September 18, 2021

இந்திய விமானப் படையில், மூன்று இளம் பெண் விமானிகள்

இந்திய விமானத்துறையில், போர் விமானங்களை இயக்குவதற்கு ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த Avani Chatuvedi, ராஜஸ்தானைச் சேர்ந்த Mohana Singh, பீகாரைச் சேர்ந்த Bhawana Kanth ஆகிய பெண்கள் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்துள்ளனர். இவர்களுக்கு பணியில் சேர்வதற்கான ஆணைகளை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு.மனோகர் பாரிக்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, 3 பெண் விமானிகளும் போர் விமானங்களை இயக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்திய விமானப்படை வரலாற்றில் இதன்மூலம் புதிய சகாப்தம் எழுந்துள்ளது.

women

.நம் விமானப் படையின் வெவ்வேறு துறைகளில், ஏறக்குறைய, 1,500 பெண்கள் பணிபுரிகின்றனர். ஆனால், போர் விமானத்தை இயக்கும் பணியில், இதுவரை ஒரு பெண் கூட நியமிக்கப்பட்டதில்லை. கடந்த, 1991ம் ஆண்டு முதல், ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானங்களை, பெண்கள் இயக்கி வருகின்றனர். ஆனால், போர் விமான இயக்கத்தில் இருந்து, இவர்கள் விலகியே இருந்தனர்.இந்நிலையில், பிரதமர் மோடியும், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரீக்கரும், போர் விமானங்களை இயக்கும் பணியில், பெண்களை நியமிக்க முடிவு செய்தனர். போர் விமானங்களை இயக்குவதில் ஆர்வமுள்ள பெண்களை தேர்வு செய்து, அவர்களுக்கு அனைத்து ரக போர் விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

விமானப் படையில் இணையவுள்ள பெண் விமானிகள் குறித்து, பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் கர்னல் மனீஷ் ஓஜா, “ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகனா சிங், பீஹாரைச் சேர்ந்த பாவனா காந்த் மற்றும் ம.பி.,யைச் சேர்ந்த அவனி சதுர்வேதி ஆகியோருக்கு, டில்லியில் உள்ள, விமானப் படை பள்ளியில், போர் விமான பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்களில், மோகனா சிங்கின் தந்தை விமானப் படையில் பணியாற்றுகிறார். கடந்த மார்ச்சில் பயிற்சியை முடித்த இவர்களுக்கு, ரஷ்யாவின் சுகோய், மிக் – 21 மற்றும் 27 ரக விமானங்கள் மற்றும் பிரான்சின் மிராஜ் – 2000 விமானங்களை இயக்கும் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, அனைத்து பயிற்சிகளையும் முடித்த மூன்று பெண்களும், விமானப் படையில், போர் விமானிகளாக, இன்று, பொறுப்பேற்றனர்.