February 7, 2023

உலகப் பெருங்கடல்கள் தினம்!

பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி  உலகப் பெருங்கடல்கள் நாள் கடைப் பிடிக்க வேண்டும் என்று, 1992-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு பல நாடுகளில் இந்த தினம், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது. அது முதல் ஆண்டு தோறும் ஜூன் 8-ந் தேதி ‘உலகப் பெருங்கடல் தினம்’ அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நம் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் கடலுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது. கடல் மூலமாகத்தாம் 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது.கடலில் இருந்து ஆவியாகும் நீரே, மேகமாக உருவாகி மழையாகப் பொழிவதாக நாம் படித்திருக்கிறோம். மேலும் துண்டாடப்பட்டுக் கிடக்கும் கண்டங்களை ஒன்றிணைப்பதிலும் இந்த கடல்களின் பங்கு மகத்தானது. இந்த வழியில்தான் பல நாடுகளில் வாணிபம் நடைபெற்று வருகிறது. அதோடு ஒவ்வொரு ஆண்டும், பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவும் கடல் இருக்கிறது. இங்கிருந்து கிடைக்கும் கடல் உயிர்கள்தான், பலரின் அன்றாட உணவாகவும் கூட இருக்கிறது. மேலும் அந்த உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுபவர்களின் வாழ்வாதாரமாகவும் மாறி நிற்கிறது, கடல்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கடல், சில மனித நடவடிக்கையின் காரணமாக குப்பை கிடங்காகவும் மாறிக்கொண்டிருக்கிறது. மருத்துவக் கழிவுகள், எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுவதாக பல தகவல்கள் சொல்கின்றன. பலரின் வாழ்வாதாரமாகவும், பல உயிர்களின் வாழ்விடமாகவும் இருக்கும் கடலை பாதுகாப்பதற்காகவும், அதை கவுரவிக்கும் விதமாகவும்தான் ஆண்டுதோறும் ‘உலகப் பெருங்கடல் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடல் நமக்கு, ஆக்சிஜன், உணவுத் தேவை, மருத்துவப் பொருட்கள், காலநிலை கட்டுப்பாடு மற்றும் பல வளங்களை சேவையாக நமக்கு வழங்கி வருகிறது. அவை அழியாமல் காத்துக் கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை.

கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் பெருங்கடல்கள்தான் மனித வாழ்வுக்கு அடித்தளம். உயிரினமே பெருங் கடல்களில் இருந்து தோன்றியவைதான். பூமிப்பந்தின் 72 சதவிகித பரப் பளவையும், 140 மில்லியன் சதுர மைல்களையும் கொண்டது கடல் நீர்ப்பரப்பு. ஆனால், கடல் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. கடல் மிகப் பெரியதாக இருப்பதும், மிக ஆழமாகஇருப்பதும், எதிர்புறம் உள்ள கரை கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதும்.. இப்படி ஏதோ ஒரு காரணத்தால், கடல்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தோ அதனால் ஏற்படும் சூழல் பாதிப்பு பற்றியோ நாம், பெரிதாக அக்கறை கொள்வதில்லை. முன்னரே சொன்னது போல் நாம் சுவாசிக்கும் துாய காற்றையும், ஊட்டமிகு உணவையும் வழங்கும் கடல்கள், சாதாரண மக்களின் வாழ்வாதாரமாகமட்டுமல்லாமல், உலக நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன. பல நாடுகளுக்குப் பயணிக்க சர்வதேச வர்த்தகப் பாதைகளாகவும் கடல்கள் விளங்கு கின்றன. மக்களைப் பிரித்ததும், சேர்த்ததும் கடல்களே. ஆம்.. உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.

ஆனால் பூமியின் குப்பைத் தொட்டிபோல கடலை பயன்படுத்தத் துவங்கிவிட்டோம். இந்த மனோபாவம் கடந்த 20 ஆண்டுகளாக அதிகரித்தால் கடல் மாசு அதிகரித்து வருகிறது. நெடுங்காலம் அழியாத்தன்மைக் கொண்ட பாலிதீன் குப்பைகள் கடல்களைச் சீரழிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. நேரடியாகக் கடலில் பாலிதீன்குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், கழிவுகள் பெருமளவு கடலில் கலக்கிறது. கடல்களில் மிதக்கும் பாலிதீனின் அளவு நுாறு மில்லியன் மெட்ரிக் டன்னைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற கழிவுகள் கடலே கொஞ்சம் கொஞ்சமாக துண்டாகி சிறிய துணுக்குகளாகின்றன. இந்த பாலிதீன் குப்பைகளை ஆமை போன்ற உயிரினங்கள் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் நாம் உட்கொள்ளும் கடல் உணவு வழியாகவும் நம் உடலுக்குள் புகுந்துவிடுகிறது.

அத்துடன் சரக்குக் கப்பல் போக்குவரத்தின் போது அவற்றில் இருந்து கசியும் பொருள்களும் கடல் சூழலைக் கேள்விக்குறியாக்குகிறது. உலகஅளவில் ஒவ்வோரு ஆண்டும் 706 மில்லியன் காலன் எண்ணெய் கடலில் கலப்பதாக ஓர் அறிக்கை சொல்கிறது. இதில் 50 சதவிகிதம் கரைகளில் ஒதுங்குகிறது. முதலில் கடலின் மேல் மட்டத்தில் பரவும் எண்ணெய் படலம், சில மணி நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு ஊடுருவி, கடல்நீரின் அடர்த்தியையும், தன்மையையும் மாற்றி விடுகிறது. கடலில் பரவும் எண்ணெய் படலத்தால் சூரிய ஒளி கடலின் கீழ் பரப்புக்குச் செல்ல முடியாமல் தடுக்கப் படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு கரையில் ஒதுங்கும் எண்ணெய் படலத்தால் அங்கு வாழும்உயிரினங்களும் பாதிப்புக்குஉள்ளாகின்றன

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு கடல் மாசுபாடு குறித்தும், அதன் தீய விளைவுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.தேவையற்ற விமான, கார் பயணங்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா வகையான சக்திப் பயன்பாட்டையும் குறைக்கலாம். லிப்ட் வேண்டாம் என்று சொல்லி படியேறலாம்.இவற்றின் மூலம் கரியமில வாயு காற்று மண்டலத்தில் கலப்பதைக் குறைத்து, கடல்களின் அழிவை மட்டுப்படுத்தலாம். பயன்படுத்தும் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்வதின் மூலமும், அவை கடலை அடைவதைக் குறைக்கலாம். பொருள் வாங்க கடைக்குச் செல்லும் பொழுது துணிப்பைகளை எடுத்துச் செல்லலாம். கடல் பிரயாணத்தின் போது கப்பலிலிருந்து எதையாவது துாக்கி எறியவேண்டாம். கடற்கரை மகிழ்ச்சி தரும் இடம். எனவே அதனைப் பாதுகாப்பது நம் கடமை. கடற்கரையை விட்டு வெளியேறும் பொழுது இருந்த இடத்தைச் சுத்தப்படுத்திவிட்டுச் செல்வோம்.

நிலவளம் ரெங்கராஜன்