முத்தலாக் தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! – அரசாணையும் வெளியானது!

முத்தலாக் தடை சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்! – அரசாணையும் வெளியானது!

பல தரப்பிலும் அதரவும், எதிர்ப்புட ஏற்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் சட்ட முன்வடிவு மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 30.2019) நிறை வேற்றப்பட்டது. ஏற்கனவே இச்சட்ட முன்வடிவு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்ட முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இது குறித்த அரசாணை வெளியிட்ட மத்திய அரசு  முத்தலாக் தடைச் சட்டம், 19-09-2019ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மணமான முஸ்லிம் ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையால், இந்திய இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கை பாழாவதாகக் கூறி பெண்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் ஒரு பெண்மணி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம்’ என தீர்ப்பளித்தது.

இதையடுத்து முத்தலாக் முறைக்கு தடை விதித்து 2017ல் ஓர் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்தை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா கடந்த ஆட்சியின் போது, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது; ஆனால் மாநிலங்களவை யில் பாஜக., கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இது நிறைவேறவில்லை. இதனால் இந்த அவசரச் சட்டம் காலாவதியானது.

இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, இந்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்தார். அதன் படி, ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தச் சட்டம் நாடாளுமன்ற மக்களவை யில் முன் வைக்கப் பட்டது. அதில் நிறைவேறிய சட்ட மசோதா, பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் மாநிலங்களவையிலும் முன்வைக்கப் பட்டது. மாநிலங்கள் அவையில் பாஜக., கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், சில கட்சிகள் வெளிநடப்பு செய்ய, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டது. இதை அடுத்து, இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இது அனுப்பப் பட்டது.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து, இச்சட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் 19.09.2019 முதல் நடைமுறைக்கு வருகிறது. இச்சட்டத்தின் மூலம், மணமான முஸ்லிம் ஆண் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை குற்றமாக கருதப்படும். இவ்வாறு செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!