August 2, 2021

அச்சச்சோ.. உன் மனைவி கன்னியில்லை~! -நாசிக் பஞ்சாயத்து அடாவடி போக்கு!

மராட்டிய மாநிலம் நாச்சிக்கில் திருமணமான 48 மணி நேரத்தில் மணமகள் கன்னித்தன்மையை சோதனையில் தோல்வி யடைந் ததால் அந்த கிராமத்தை சேர்ந்த சாதி பஞ்சாயத்து அந்த திருமணத்தை முறித்தது. மும்பை மீடியாக்களின் தகவல்படி சாதி தலைவர்கள் என கூறப்படும் குழு மணமகனுக்கு திருமணத்திற்கு முதல் நாள் ஒரு வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்தனர். பின்னர் மணமகனின் முதலிரவு முடிந்ததும் அதை கொண்டு வரும்படி கூறினர்.மணமகன் அது போல் படுக்கை விரிப்பை கொண்டுவந்து சாதி தலைவர்களிடம் காட்டி உள்ளார். ஆனால் அதில் எந்தவித ரத்த கறையும் இல்லை. இதை தொடர்ந்து சாதி பஞ்சாயத்து குழுவினர் மணமகள் கன்னிதன்மையற்றவர் என கூறி மணமகன் மணமகளின் உறைவை முறித்து கொள்ள அனுமதி அளித்து உள்ளனர்.

woman june 2

ஆனால் பின்னர் விசாரித்த போது அந்த மணமகள் மாநில போலீஸ் பிரிவில் சேர தயாராகி வருவதாகவும். இதனால் சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல், மற்றும் கடின பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.மணப்பெண் சார்பாக சமூக சேவகர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை நடந்த சாதி பஞ்சாயத்து கூட்டத்தில் பேசினார். ஆனால் எந்தவித சமரச தீர்வும் ஏற்படவில்லை. இதை தொடர்ந்து போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து மகாராஷ்டிரா அந்தாஸ்ரதா நிர்மூலன் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் அவிநாஸ் படீல் கூறும்போது, “பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு (20 வயது). அண்மையில் நாசிக்கைச் சேர்ந்த 25 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார். இருவருமே காஞ்சர்பாத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த சமூக வழக்கத்தின்படி திருமணமான புதுமணத் தம்பதிகள் வெள்ளை விரிப்பு கொண்ட படுக்கை மீது உறவு கொள்ள வேண்டும். உறவுக்காரர்கள் அனைவரும் வீட்டைச் சுற்றி காத்திருப்பர். பின்னர், தம்பதிகள் படுத்திருந்த விரிப்பில் ரத்தக் கறை இருக்கிறதா என்பதை சோதிப்பர். அவ்வாறு இல்லை என்றால் பெண்ணுக்கு கன்னித்தன்மை இல்லை எனக் கூறி அவளை தள்ளி வைப்பர்.

அதே போல்தான் இந்த திருமணத்திலும் படுக்கை விரிப்பில் ரத்தக் கறை இல்லாததால் பெண் கன்னித்தன்மை அற்றவள் எனக் கூறி மணமகன் அவளை ஒதுக்கி வைத்துள்ளார். சாதி பஞ்சாயத்துத் தலைவர்களும் திருமணத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர். பாதிக்கப் பட்ட பெண் தான் போலீஸ் தேர்வுக்காக பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொண்டதாலேயே தன்னால் கன்னித்தன்மை சோதனையில் வெற்றி பெற முடியாமல் போனதாக அப்பெண் விளக்கமளித்தார். ஆனால், அவர் வாதத்தை யாரும் ஏற்கவில்லை. மேலும், மணமகன் வீட்டார் பெண் வீட்டார் கொடுத்த நகைகளை திரும்பத் தர மறுத்துவிட்டனர்.

இருப்பினும், திருமணத்தை செல்லத்தக்கதாக அறிவிக்க வேண்டும் என்றால் மணப்பெண் தவறுக்கு பிராயச்சித்தமாக மற்றுமொரு சோதனைக்கு உட்பட வேண்டும் என பஞ்சாயத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது மணப்பெண்னுக்கு பஞ்சாயத்தார் ஒரு மீட்டர் நீள துணியை தருவர், அதை மேலாடையாகவோ அல்லது கீழாடையாகவோ அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக அவள் ஓட வேண்டும். அவளை துரத்தும் பஞ்சாயத்து ஆண் உறுப்பினர்கள் அவள் மீது சூடான மாவுப் பந்தை வீசுவர். அதை பொறுத்துக் கொண்டு அவள் ஓட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த போட்டியை தான் ஏற்கப்போவதில்லை என மணப்பெண் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து திருமண ரத்து உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மணப்பெண்ணும் அவரது தாயாரும் போலீஸில் புகார் கொடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரையும் பெண் வீட்டாரே பூட்டி வைத்தனர். போலீஸுக்கு சென்றால், சாதிப் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனக் கூறி பெண்ணின் தந்தையே அவர்களை பூட்டி வைத்துள்ளார்” என நடந்த சம்பவங்களை விவரித்தார்.