October 22, 2021

உலக அனஸ்தீஸியா தினம் @ ஈதர் தினம் அல்லது மயக்கவியல் நாள்!

அய்யய்யய்யோ.. வலியாலே உயிர் போகுதே என்று அலறித் துடிப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனல் இந்த வலி இல்லைன்னா நாம் உயிர் வாழவே முடியாது-ங்கறது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆமாமுங்க.. வலி இல்லை என்றால் தூக்கத்திலே நம் கை, கால்களை எலி கடித்துத் தின்றாலும் கூட தெரியாது. அத்தோட அடிபட்ட இடத்திலே வலி இருந்தாதான், அந்தப் பகுதிக்கு மனிதன் ஓய்வு கொடுப்பான், காயமும் வேகமாக ஆறும். ஆனால், இந்த இயற்கை விதி அறுவை சிகிச்சை என்னும் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருந்தது. இயற்கையை வென்ற நிகழ்வான அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து கண்டுபிடிப்பின்போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை தெரிஞ்சிக்கோவாமா?

day oct 16

பொதுவாக ‘வலி’ என்பது நோய்களின் ஒரு அறிகுறியாக மட்டுமே அறியப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவ உலகில், நோயை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் போது அதி பயங்கரமான வலி ஏற்படுவது தவிர்க்க இயலாதது. அந்த வலியை முழுமையாக நீக்க வேண்டும். இல்லையென்றால் நோயாளிக்கு அளவில்லாத துன்பமும்,
மரணமும் கூட சம்பவிக்கலாம் என்பது அறிவியல் உண்மை. அறுவை சிகிச்சை துறைகளில் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் வலி நீக்கியல் அல்லது மயக்கவியல் துறையை சார்ந்த ‘அனஸ்தீசியா’ மருத்துவ நிபுணர்கள்தான்.

அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அளவில்லாத வலியை முழுமையாக நீக்கி, அதே சமயம் வலி நீக்கும் முறைகளினாலோ (மயக்க நிலையினால்), அறுவை சிகிச்சையினாலோ நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல், இதயம், மூளை, சுவாச செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து, அறுவை சிகிச்சை நிபுணர் தன் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுக்கின்றனர்.

கொஞ்சம் விரிவா சொல்லணும்னா 15-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் நோயாளியை 4 பேர் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள மருத்துவர் அதிவேகமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட காலையோ, கையையோ வெட்டிவிடுவதுதான் அறுவை சிகிச்சையாக இருந்து வந்தது. நோயாளியோ அலறித் துடிப்பார். வேதனையைக் குறைப்பதற்காக நாளடைவில் ஆல்கஹால் கொடுத்தார்கள்.

பிறகு, போதைத் தாவரமான ஓபியத்தையும், மாண்ரகோரா என்ற செடியின் கிழங்கு சாறையும் பயன்படுத்தினர். அந்தக் கிழங்கு மனித உருவில் இருந்ததால், அதைப்பறிப்பவர்கள் உயிர் இழந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையும் நிலவியது.

சீனர்களின் டெக்னிக் அக்கு பஞ்சர் (உடலில் சிறு சிறு ஊசிகளை குத்தி வைப்பது). ஆதிகால ரோமன் மற்றும் எகிப்தியர்கள் மந்த்ரேக் எனும் மந்த்ரகோரா செடி வேர். ரொம்ப காலத்துக்கு இது தான் ஐரோப்பாவில் மருத்துவர்களின் வர பிரசாதமா இருந்தது.

பின் கோக்கோ தலைய கடிச்சு சாப்பிடச் சொன்னாங்க. கோக்கோ திரவத்தை புண்ணின் மேல தடவி அறுவை சிகிச்சை செய்தார்கள்.

ராணி விக்டோரியா தனது 7 ஆவது குழந்தை வலி இல்லாம பிறக்கனும்னுசிம்சனைக் கூப்பிட்டு கேட்டுகிட்டாங்க. அவர் குலோரோபார்ம் உபயோகிச்சார். கிறிஸ்தவ மத தலைவர்கள் ‘இது மத கோட்பாட்டுக்கு எதிரானது; பெண்கள் வலியுடன்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என கடுமையாக எதிர்த்தனர்

(1838). ஜார்ஜியா மருத்துவர் கிராஃப்போர்ட் ஈதர் உபயோகப் படுத்தினார் (1842). இதனை சரியாக பயன்படுத்தாததால் அறுவை சிகிச்சையி போது நோயாளி பாதியிலேயே விழிப்பு வந்து சத்தம் போட்ட‍தாக செய்தி யுண்டு.

