January 18, 2022

விம்பிள்டன் ; ரோஜர் பெடரர் 8வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி சாதனை!

கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டி இன்று நடந்தது. இதில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் குரோஷிய நாட்டை சேர்ந்த மரீன் சிலிச் ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில் ஒரு செட்டை கூட இழக்காமல் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சிலிச்சை வீழ்த்தினார் பெடரர். அதனுடன் விம்பிள்டன் டென்னிசில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதனால் இதுவரை சாதனை பட்டியலில் இருந்து வந்த அமெரிக்க வீரர் பீட் சாம்பிராஸ் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது. அவர் மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்த வருடம் ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தினை வென்றார். அதன்பின் அவர் வெல்லும் 2வது பட்டம் இதுவாகும்.

உலகம் எங்குமுள்ள டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெடரர் (35 வயது, 3வது ரேங்க்) – மரின் சிலிச் (28 வயது, 7வது ரேங்க்) மோதினர். தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

காயம் காரணமாக தடுமாறிய சிலிச், 2வது செட்டில் வலி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடினார். பெடரர் 2வது செட்டை 6-1 என கைப்பற்றி முன்னிலையை அதிகரித்தார். மூன்றாவது செட்டில் சிலிச் கடுமையாகப் போராடிய நிலையில், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த பெடரர் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.

விம்பிள்டனில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் (சாம்ப்ராஸ், ரென்ஷா தலா 7 முறை) மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனைகள் அவரது வசமாகின. இது அவர் வெல்லும் 19வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முழங்கால் மூட்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெடரர், நீண்ட ஓய்வுக்குப் பிறகு நடப்பு சீசனில் 2 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் (ஆஸி. ஓபன், விம்பிள்டன்) பங்கேற்று இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். சாதனை வீரருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.