சீனாவை இந்தியா வீழ்த்துமா?

சீனாவை இந்தியா வீழ்த்துமா?

ஆஃப்கனில் இந்தியர்கள் சிலர் பணயகைதிகளாக பிடிபட்டார்கள். பேச்சுவார்த்தை நடந்தாலும் விடுவிக்கவெல்லாம் முடியாது என்று கூறி பேச்சு வார்த்தைக்கு இஷ்டமிருந்தால் வாருங்கள் என்று தெனாவெட்டாக தலிபான்கள் அழைக்க, இந்தியாவோ 12 மணி நேரம் டைம் கொடுக்கிறோம், அவர்கள் விடுவிக்கப்படாவிட்டால்?!? என்று மட்டும் நிறுத்தியது. 8 மணி நேரம் முடிவதற்குள் அனைவரும் பேரும விடுவிக்கப்பட்டார்கள். கடந்த காலத்தில் நம் விமானம் கடத்தப்பட்டவக்போது நடந்த நிகழ்வுகளுக்கும், இன்றைய இந்தியாவின் நிலைக்கு உள்ள வித்தியாசம் புரிய உதவும்.

உக்ரைன் போர் ஆரம்பித்தபோது உலகமே பற்றி எரியப்போகிறது? உக்ரைனோ அல்லது ரஷ்யாவோ முற்றிலும் அழியப்போகிறது என்ற பல வருணனையாளர்கள் உலகெங்கும் டிபேட்டுகளில் விவாதித்தனர். அதன் ஸ்ருதி சில வாரங்களில் குறைந்தது. இன்று அதுபற்றி துண்டு செய்திகளை கூட பார்க்க முடிவதில்லை. அணு ஆய்தம் இல்லாத உக்ரைன் என்பது ரஷ்யாவின் பலத்திற்கு எதிரே ஒப்பிடக்கூட முடியாத நாடு. அப்படி இருந்தும் 7 மாதங்களாகியும் இன்னும் போர் முடிந்த பாடில்லை அதுவும் உலகத்தின் இரண்டாவது மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட ரஷ்யாவால் முடியவில்லை.

ஆஃப்கானிஸ்தானில் பல ஆண்டுகள் அமெரிக்க படைகள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும், தங்களது முழு ஆயுதங்களை கூட திரும்ப எடுத்துச்செல்லும் திறன் இல்லாமல் அமெரிக்க படைகள் ஒப்பந்தத்தில் ஓடியது. அதுவரை தலிபான்களை தடுத்த அமெரிக்காவால், அடுத்த நாளே ஆஃப்கன் தலிபான்கள் கைவசம் போனதை தடுக்க முடியவில்லை. இது இங்கு மட்டுமா? ஈராக், லிபியா, சிரியா என்று எங்கும் போர்களின் மூலம் எந்தவொரு நாட்டையும் முழுதாக வெல்ல முடியவில்லை, அதிக பட்சம் அதன் மக்களை சேதப்படுததவோ, பொருளாதாரத்தை காயப்படுத்த மட்டுமே முடிந்தது. எந்த தீர்வும் வல்லரசு அமெரிக்காவால் கொடுக்க முடியவில்லை..

ஆண்டாண்டு காலமாக விடுதலை புலிகளுடன் போர் புரிந்து சமாளித்த இலங்கை, அந்த போரை இந்தியா புலிகளுக்கு ஆதரவு தொடர்ந்து செய்திருந்தால் அதுவ இன்றும் முடியப்போவதில்லை. ஆனால் அந்த அரசு போரில் வென்றாலும் அதன் வீழ்ச்சியை ஒரு தவறுதலான ஆட்சியால் வீழ்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. போரில் முடியாதது பொருளாதாரத்தால் முடிந்தது. இன்று மட்டுமல்ல அமெரிக்க-சோவியத் யூனியன் போரில் ஒரு புல்லட் கூட நேருக்கு நேராக தாக்காமல், சோவியத் யூனியன் எப்படி வீழ்ந்தது?

