நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒத்தி வைக்க முடிவு! ஏன் தெரியுமா?
தற்போதைய சூழ்நிலையில் மோடிக்கு எதிரான அலை அதிகமாக வீசுவதை ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் இதை வெளிப்படையாக சொல்லாமல் ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா உட்பட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடப்பதால், நவம்பரில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் 3வது வாரம் வரை நடைபெறும். கடந்தாண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் தாமதமாக டிசம்பர் 15ம் தேதிதான் தொடங்கியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் அடுத்த மாதம் முதல் சட்டப்பேரவை அடுத்தடுத்து நடப்பதால், இந்த ஆண்டும் குளிர் கால கூட்டத் தொடரையும் தள்ளிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான கேபினெட் அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், இந்த தொடரை தொடங்கும் தேதி, நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டீஸ்கரில் நவம்பர் 12, 20ம் தேதிகளில் 2 கட்டங்களாகவும், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் நவம்பர் 28ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானாவுக்கு டிசம்பர் 7ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ம் தேதி நடைபெறுகிறது. இதனால், டிசம்பர் 2 அல்லது 3வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது இந்த தொடரில் ரபேல் ஒப்பந்தம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இப்படி நடந்தால், அது 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், அது தனக்கு பாதகமாக அமையும் என்றும் பாஜக கருதுகிறது. எனவே, கூட்டத் தொடரை அது ஒத்தி வைப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
அதே நேரம், 5 மாநில தேர்தல் பிரசாரங்களில் அரசியல் தலைவர்கள் மும்முரமாக ஈடுபடுவதால், குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதியாக நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடர் மத்திய பாஜக அரசிற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ரஃபேல் ஊழல் உட்பட பல்வேறு பிரசனைகளை காங்கிரஸ் வெளிப்படுத்தி பெரும் பின்னடைவை மோடிக்கு ஏற்படுத்தி வரும் நிலையில் இக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தவும் பாஜக் காய்நகர்த்தி வருகிறது. இதுவும், இந்த கூட்டத்தொடர் ஒத்தி வைப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.