June 28, 2022

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்!

இன்றைய சூழலில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை. சுத்தமான நீரைப் பருக முடியாத நிலை உள்ளது. நீர், நிலம் இவ்விரண்டுமே தனது தன்மையை இழந்து வருகிறது. நீர் நிலைகள் அழிந்தும், வன வளங்கள் அருகியும் வருவதால் நாம் இதுபோன்ற பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.25 ஆண்டுகளில் நாம் அனுபவித்து வந்த இயற்கை வளங்கள், இன்று அருகி வருவதைக் காண்கிறோம். நீர், மணல், வனங்கள், வன உயிர்கள், புல்வெளிகள், தாதுக்கள் என எண்ணற்ற இயற்கை வளங்களை நாம் பெற்றுள்ளோம். மனித இனத்தின் பெருங்கொடை இயற்கை வளங்கள்தான். மனிதன் இயற்கையை சார்ந்தே வாழ்ந்து வருகிறான். எனவேதான், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நம் முன்னோர்கள் அவற்றை தெய்வமாக வழிபட்டனர்.

edit jy 28

இயற்கைக்கு மாறாக அதிகரித்து வரும் நகரமயமாதல், தொழில்மயமாதல், மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற காரணங்களால் மாசுபட்ட நீர் நிலைகள், வறண்ட நீர் நிலைகள் என இயற்கை வளங்கள் அருகி வருகின்றன. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரவருணி போன்ற நதிகள் நாட்டின் உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகப் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கும் தாமிரவருணி நதி, ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளால் மாசுபட்டு வருகிறது. பெருமளவில் மணல் அள்ளப்பட்டதால், தாமிரவருணி நதியில் பாறைகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன. மணல் வளம் குறைந்ததால் நீரின் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

தாமிரவருணி நதியின் போக்கு மாறியதால் பல இடங்களில் ஓடையாக காட்சியளிக்கிறது. நீர் நிலைகளில் மணல் எடுத்தல், வனங்களில் மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற மனிதனின் நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருவது உண்மை.மனித உயிரினம் மட்டும் பெருகி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பிற விலங்கினங்கள், தாவர வகைகள் குறைந்தும், அரிதாகியும் வருகின்றன. பல உயிரினங்கள் அவை இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறியும் முன்பே அழிந்துவிடும் அபாய நிலையில் இருப்பதை உணர முடிகிறது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மொத்த வனங்களின் பரப்பளவு 70,000 லட்சம் ஹெக்டேர். இந்தியாவில் ஆண்டுதோறும் 15 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதி குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், தற்போது 19 சதவீதமாக உள்ளன. தமிழகத்தில் 13 சதவீதக் காடுகள்தான் இருக்கின்றன. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி, சீதோஷ்ண நிலையைச் சமன் செய்கின்றன.

பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருவதற்கு தட்பவெப்ப நிலை மாற்றம்தான் காரணம். அதிகரித்து வரும் வெப்பத்தால் உயிர்த் தாவரங்கள் அழியும் அபாயம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதிகரித்து விட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, இயற்கைப் பாசன முறையிலிருந்து விலகிச் சென்றதன் விளைவு, நிலப் பயன்பாட்டின் மாற்றம், காற்றை மாசுபடுத்தும் எரிபொருள்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கலந்த புகை, பெருமளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர் போன்றவை புவி மண்டலத்தை வெப்பமடையச் செய்கின்றன.

புவி வெப்பம் அதிகரிப்பதால் அதிக வெள்ளப் பெருக்கு, அதேநிலையில் கடும் வறட்சியையும் தருகிறது. தட்பவெப்ப நிலையில் உருவான மாற்றத்தால், போதிய நீர்வளம் இன்றி நீர்வரத்து குறைந்து மிகவும் பாதிப்பைத் தருகிறது. மழை வளம் குறைந்து விட்டது. நதிகள் இன்றைய சூழலில் கழிவுகளைத் தாங்கும் பள்ளமாக மாறி வருவதுதான் வேதனையானது. பெருநகரங்களில் இயங்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நீர் நிலைகளில் கலப்பதால், பிராணவாயு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் பெருமளவு அழியும் சூழல் உள்ளது.

நகர விரிவாக்கம், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் அந்நகரங்களை அடுத்துள்ள கிராமங்களில் பெருமளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால், மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையினங்கள், நிழலில் ஒதுங்கும் விலங்கினங்கள் தங்க இடமின்றி அழிந்துபோகின்றன. மரங்கள் குறைந்ததால் வெப்பம் அதிகரித்து உயிரினங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன. இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டதால் இன்று அளவுக்கு அதிகமான வெப்பத்தை உணருகிறோம்.

இயற்கை வளங்கள், மனிதன் உயிர் வாழ பல அற்புதங்களை நமக்கு அளித்து வருகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான மூலப்பொருள்களையும் இயற்கை தருகிறது. இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று.எனவே, இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவை அழிவதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சா. ஷேக் அப்துல் காதர்