அமெரிக்கா எந்த தாக்குதலையும் செய்யவில்லை. தன் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு ஆயுத போட்டியை சோவியத் யூனியனுடன் தீவிர படுத்தியது. அதன் பொருளாதாரம் வீழ்வதை பார்க்காமல், ஆயுத போட்டியில் தன் நாட்டு மக்களை ஒரு பாக்கெட் ரொட்டிக்கும், பாலுக்கும் கூட மணி கணக்கில் காத்திருக்க செய்த சோவியத் யூனியன், அதுவாக துண்டு துண்டாக சிதறியது. அமெரிக்கா செய்தது தன்னை காத்துக்கொண்டு காத்திருந்தது மட்டுமே!

உங்களுக்கு இது இன்னொரு புரிதலை தூண்டியிருக்க வேண்டும். ஆம், இந்தியா பயன்படுத்தியது அதே சூட்சுமம், அதே ஆயுதம் பொருளாதாரம். ஒரு நாட்டை ஆய்தத்தால வெல்ல முடியாது, ஆனால் பொருளாதாரத்தால் நாசமாக்க முடியும். அதற்கு திட்ட மிடவேண்டும், காத்திருக்க வேண்டும். இந்திய 8 ஆண்டுகள் பாகிஸ்தானை வீழ்த்த காத்திருக்க வேண்டியிருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த போது பாகிஸ்தானின் நிலை என்ன? இன்றைய நிலை என்ன? எப்படி இது சாத்தியமானது? இந்தியாவை பாகிஸ்தான், சீனா. சவூதி, துருக்கி என்ற நான்கு நாடுகள் சேர்ந்து தாக்கினாலும் தாங்கும் திறனைப்பெற இந்திய அரசு ஆய்த பலத்தை பெருக்கியது. மறுபக்கம் உலகம் முழுவதும் பயணித்து உற்ற நண்பர்களை தன்னிடன் சேர்த்துக்கொண்டது. இதன் மறுபக்கம் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை ராஜ தந்திரங்களால் தட்டி நொறுக்கியது. (விரிவாக அறிய: கமெண்டில் உள்ள லிங் பார்க்க) அதனை நட்பு நாடுகளிடம் இருந்து சாதுர்யமான நகர்த்தலால் சத்தமில்லாமல் அஹிம்சா வழியில் பிரித்தது.

இன்று பாகிஸ்தான் அதலபாதாளத்தில், முன்பே அன்றாட தேவைக்கு கூட மற்ற நாடுகளிடம் கையேந்திய பாகிஸ்தானுக்கு, கடும் வெள்ளத்தில் சூழ்ந்தபோது தன் மக்களுக்கு எந்த உதவியையும் செய்ய முடியாமல் பிச்சை எடுக்கும் நிலையில் அந்த நாடு சுருங்கிவிட்டது. மத ரீதியில் உயிரையே கொடுக்கும் என்று சொன்ன இஸ்லாமிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்று ஒதுங்கிக்கொண்டபோது பாகிஸ்தானுக்கு புரிந்தது, பிச்சை எடுக்கக்கூட ஒரு தகுதி இருக்க வேண்டுமென்று! இது இன்னொரு கேள்வியை எழுப்பியிருக்கும்! ஆம், பாகிஸ்தானை வேண்டுமானால் வீழ்த்தலாம், ஆனால் நாற்பது ஆண்டுகளாக உலகத்தின் சிறந்த பொருளாதார சக்தியான சீனாவை வீழ்த்த முடியுமா?

