March 22, 2023

முடக்கப்பட வேண்டிய யூ டியூப்கள்!- ஐகோர்ட் + மோடி அரசு அதிரடி!

யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது? ஒருவர் தவறு செய்வதற்கு துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான் என ஐகோர்ட் மதுரைக்கிளை இன்று தெரிவித்துள்ளது.

யூ–டியூபில் தேவையற்ற பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. சாட்டை துரைமுருகன் கைது தொடர்பான இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி புகழேந்தி கூறியதாவது:–

சாட்டை துரைமுருகன், யூடியூபில் அருவருக்கத்தக்க, அநாகரீகமாக பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளாரா? அதனைத் தடுக்க என்ன முறை உள்ளது? யூ–டியூபைப் பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். ஒருவர் தவறு செய்ய துணை புரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான்.

யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற காணொலிகள் இடம்பெறும் நிலையில் இதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? யூடியூபில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும் இதுபோன்ற பதிவுகளைத் தடுக்க தடை செய்யலாமே? வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகள் வந்தால் அதைத் தடை செய்யுங்கள்.

தேவையற்ற பதிவுகளைத் தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனைத் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக எச்சரித்துள்ளது. காலப்போக்கில் நாள்தோறும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் சிலவை எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் அவர்களுக்கு தோன்றியவற்றை வெளியிடுகின்றன. இதனால் பதற்றமான சூழல் உருவாகுதல், அவதூறு, பொய்யான தகவல்களை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

இதற்கு தீர்வுகாண நீண்டகாலமாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களை பரப்பும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 19 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.