உலக பட்டினி தினம்!

உலக பட்டினி தினம்!

நம்மில் பெரும்பாலானோர் ஒரு வீட்டில் வசிக்கிறோம். உள்ளங்கையில் உலகைக் கொண்டு வந்து விட்ட மொபைல் போனில் உள்ள ஆப்-பில் ஆர்டர் செய்தால் 3 வேளைகளிலும் உணவு கிடைக்கிறது. அல்லது அம்மா, அக்கா அல்லது மனைவியோ தயார் செய்து பரிமாறுகிறார். அன்று நமக்கு பிடிக்காத ஒரு உணவு பரிமாறப்படுகிறது. வேண்டாவெறுப்பாக கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, உணவின் பெரும்பகுதியை தட்டிலே வைத்து விடுவோம். வீட்டிலும் அதை பெரிதாக கருதுவதில்லை. மிச்ச உணவு குப்பையாகிறது. இது பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சம்பவம்தானே. இதிலென்ன இருக்கிறது என்கிறீர்களா?

விஷயம் இல்லாமலா? உலகத்தில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60% பேர் பெண்கள் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களை விட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்று கூறப்படுகிறது. மொத்தம் 119 பசியால் வாடும் மக்கள் வசிக்கும் நாடுகள் உள்ள பட்டியலில் 100வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கொஞ்சம் விலாவாரியாகச் சொல்வதானால் சர்வதே அளவில் இன்றைய தின நிலவரப்படி சுமார் 85 கோடி பேர் உணவின்றி பட்டினி கிடக்கிறார் களாம். அதாவது 10 பேரில் இருவர் என்ற கணக்கில் பட்டினி கிடக்கின்றனர். தோராயமாக ஆசிய அளவில் 55 கோடி பேர், இந்திய அளவில் 14 கோடி பேர் என்கிறது ஆய்வுக்கணக்கு. இந்தியாவில் மட்டும் கணக்கில் கொண்டால் 12 சதவீதம் பேர் உணவு தேடி பட்டினியாய் அலைகின்றனர். இப்போது சொல்லுங்கள் நீங்கள் தூக்கி எறிந்த உணவு ஒருவரின் அரைவயிற்றுப் பசியையாவது தீர்த்து வைத்திருக்கும் இல்லையா?

அதிலும் இந்த கொரோனா முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இந்த ஆண்டு இறுதியில் இதன் நிலைமை மோசமாகும். 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று உலக உணவு திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி David Beasley தெரிவித்துள்ளார்.

பட்டினியை போக்கும் தீர்வை உலகில் எந்த நாடுகளுமே இதுவரை யோசிக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. சரியான உணவு கிடைக்காமல் உலகில் ஆண்டுதோறும் 72 லட்சம் குழந்தைகள் பலியானதாக கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பட்டினி சாவின் சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதை உலக நாடுகள் வருத்தத்தோடு உற்று நோக்கி வருகின்றன. ஆனாலும், இவற்றை எல்லாம் எப்படி கட்டுப்படுத்துவது? இதற்கான தீர்வுகள் என்ன என்பதை இன்னும் சர்வதேச நாடுகள் தேடிக்கொண்டிருக்கின்றன.

இன்றும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். சோமாலியா நாட்டில் பசியால் பச்சை பாலகன்கள் முதல் பல் விழுந்த முதியவர்கள் வரை இறந்து மடிவதை. பட்டினிச்சாவுகள் தற்போது மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா கண்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவு எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 63வது இடத்திலேயே உள்ளது. இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர் களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முடிவாக, ‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி. ஆனால், இவ்வுலகில் இந்தியா உட்பட பல நாடுகளில் வறுமையால், பட்டினியால் அவதிப்படுவோர் அதிகரித்து வருகின்றனர். முடிந்தவரை நம் வீட்டருகே பசியோடு இருப்பவருக்கு சிறிதளவாவது உணவு தந்து பசியை போக்குவோம். இந்த நிலை இனியாவது மாற வேண்டும். வாழ்கின்ற ஒரு மனிதனின் அன்றாட தேவையான பசியையாவது போக்கும் திட்டத்தை இனியாவது சர்வதேச நாடுகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை பட்டினிச்சாவுகள் குறைய போவதில்லை

error: Content is protected !!