ஆங்கில விஞ்ஞானி ஹம் ப்ரி டேவி 1801-ல் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இவைகளின் கலவையான நைட்ரஸ் ஆக்சைட் கண்டுபிடிச்சார். இது தான் சிரிப்பூட்டும் வாயு. இத கண்டு பிடிக்கறதுக்குள்ள அதோட பாதிப்புல பல தடவை மயக்கம் போட்டு விழுந்துட்ட‍தா ஒரு செய்தி . அத்துடன் 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்காட்சி ஒன்றில் சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடை ஒருவருக்குப் புகட்டினார்கள். தன்னை மறந்து சிரித்தபடியே மேடையில் இருந்து இறங்கிவந்த அந்த நபர், மேஜையின் மீது இடித்துக்கொண்டார். காலில் ரத்தம் ஒழுகியதை உணராமல் தன் இருக்கையில் அமர்ந்தார். இந்தக் காட்சியைக் கண்ட பல் மருத்துவர் ஹோரஸ் வெல்ஸ், நாம் ஏன் இந்த வாயுவை வலி நீக்கியாக பயன்படுத்தக் கூடாது என்று யோசித்தார். தனக்குத்தானே அந்த வாயுவைக் கொடுத்து, பல்லைப் பிடுங்கிய அவர், மற்றொரு நோயாளிகளுக்கு அதுபோல் செய்தபோது சொதப்பிவிட்டது.

1846-ல் மார்டன் என்ற பல் மருத்துவர், நைட்ரஸ் ஆக்ஸைடுக்குப் பதிலாக ஈதர் என்ற திரவ வாயுவை உபயோகித்து வெற்றி கண்டார். கண்டுபிடித்தது எப்படி?

பல் மருத்துவ மாணவராக இருந்த வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர், வலி நீக்கும் முறைகளில் கொண்ட ஆர்வத்தால் ‘ஈதர்’ என்ற வேதிப் பொருளை ஆவியாக்கி, அதை நோயாளியை முகரும்படி செய்தால் வலியை முழுமையாக நீக்க முடியும் என கண்டறிந்தார். அதை அன்றைய தினம் எல்லோரும் அறியும்படி செயல் முறை விளக்கம் செய்து காட்டினார்.கில்பர்ட் ஆப்பாட் என்ற நோயாளியின் கழுத்திலிருந்த கட்டியை ஜான் காலின்வாரன் என்ற அறுவை சிகிச்சை மருத்துவர், உலகிலேயே முதல் முறையாக எவ்வித வலி, அசைவு, கூச்சல் இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார். இதை பார்த்துக் கொண்டிருந்த பிரபல மருத்துவர்கள் அனைவரும், நோயாளி அசையவில்லை ஆனால், முச்சு விடுகிறார், உயிரோடும் இருக்கிறார் என்று கூறி ஆச்சர்யப்பட்டனர். உலகமே இந்த செய்தியைக் கேட்டு அதிசயித்தது.

இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவி, மிக குறுகிய காலத்திலேயே ‘ஈதர்’ உலகெங்கிலும் பயன்பாட்டிற்கு வந்து, வலியின்றி அறுவை சிகிச்சை நடைபெற முடியும் என்று நிரூபிக்கப்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வை தொடர்ந்து லண்டனில், 1846 டிசம்பர் 19ல் முதன் முறையாக ஈதர் பயன்படுத்தி மயக்க நிலையில் முதல் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்தியாவில் 1847 மார்ச் 23ல் கொல்கத்தாவில் உள்ள இந்தியாவின் முதல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், முதன் முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள் மனிதகுலத்திற்கு பெரும் நன்மை ஏற்பட்ட நாள் இந்த நாள் தான். இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டு தோறும் அக்.,16ல் ‘ஈதர்’ தினமாக கொண்டாடப்படுகிறது. அதுவே இன்று உலக மயக்கவியல் நாளாக (உலக அனஸ்தீஸியா தினமாக -ஈதர் தினம்) கொண்டாடப்படுது.

இப்போது மயக்கவியல் துறை வெகுவாக வளர்ந்துவிட்டது. அறுவைசிகிச்சையின் போது நோயாளியின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தப்போக்கு போன்ற வற்றை எல்லாம் விஞ்ஞானரீதியாக அளவிட்டு கட்டுப்படுத்துகிறார் மயக்கவியல் மருத்துவர். அனைத்தும் அறுவை சிகிச்சை அரங்குக்குள்ளேயே நடப்பதால் அவரின் சிறந்த பணி வெளியில் தெரிவதில்லை. ஆகவே, உங்களில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடந்தால், மயக்கவியல் மருத்துவரை நன்றியோடு நினைத்துக் கொள்ளுங்கள். இந்தத் துறையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அனைத்து முன்னோடிகளுக்கும் ஒரு நன்றியையும் சொல்லிவிடுங்கள்’’ என்றார்