July 29, 2021

என்னது ? கோவிட் 19ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரிசு பாக்கியம் கம்மியா?

சீனாவில் ஒரு பெரிய நகரத்தில் சாதாரண காய்ச்சலாக உருவெடுத்து வெளியான கோவிட்-19 (கொரோனா) வைரஸ் காய்ச்சல் இப்பொழுது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சாவு எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டிவிட்டது. காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டி விட்டது. கோவிட்-19 வைரஸ் முதலில் தோன்றிய சீனாவின் நகரம் வைரஸின் பாதிப்பிலிருந்து விடுபட்டு இயல்பான நிலைக்கு திரும்பி விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது மிகவும் மேலோட்டமான அமைதி என்றுதான் தோன்றுகிறது.

வைரஸ் பாதிப்புக்கு ஆளான சீன ஆண்பெண்களின் ரத்த மாதிரிகளை பல்லாயிரக்கணக்கான கோணங்களில் சீன மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ஆய்வு புதிது புதிதான கோணங்களில் கோவிட்-19 வைரஸின் பாதிப்புக்களை வெளியிட்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் ஒன்று பேரிடி போல உலக மக்களை பாதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொடர்பாக பல இடங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன அப்படி ஆய்வு நடக்கும் இடங்களில் 2 இடங்கள் மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்கவை:

1. வு கான் பல்கலைக்கழக ஜோங்நான் மருத்துவமனை.

2. கருத்தரிப்பு மற்றும் மகப்பேறு பிறப்பு ஆரோக்கியம் தொடர்பான கிளினிகல் ரிசர்ச் மையம்.

இந்த இரண்டு இடங்களிலும் உள்ள ஆராய்ச்சி நிபுணர்கள் கோவிட்-19 வைரஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்ட எண்பது சீனர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள்.

அந்த எண்பது சீனர்களும் 20 வயது முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் 80 பேரும் இயல்பான இனவிருத்தித் திறன் உடையவர்கள்.

இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது .

இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை செய்யப்பட்டவர்கள். மருத்துவமனையில் இருந்த காலத்தில் இவர்களின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

அதுமட்டுமல்ல இந்த 80 பேரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் காலத்தில் மீண்டும் ஒருமுறை ரத்தம் இவர்களிடம் இருந்து சேகரிக்கப் பட்டது. இந்த 80 பேருடைய சராசரி வயது 38 ஆகும். இந்த 80 பேருக்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு மிக கடுமையாக இருந்ததாகக் கூற முடியாது. மிகவும் இலேசான தொற்று அறிகுறிகள் தான் இருந்தன என்று மருத்துவர்கள் தங்கள் குறிப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களுடைய ரத்த மாதிரிகளை பயன்படுத்தி பல்வேறு வகையான சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படை யில் பல்வேறு விளக்கங்களும் கருத்துக்களும் இப்பொழுது புதிதாக உருவாக்கப்பட்டு ஒப்பீடு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வுகளில் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பொழுது சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளும் பெரிதளவு பயன்படுத்தப் படுகின்றன.

இந்த சோதனைகளில் பொதுவான கருத்து ஒன்றை சீன ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

புதிய கண்டுபிடிப்புகள்

ஆண் பாலின ஹார்மோனை ஆங்கிலத்தில் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்று கூறுவார்கள். இந்த டெஸ்டோஸ்டிரோனுக்கும் எல்லா உடல்களிலும் உள்ள லூட்டினைசிங் ஹார்மோன் (luteinis ing hormone) என்ற மற்றொரு இனவிருத்தி ஹார்மோனுக்கும் இடையே உள்ள விகிதாச்சார அளவு இனவிருத்தி மருத்துவத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

எவ்வளவு குறைவு?

