November 27, 2021

பசியில் இருப்பவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்கள்! – ஐ.நா. வேதனை!

டந்த 2011 ஆம் வருஷம் முதல் ஆண்டு தோறும் மே 28 ந்தேதி ‘உலக பசி நாள்’ கடைபிடிக்கப்படுகிறது நம் நாட்டில் தொடர்ந்து வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த நிலையை மாற்றவும் ஆளும் மன்னர்களுக்கு மனம் வந்ததாயில்லை. உலக அளவில் கரோனா தொற்று நோயின் வீரியம் அதிகரித்து வரும் அதே சூழலில், பசியால் துடிதுடிக்கும் மக்களின் அறியப்படாத சாவும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக ஊரடங்கு என்றொரு பூதம் வந்து ஒரு ஆண்டுக்கு மேலாக இருண்டோடி விட்டது. ஆனாலும், இந்த ஊரடங்கை மக்களுக்குப் பயனுள்ளதாக பயன்படுத்தும் அளவிற்கான எந்தத் திட்டமும் மத்திய அரசிடமோ, மாநில அரசிடமோ இல்லாமல், மக்களை அல்லல் பட வைத்திருப்பது வேதனை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சரியான பாதுகாப்பு வசதிகளைக்கூட சரிவர செய்து கொடுக்காததால் தொழிலாளர்களின் நிலை சீரழிந்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஏழை மக்களின் நிலைமை சொல்லொணாத்துயரமாக நிழலாடுகிறது. இப்படி ஊரடங்கு காலத்தில் மக்களை பஞ்சப்பராரிகளாக அலையவைத்திருப்பதுதான் அரசின் சாதனையாக உள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக மக்கள் பட்டினிச் சாவிற்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. உணவு பாதுகாப்பு திட்ட கழகம் எச்சரிக்கை மணி அடித்திருப்பது இன்னும் ஆட்சியாளர்கள் காதில் விழவில்லை என்பதுதான் சோகம்.

இந்நிலையில் உணவு கிடைக்காமல் ஒரு கூட்டமும், உணவு சாப்பிட நேரம் கிடைக்காமல் ஒரு கூட்டமும் சுற்றித் திரிகிறது. உலகில் கடும் நோயினால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்களே அதிகம் என்கிறது ஒரு ஆய்வு. மேலும் உலகத்தில் உணவு கிடைக்காமல் பசியுடன் இருப்பவர்களில் 60 சதம் பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இன்று அனுஷ்டிக்கப் படும் உலக பசி நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உலகின் 18 நாடுகளில் உணவுப் பற்றாக்குறை காரணமாக, மக்கள் பசியால் வாடுவது தெரிய வந்துள்ளது. ஒருமனிதன் நலமாக இருக்க, நாள்தோறும் அவரது உணவின் வாயிலாக 2,100 கலோரி கிடைக்க வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டு சுமார் 77 கோடியாக இருந்த பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை, 2016 ஆம் ஆண்டு 85 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. பசியால் வாடுபவர்கள் பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களே ஆவர். பல்வேறு நாடுகளில் ஏற்படும் போர் மற்றும் வன்முறையால் சொந்த நாட்டை விட்டு வெளியே செல்லும் மக்களே பசிக்கு ஆளாவதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதில், பசி குறியீட்டுட்டு பட்டியலில் உள்ள 117 நாடுகளில், இந்தியா 102 வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 93வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 102 வது இடம் நோக்கி பின்னுக்குச் சென்றுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 66 வது இடத்திலும், வங்காளதேசம் 88 வது இடத்திலும், பாகிஸ்தான் 94 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2030 ஆம் ஆண்டிற்கும் பசி என்ற பிணியை ஒழிக்க பிற நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது.