உலக சிங்கங்கள் தினம்!

உலக சிங்கங்கள் தினம்!

ஒரு புலி காப்பாற்றப்படும்போது, அது சராசரியாக வாழும் 40 சதுர கிலோ மீட்டர் காடு மறை முகமாக காப்பாற்றப்படுகிறது. அதனுடன் அதன் இரை விலங்குகள் உயிர் வாழ தேவையான நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சதுர பரப்புள்ள காடுகளின் புல்வெளிகள் காப்பாற்றப்படுகின்றன. இதனால் காடுகளில் பெய்யும் மழையை தாங்கி பிடித்து பல வற்றாத நதிகள் உற்பத்தியாகின்றன.  ஆண்டு தோறும் வலசை போகும் யானைகள் காக்கப்படும்போது, அவைகளின் சாணத்தின் மூலம் காடுகளின் விதைப் பரவல் இயற்கையாய் நடைபெறுகிறது. இது போல பறவைகள், பூச்சிகள் முதல் காடுகளின் ராஜாவான சிங்கங்கள் வரை ஒவ்வொன்றும் தமது பங்குக்கு இயற்கையோடு இயற்கை யாய் இணைந்து வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டுமே இயற்கையை அளவுக்கு அதிகமாய் சுரண்டி பிழைக்கிறது.இப்படி உலகம் முழுவதும் இன்று அருகிக் கொண்டே இருக்கும் காடுகளை காப்பாற்றும் முயற்சி யில் ஒன்றுதான் உலக கானுயிர்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கான சர்வதேச தினங்கள் கொண்டாடப்படுவதன் நோக்கம். அப்படித்தான் உலக புலிகள் தினம், உலக யானைகள் தினம்,  உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆக. 10-ம் தேதி (உலக சிங்கங்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

சிங்கம் என்றாலே அதற்கு தனி மரியாதை உண்டு. பண்டைய கால அரசர்கள் காலத்திலேயே சிம்மம் என்றால் தலைவன் என்றே அர்த்தம். அரசர்கள் அமரும் இடத்துக்கு சிம்மாசனம் என்றும், எதிரிகளுக்கு பயத்து ஏற்படுத்தும்போது, அவன் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்று சிங்கத்தையே நமது மக்கள் அடையாளப்படுத்தி உள்ளனர்.

ஆனால், சமீப பல ஆண்டுகளாக மக்கள் பெருக்கம் காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு, நகரமய மாக்கல் நடைபெற்று வருவதால், சிங்கம் உள்பட வன விலங்குகளும் மனிதர்களால் வேட்டை யாடப்பட்டு வருகிறது. உலகில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை 2 லட்சத்துக்கும் மேல் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை இன்று வெறும் 20 ஆயிரமாக குறைந்துவிட்டது. அவற்றிலும் ஆசிய சிங்கங்கள் 500-க்கும் குறைவாகவே உள்ளன.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க காடுகளில் மட்டுமே சிங்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. பெரும்பாலும், அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில் வாழ்வதையே விரும்பும் சிங்கங்கள், இயற்கையிலேயே கேட்கும் திறன் அதிகம் பெற்றவை. சிங்கங்களின் கர்ஜனை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் என்பது அதன் சிறப்பம்சம். ஆண் சிங்கம் 150 முதல் 250 கிலோ வரையிலும், பெண் சிங்கம் 120 முதல் 150 கிலோ வரையிலும் எடை கொண்டதாக இருக்கும். “வனங்களின் அரசன்” என வர்ணிக்கப்படும் சிங்கங்களைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை வலியுறுத்தும் வகையில், உலக சிங்கங்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது

இது குறித்து கானுயிர் ஆர்வலர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, “இன்றைய கானுயிர்களில் உள்ள பெரிய பாலூட்டிகளின் எண்ணிக்கையை வைத்தே, நமது காடுகளின் வளத்தை எளிதாக கணக்கிட்டு விடலாம். கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இந்தியாவில் 44 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை, கணக்கில்லா வேட்டைகளின் மூலம் இன்று வெறும் 2,226 மட்டுமே உள்ளன. புலிகளைப் போல அல்லாமல், திறந்த வெளியில் வாழப் பழகிய சிங்கங்களுக்கு அவைகளின் வாழ்க்கை முறையே எமனாகிப் போனது. மனிதர்களின் பேராசை களால் தொடர்ந்து சிங்கங்கள் கடுமையான அழிவை சந்தித்தன. பல நூற்றாண்டுகளுக்கு முன் கிழக்கு ஐரோப்பா, பாரசீகம் என்று அழைக்கப்பட்ட ஈரானில் இருந்து ஈராக், பலூசிஸ்தான், இந்தியாவின் மேற்கு, மத்திய பகுதிகள் முழுவதும் பரவி நர்மதை நதிக்கரை வரை வாழ்ந்து வந்த ஆசிய சிங்கங்கள் இன்று வெறும் 500 சதுர மைல் பரப்பளவுள்ள வனப் பகுதியில் முடங்கி கிடக்கின்றன.

முதலாம் நூற்றாண்டு முதல் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் வாழ்ந்த ஆசிய சிங்கங்களின் அழிவுகள் துவங்கி பதினெட்டாம் நூற்றாண்டில் பாரசீகம், மற்றும் இந்தியாவில் ஆங்கிலேயர் களாலும், மன்னர்களாலும் வேட்டையாடி கொன்று குவிக்கப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடையும் வேளையில் ஜுனாகத் நவாப்பின் காப்புக்காடுகளில் மட்டும் ஒரு சில ஆசிய சிங்கங்கள் வாழ்ந்து வந்தன. அவைகளின் சந்ததிகளே இன்று குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் வாழ்கின்றன. 2015 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இவைகளின் எண்ணிக்கை வெறும் 523 மட்டுமே.

அதில் முழு வளர்ச்சி அடைந்த ஆண் சிங்கங்கள் எண்ணிக்கை 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் குட்டிகள் 213 என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதில் வேதனை என்னவென்றால் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சிங்கங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வனப்பகுதிகளுக்கு வெளியே இருக்கிறது என்பதே.” என்றார்கள்

error: Content is protected !!