இந்த விகிதாச்சார அளவுகளில் முக்கியத்துவம் என்ன? டெஸ்டோஸ்டிரோனுக்கும் லூட்டினைசிங் ஹார்மோன் அளவுக்கும் இடையே உள்ள விகிதாச்சார அளவு ஒரு ஆணின் இனவிருத்தி உறுப்பு கள் எந்த அளவுக்கு திறனுடன் இயங்குகின்றன என்பதை காட்டுவதாக மருத்துவ வரலாறு கூறுகிறது.

இந்த விகிதாச்சார அளவை டி /எல் எச் (T/LH) என்று குறிப்பிடுவது மருத்துவ மரபாகும். இந்த டி /எல் எச் அளவு குறைவாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஹைபொகோனடிஸம் ( Hypogonadism ) என்ற வியாதி இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஹைபொ கோனடிஸம் என்றால் ஆணின் விந்தணுக்களை உற்பத்தி செய்யக்கூடிய விதைப்பைகள் முறையாக இயங்கவில்லை என கூறலாம் அதனால் ஆண் ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட வாய்ப்புள்ளது. வேறு காரணங்களினால் கூட விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும் என மருத்துவ ஆய்வு ஆய்வுகளும் ஆவணங்களும் தெளிவுபடுத்துகின்றன. இயல்பான இனவிருத்தி திறன் உள்ள ஆண் ஒருவரின் டி /எல் எச் அளவு 1.8 முதல் 8.6 வரை இருக்கலாம். ஆனால் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்ட எண்பது சீனர்களின் டி /எல் எச் விகிதாச்சார அளவு 0.74 மட்டுமே இருந்தது. இது இயல்பான குறைந்தபட்ச அளவை விட 50 % குறைவானது.

டெஸ்டோஸ்டிரோன் முக்கியமான ஆண் பாலின ஹார்மோன் ஆகும். இது ஆண்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பாலின பண்புகளின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகின்றது. தசை ,எலும்பு திண்மை, உடலில் முடி வளர்ச்சி ஆகியவற்றின் இயல்பான வளர்ச்சிக்கும் டெஸ்டோஸ் டிரோன் தேவையாகும்.

ஆனால் லூட்டினைசிங் ஹார்மோன் ஆண் பெண் இருபாலரிடமும் காணப்படுகிறது. பெண் களின் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை விடுவிப்பு ஆகியவற்றை தூண்டும் பணியில் முக்கிய பங்கு வகிப்பது லூட்டினைசிங் ஹார்மோன் தான். இதே லூட்டினைசிங் ஹார்மோன் ஆண்களின் உடலில், விதைப்பையில் உள்ள லெய்டிக் செல்களின் உதவியால் விந்தணுக்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

எனவே டி /எல் எச் விகிதாச்சார அளவு என்பது இனவிருத்தி பணியில் முக்கியமான பங்கு வகிக்கும் ஹார்மோன்கள் உடலில் எந்த நிலையில் உள்ளன? எப்படி இயங்குகின்றன என்பதைக காட்டுகிறது. இந்த இரண்டு ஹார்மோன்களையும் நமது மூக்குக்கு பின்புறம் உள்ள பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பி நேரடியாக ரத்தத்தில் சுரந்து கலந்துவிடுகிறது.

டி /எல்.எச். அளவு குறைந்தால் ஆண்களின் விதைபைகளின் இயக்கம் உயிரணு உற்பத்தி, இன விருத்தி உறுப்பின் விரைப்பு தன்மை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது எனலாம். ஆண் மலட்டுத்தன்மை என்று கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் ஆண்கள் உளவியல் ரீதியில் கடுமையான பாதிப்புக்கு இலக்காவார்கள்.

சிகிச்சை

இந்த வியாதியை இயல்பான டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் சிகிச்சை மூலம் போக்கிவிடலாம் என்று பழைய மருத்துவ சிகிச்சை முறைகளும் நிபுணர்களும் தெரிவிக்கின்றார்கள். ஆனால் கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட இந்த குறைபாட்டை பழைய மருந்துகள் மூலம் போக்க முடியுமா என்பது ஆய்வுகளின் மூலம் தான் உறுதி செய்ய முடியும்.