நீங்க ரொம்ப லேட்டு, வீழ்த்த ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆம் உலக நாடுகள் என்ன விலை கொடுத்தும் தடுப்பூசி வாங்க தயாராக இருந்த வேளையில், சீனாவின் தடுப்பூசியை வாங்க நாதியில்லாமல் போனபோதே அது துவங்கிவிட்டது. அந்த நிலையில் உலகம் முழுவதும் காசு கொடுத்து இந்திய தடுப்பூசிகளை வாங்க தயாராக இருந்தது, ஆனால் இந்தியா அதை இலவசமாக கொடுத்து நம்பிக்கையை வாங்கியது. விதைத்தது ஆழமானதொரு நட்பையும், மனிதாபிமானத்தையும் மட்டுமே! ஆனால் சீனாவின் தடுப்பூசி அதன் தரத்தில் வேலை செய்வதால், உலகமே ஊரடங்கில் இருந்து வெளிவந்தும், சீனா சிக்கித்தவித்து சின்னாபின்னம் ஆகிவிட்டது.

அது ஒவ்வொரு உற்பத்தி பொருளாக சீனாவின் ஆதிக்கம் தளர்கிறது. மொபைல் போனில் சீனா இல்லாவிட்டால் உலகமே இயங்க முடியாது என்ற நிலைமாறி, இன்று இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்திக்கூடம் ஆகிவிட்டது. I-Phone முதல் பல நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது மட்டுமில்லாமல் சீனாவில் மூடவும் துவங்கி விட்டது. ரஃபேல் போர் விமானத்தை விட உயர்ந்தது என்று சொல்லப்பட்ட J10 விமானங்களை கால்வாசி விலைக்கு கொடுக்க முன்வந்தும் வாங்க தயாரில்லாதபோது, இந்தியாவின் தயாரிப்பான Tejas இலகுரக போர் விமானத்தை 10 மில்லியன் அதிகம் கொடுத்து வாங்க ஏன் மற்ற நாடுகள் முன்வரவேண்டும்? நம்பில்கை. ஆம் சீனா மீதான நம்பிக்கை தவிடு பொடியாகிவிட்டது. அதன் நம்பத்தன்மை என்பது அதனிடம் கடன் வாங்கிய நாடுகளிடம் கூட இன்று கேள்விக் குறியாகிவிட்டது.

இந்த சூழலை தோற்றுவித்தன் மூலம் இந்தியா, சீனாவை முதல் ரவுண்டில் ஏற்கனவெ வீழ்த்திவிட்டது. பாகிஸ்தானை போன்ற ஒரு நாட்டை போல சீனாவை வென்றுவிட முடியாது என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறு. ஏனெனில், ஒரு ஏழைக்குடும்பம் வறுமையால் வீழ்ந்தால் அதன் சரிவு அத்யாவசிய தேவைகளை மட்டுமெ சார்ந்திருப்பதால் மெதுவாகத்தான் இருக்கும். ஆனால் வசதியாக வாழ்ந்த பணக்காரன் வீழ்ச்சி வேகமானதாக இருக்கும். ஏனெனில் அவன் தன்னை ஒரு பக்கம் பணக்காரனாகவும், வீராதி வீரனாகவும் காட்டிக்கொள்ள, இருக்கும் தேவைக்கதிகமான ராணுவம் போன்றவற்றிற்கு தவிர்க்க முடியாமல் வீண் செலவுகளை செய்யாமல் இருக்க முடியாது.

மறுபுறம் தனக்கு ரெண்டு கண்ணு போனாலும் சரி என, தனது போட்டியாளர்களை வீழ்த்த சுய சிந்தனை இழந்து துடிப்பான். அதுவே அவன் வீழ்ச்சியை துரிதப்படுத்தி விரைவில் வீழ்த்திவிடும். எனவே ஆஃப்கானிஸ்தானையும், உக்ரைனையும் வல்லரசுகளாலேயே வெல்ல முடியாத போது இந்தியாவை சீனாவோ, சீனாவை இந்தியாவோ நேரடியாக போரில் ஒருபோதும் வெல்ல முடியாது. ஆனால் யுக்தியால் அதன் அடிப்படையான பொருளாதாரத்தை ஆயுதமாக்கி வெல்ல முடியும்! பொருளாதாரத்தால் வளர்ந்த சீனாவின் வீழ்ச்சி. அதிலேயே தொடங்கி விட்டது!

கெடுவான் கேடு நினைப்பான்!

மரு. தெய்வசிகாமணி

error: Content is protected !!