June 21, 2021

மனைவி ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது!- சுப்ரீம் கோர்ட் லேட்டஸ்ட் தீர்ப்பு

இப்போதெல்லாம் திருமண வாழ்க்கை பல்வேறு வகைகளில் மாறிவிட்டது. சகலமும் நவீன மயமாகி வரும் உலகில், தம்பதிகளும் நவீனமயமாகி விட்டார்கள். அவர்கள் படித்திருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பரபரப்பாக இருக்கிறார்கள். காதல் திருமணமோ, பெரியவர்கள் நிச்சயிக்கும் திருமணமோ எப்படியிருந்தாலும் மணவாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால் தம்பதிகளிடையே உருவாகும் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. 2017-ம் ஆண்டிலும் ஒரு கணக்குப்படி, உலக அளவில் விவாகரத்து வழக்குகளில் முன்னிலையில் இருப்பது ஐரோப்பா (சில நாடுகள்), அதற்கடுத்த இடத்தில் அமெரிக்கா, அதற்கடுத்து இங்கிலாந்து. இந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, சதவிகிதம் கணக்கில் இந்தியா மிக மிகப் பின்னால் இருக்கிறது. ஆனாலும், அதிகரித்துவரும் மணமுறிவு வழக்குகள் கொஞ்சம் அச்சப்படுத்தவே செய்கின்றன.    2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்த கால கட்டத்தில் இந்தியாவில்  ஒட்டு மொத்தமாக சுமார் 7 லட்சம் விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.  அத்துடன் விவாகரத்துக்காக பிரத்யேகமான ஒரு செயலி `DivorceKart` என்று பெயரிடப்பட்ட இந்த செயலி (கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ப்ளேஸ்டோர்களில் கிடைக்கிறது).டவுன்லோடு ஆவது அதிகரித்து கொண்டே போவதிலிருந்து இதன் சீரியஸ் போக்கை புரிந்து கொள்ளலாம்.  இதனிடையே கோர்ட் வரை வரும் கணவன். மனைவியின் சில பிரச்னைகள் குறித்து கேட்டாலே அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

இப்படித்தான் அண்மையில் மும்பையை சேர்ந்த மனோகர் ஜாதவ் என்பவர் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு உள்ளதாகவும், அவரது குழந்தைகளில் 2 பேருக்கு தான் தந்தை இல்லை எனவும் குற்றம்சாட்டி மும்பை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனைவி குடும்பத்தில் யாரையும் மதிக்காமல் சண்டை போட்டுக் கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுவதோடு, சமையல் கூட செய்யாமல் தன்னை சித்ரவதை செய்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து விசாரித்த குடும்ப நல கோர்ட் மனோகர் ஜாதவ் தனது மனைவி மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து விட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் தனக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க கோரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சாம்பாஜி ஷிண்டே மற்றும் சோபன் கவ்ஹானே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனோகர் ஜாதவின் மனுவில், அவரது மனைவி சித்ரவதை செய்ததாக கூறியிருப்பது தொடர்பாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். சமையல் செய்யாதது, சண்டை போடுவது உள்ளிட்டவை சித்ரவதையாக கருத முடியாது என அவர்கள் கூறினர்.
மேலும் இதுபோன்ற பொதுவான அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சித்ரவதை செய்வதாக எடுத்துக் கொண்டு விவாகரத்து வழங்க முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே சமயம் கடந்த வாரம் கடைசியில் சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த ஒரு வழக்கில் மனைவி, ஒரு சொத்து அல்ல; சேர்ந்து வாழ கணவன் கட்டாயப்படுத்த முடியாது என கணவன் – மனைவி இடையிலான ஒரு வழக்கில் தீர்ப்பு கூறிய உள்ளது.

அதாவது கணவர் கொடுமைப்படுத்துவதாக பெண் ஒருவர் கொடுத்த புகார் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கணவர் தெரிவித்தார்.

மனைவி தரப்பில், ‘அவரது கொடுமையை தாங்க முடியாமலேயே புகார் செய்தேன். அவரிடன் இருந்து எந்த நிவாரணத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. அவருடன் சேர்ந்து வாழ முடியாது. அவரை விவாகரத்து செய்யவே விரும்புகிறேன்’ என அழுத்தமாக வாதிடப்பட்டது. இருவரையும் ஏற்கனவே சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி, அங்கும் தீர்ப்பு எட்டப்படாத நிலையில் இந்த விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு விசாரணையின்போது பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான கருத்துகளை நீதிபதிகள் குறிப்பிட்டனர். ‘இந்தப் பெண், உங்களது அசையும் சொத்து அல்ல. நீங்கள் அவரை கட்டாயப்படுத்த முடியாது. அவர் உங்களுடன் வாழ விரும்பவில்லை. அவருடன்தான் வாழ்வேன் என நீங்கள் எப்படி சொல்ல முடியும்?’ என நீதிபதிகள் மேற்படி கணவரை பார்த்து கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்த நீதிபதிகள், ‘உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வதே நல்லது’ என்றும் அந்த கணவரிடம் குறிப்பிட்டனர். ‘அந்தப் பெண், உயிரற்ற ஒரு பொருள் அல்ல. இவர் எப்படி அவரை தன் விருப்பம் போல நடத்த முடியும்? இவர் எப்படி இந்த அர்த்தமற்ற (சேர்ந்து வாழ) கோரிக்கையை வைக்க முடியும்?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேற்படி கணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்றத்தின் கருத்தைக் கூறி அவரை புரியவைக்க முயற்சிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அந்தப் பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ, ‘அந்த ஆண் மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கைகூட வாபஸ் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம். எனது கட்சிக்காரர் விரும்புவது விவாகரத்தை மட்டும்தான்’ என உறுதியாக கூறினார். இதன் அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஒரு அமெரிக்க தம்பதியின் லேட்டஸ்ட் முடிவை பற்றி தெரிந்து கொள்வதும் நல்லது. அமெரிக்காவின் கெண்டகி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஹெரால்டு ஹொலாண்ட் (83) மற்றும் லில்லியன் பேர்ன்ஸ் (78). இவர்கள் இருவரும் கடந்த 1955ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இந்தத் தம்பதிக்கு, 5 குழந்தைகள் பிறந்தனர். ஆனால், ஹொலாண்டின் வேலை நெருக்கடி, குடும்பச் சூழல் உள்ளிட்ட காரணங்களால் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

அதன்பிறகு, பிரிந்து வாழ்ந்த இவ்விருவரும் இன்னொருவருடன் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு இவ்விருவரின் இணையர்களும் உயிரிழந்தனர். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் குடும்ப நிகழ்வு ஒன்றில் ஹொலாண்ட் மற்றும் லில்லியன் ஆகியோர் மீண்டும் சந்திக்க நேரிட்டது. வாழ்வின் இறுதிக்காலத்தில் தனிமையில் வாழும் இருவரும், மீண்டும் சேர்ந்து வாழ முடிவுசெய்தனர். இவர்களுக்கு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி மறுதிருமணம் நடத்திவைக்க, இவர்களது பேரன் ஏற்பாடுகளை செய்துவருகிறார். ‘நாங்கள் இருவரும் வாழ்வின் அந்திம தூரத்தை சேர்ந்தே கடக்க இருக்கிறோம்’ என காதல் மிதக்கும் கண்களுடன் பேட்டியளித்திருக்கிறார்கள்.