சீனாவில் கோவிட்-19 வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் இளவயதினர். ஆண்களும் பெண்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்களின் இன விருத்தித் திறன் பாதிக்கப்படுவது போல பெண்களின் கருத்தரிப்புத் திறன் பாதிக்கப்படுமா? சீன ஆண்கள் மீதான பாதிப்பு குறித்து தனி ஆய்வு நடந்தது போல பாதிக்கப்பட்ட சீனப்பெண்கள் குறித்து தனி ஆய்வு ஆணாதிக்க உலகில் நடக்கவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பீதியைத் தரும் ஆய்வுகள்

சீன சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் பிரச்சனையாக இது அமையக்கூடும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பூர்வாங்க முடிவுகள் ஆரம்ப ஆய்வுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான். அதனால் இதுவே இறுதியான நிலை என்று யாரும் முடிவு செய்யக்கூடாது என்றும் சீன மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் சீனாவில் பல்வேறு இடங்களில் நடக்கும் ஆய்வுகள் இன்னும் பெரிதாக பீதியை கிளப்புவதாக உள்ளன.

சீ அரசின் டோங்நான் மருத்துவமனை பேராசிரியர் லி யுபெங் கூறியுள்ள கருத்து இங்கே நினைவில் கொள்ள தகுந்ததாகும். கோவிட்-19 வைரஸ் ஆண்களின் விதைப்பைகளை குறிவைத்து தாக்குவதாக தோன்றுகிறது. ஏனெனில் ஆண்களின் விதைப்பைகளில் உள்ள ACE2, என்ற செல்களில் உள்ள புரதத்தில் தான் இந்த கோவிட்-19 வைரஸ்களின் மேல் பகுதியில் உள்ள கிரீடம் போன்ற புரத தூண்கள் பதிந்து நிலை பெறுகின்றன. எனவே விதைப்பைகளை முதன்மை தங்கும் இடமாக மாறி பாதிப்புக்களுக்கு இடமளிக்கின்றன என எச்சரிக்கை செய்துள்ளார். மருத்துவமனை ஆய்வுகள் மதிப்புமிக்க தகவல்களைத் தந்துள்ளன.

ஆனால் இந்த தகவல்களின் அடிப்படையில் உடனடியாக எந்த எதிர்நிலை முடிவுக்கும் போக வேண்டியதில்லை என சீன அரசின் கேஇஒய் ஆய்வக இனவிருத்திப் பிரிவு மருந்து ஆய்வாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட எல்லா வைரஸ்களும் இனவிருத்தி திறனைப் பாதிக்கின்றன இதனை பெரும்பகுதி மறுக்க முடியாது. ஆனால் எல்லா வைரஸ்களும் கொள்ளை நோயாக மாறி உலகை உலுக்கி எடுப்பதில்லை.

ஆண்களின் இனவிருத்தி திறன் நிரந்தரமாக பாதிக்கப்படுமா? அல்லது இந்த மாற்றங்கள் தற்காலிகமானவை தானா?

சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வேண்டுமா அல்லது தானாக இயல்பு நிலைக்கு ஆண்களின் இனவிருத்தி திறன் திரும்பிவிடுமா என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்பொழுது விடை கிடையாது.

காலப்போக்கில் ஆய்வுகள் மட்டுமே விடையைத் தர முடியும். ஆனால் கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் ஆண்களுக்கு ஏற்படும் இனவிருத்தி குறைபாடுகள் நிலையானதாக மாறும் பட்சத்தில் இந்த பிரச்சனை மிகவும் கொடியது, பூதாகரமான து என்பதில் சந்தேகமில்லை.

ஆதாரம் :

ஸ்டீபன் சென்

சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

கட்டுரையாளர்: க. சந்தானம்