தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான தொன்றாகும். இது மனித வாழ்வின் அங்கமாக தற்பொழுதும் விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது நம் தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன!

ஆம்.. இந்த தபால் எனப்படும் அஞ்சல் சேவை நாடு, இனம், மதம், மொழி என்று எண்ணற்ற வேறுபாடுகளை களைந்து, இதயங்களை இணைக்கும் ஒப்பற்ற சேவையாக உள்ளது. அவரவர் பண்பாடு, கலாச்சாரத்திற்கு ஏற்ப மொழிகளை சுமந்து, திசைகள் தோறும் பயணிக்கும் கடிதங்கள், எந்த ஒரு மொழிக்கும் விழியாக இருக்கிறது என்பது அறிஞர்களின் கூற்று. உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டி ஒலிம்பிக் போட்டி கூட கடிதப் பரிமாற்றத்தில் ஏற்ப்பட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாறு சான்று கூறுகின்றது. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் தபால் முறை அவசியமாகின்றது. ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மின்ஷ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.

இன்று வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இ-மெயில் என்று எத்தனையோ நவீனங்கள், நொடிப்பொழுதில் நமது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை, அன்பொழுக வார்த்தைகளை பயன்படுத்தி நட்புகளும், உறவுகளும் முத்து முத்தாய் நமக்கு எழுதிய கடிதங்கள் 3 நாட்கள் கழித்தே கைக்கு வந்து சேர்ந்தது. அதை பிரித்து, படித்து, ரசித்தபோது ஏற்பட்ட பரவசமும், புத்துணர்வும் இப்போது இல்லை என்பதும் உண்மை. ஆம்… அஞ்சல் என்னும் கடிதங்கள் வாழ்வில் அனைத்து தருணங்களிலும் நம்மிடம் வலம் வந்தது. நட்பு, பாசம், கோபம், தாபம், காதல், மோதல் என்று அனைத்தையும் கொட்டித்தீர்க்கும் வடிகாலாகவும் இருந்ததே இதற்கான காரணம்.

இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பார்கள். இன்றைய தகவல்களும் கூட நாளைய சமுதாயத்திற்கான வரலாறாக மாறும் என்ற நம்பிக்கையோடு மீண்டும் கரங்களில் எழுதுகோல் தாங்கி கடிதங்களை தீட்டுவோம். இதன்மூலம் மொழிக்கான விடிவெள்ளியாக இருந்து அதற்கு ஒளியூட்ட இனிய நாளில் உறுதியேற்க வேண்டும் என்கின்றனர் காலம் கடந்தும் கடிதங்களை நேசிக்கும் நமது முன்னோடிகள்.

அடிசினல் ரிப்போர்ட் : அஞ்சல் துறையில் முதலிடம் வகிக்கும் இந்தியா:

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்திய அஞ்சல் துறை 1764இல் துவக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55,333 தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் 89 சதவீதம் கிராமங்களில் உள்ளன. இந்தியா முழுவதும் 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!