December 2, 2021

ராகுல் அடிசினலாக கேரளா வயநாடு தொகுதியில் போட்டி! ஏன்?

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை யொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தது. அதே சமயம், இரண்டாவதாக வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும், அது உறுதி செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி இன்று டெல்லியில் செய்தியாளர் களிடம் பேசியபோது, வயநாடு தொகுதியிலும் போட்டியிட ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்து உள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். அப்போது, அமேதி தொகுதியில் வெற்றி வாய்ப்பு சாதகமாக இல்லை என்பதால்தான் இரண்டாவது தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாள ரண்தீப் சிங் சுர்ஜேவாலா பதில் அளிக்கையில், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தை விட்டுவிட்டு, வாரணாசியில் போட்டியிடவில்லையா? அதுபோலதான் இதுவும். அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி மீண்டும் தோல்வி அடைவது உறுதி என்று பதில் அளித்தார்.

இதை அடுத்து ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிட காரணம் என்ன? என்று விசாரித்த போது, “தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டபோது கடந்த 2008-ம் ஆண்டு வயநாடு மக்களவைத் தொகுதி பிரிக்கப்பட்டது. இதில் வயநாடு மாவட்டம், மணன்தாவாடி, சுல்தான்பத்தேரி, கல்பேட்டா, திருவம்பாடி, மலப்புரம் மாவட்டத்தில் எரநாடு, நிலம்பூர், வண்டூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இந்த 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாக்கு வங்கி உண்டு. 5 தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர்.

கடந்த 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஐ.ஷாநவாஸ் பெரும் பான்மை வாக்கு வித்தியாசத்தில் சிபிஐ வேட்பாளரைத் தோற்கடித்துள்ளார். ஆனால், எம்.பி. ஷாநவாஸ் காலமாகி ஓராண்டுகிவிட்டதால், காலியாக இருக்கிறது.

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கணக்கின்படி, வயநாடு தொகுதியில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 97 வாக்காளர்கள் இருந்தனர். ஷாநவாஸ் அதில் 4.10 லட்சம் வாக்குகள் அதாவது 49.86 சதவீத வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.ரஹ்மத்துல்லா 31.23 சதவீதம் வாக்குகள், அதாவது 2.57 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.வாசுதேவன் மாஸ்டர் 31,687 வாக்குகள், 3.85 சதவீதம் வாக்குகள் பெற்று 4-வது இடம் பெற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி கே.முரளீதரன் 12 சதவீத வாக்குகள் 99,663 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் ஷாநவாஸ் வென்றபோதிலும் கூட கடந்த 2009-ம் ஆண்டு வெற்றியைக் காட்டிலும் சற்று கடினமாக இருந்தது. ஷாநவாசுக்கும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் மோகேரிக்கும் இடையே 20 ஆயிரம் வாக்குகள்தான் வித்தியாசம் இருந்தது.

ஷாநவாஸ் 30.18 சதவீதம் வாக்குகள் அதாவது 3.77 லட்சம் வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஐ வேட்பாளர் சத்யன் 3.56 லட்சம் 28.51 சதவீதம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக சற்று முன்னேற்றம் கண்டு 3-ம் இடத்தைப் பிடித்தது. பாஜக வேட்பாளர் பி.ஆர்.ரஸ்மில்நாத் 80 ஆயிரத்து 752 வாக்குகள், 6.46சதவீத வாக்குகள் பெற்றார். சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு சதவீதம் வாக்குகள் பெற்றனர்.ஆதலால், வயநாடு மக்களவைத் தொகுதி என்பது, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பாதுகாப்பான, வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் தொகுதி என்பதால், ராகுல் காந்தியை இங்கு போட்டியிட கேரள காங்கிரஸ் கட்சியினர் அழைத்துள்ளார்கள். இவரும் அதற்கு சம்மதித்து களம் இறங்குகிறார்” என்றார்கள்.