புகுந்த வீட்டாருக்கு எதிராக வழக்கு – சுப்ரீம் கோர்ட் அதிரடித் தீர்ப்பு!

நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன் மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் கடந்தாண்டு கடைசியில் வெளியான ஆய்வுகள் தெரிவித்திருந்தன. மேலும் பல சம்பவங்கள் நடந்திருந்தாலும் அவை சட்டத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட வில்லை அல்லது கொண்டு வரமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. இதை அடுத்து கணவன் வீட்டாரால் கொடுமைப்படுத்தப்பட்டு விரட்டி விடப்பட்ட பெண்கள் எங்கு வசிக்கிறார்களோ அந்த இடத்தின் அதிகாரத்துக்குட்பட்ட நீதிமன்றத்திலேயே தன் புகுந்த வீட்டாருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

ரூபாலி தேவி என்ற பெண் தன் புகுந்த வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாகவும் வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த அலகாபாத் கோர்ட், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் ஐபிசி சட்டப்பிரிவு 498 ஏவின் கீழ் குடும்ப வன்முறை என்பது தொடர்ச்சியான குற்றம் அல்ல. எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் புகுந்த வீட்டார் வசிக்கும் இடத்தை விட்டு வெளியே வேறு எந்த நீதிமன்றத்திலும் அவர் வழக்கை தொடர முடியாது என்று தெரிவித்தது. மேலும் ரூபாலி தேவி தன் பெற்றோர் வீட்டில் இருந்து புகுந்த வீட்டாருக்கு எதிராக வழக்கு தொடர இயலாது என்றும் கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்தது.

அலகாபாத் ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து ரூபாலி சுப்ரீம்ம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் எங்கு தங்கியிருந்தாலும் அந்த இடத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட நீதிமன்றத்திலேயே புகுந்த வீட்டினருக்கு எதிராக வழக்கு தொடரலாம் என தீர்ப்பளித்தது.

குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் சட்டப்பிரிவு 498 ஏவில் குறிப்பிட்டுள்ள ‘கொடுமை’ என்ற வார்த்தைக்கான அர்த்தத்தில் மனரீதியான பாதிப்புகளும் அடக்கம்.ஒரு பெண்ணுக்கு அவளது கணவர் மற்றும் குடும்பத்தாரால் ஏற்படும் மன உளைச்சல், வீட்டை விட்டு விரட்டப்படுவதால் ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் ஆகியவற்றை இங்கு நாம் உதாசீனப்படுத்த முடியாது.எனவே ஒரு பெண் குடும்ப வன்முறை காரணமாக தன் கணவன் வீட்டில் இருந்து வெளியேறினாலோ அல்லது விரட்டப்பட்டாலோ அவர்கள் எங்கு தங்குகிறார்களோ அந்த இடத்தில் உள்ள நீதிமன்றத்திலேயே தன் புகுந்த வீட்டார் மீது வழக்கு தொடரலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.