நிறுவன உயர் பதவிகளில் இந்தியர்கள் அமர்வது ஏன்? எப்படி?- ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

நிறுவன உயர் பதவிகளில் இந்தியர்கள் அமர்வது ஏன்? எப்படி?-  ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

ந்தியர்களுக்கு வணிகம் புதிதல்ல. சிந்துவெளி நாகரிக காலத்திலேயே வணிகம் செய்ததற்கான ஆதாரங்களை அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தமிழகத்திலிருந்தும் வெளிநாடுகளுடன் வாணிபம் செய்தது உறுதிப்பட்ட விஷயம். தற்போது அயல்நாட்டுப் பெரு நிறுவனங்களில் இந்தியர்கள் அதிகளவில் உயர் பதவிகளில் நியமிக்கப்படுவது அடிக்கடி நடைபெறும் நிகழ்வாகி விட்டது. முதலில் சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். பின்னர் சத்யம் நாடெள்ளா மைக்ரோசாஃப்டின் தலைமைச் செயல் அதிகாரியானார். இதற்கெல்லாம் முதலில் இந்திரா நூயி பெப்ஸி குளிர்பான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். இது தவிர இப்போது சுமார் ஒரு டஜன் முன்னணி நிறுவனங்களுக்கு இந்தியர்களே தலைமைச் செயல் அதிகாரிகளாகவோ, தலைவர்களாகவோ நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் செயல்படும் பல வெளி நாட்டு முன்னணி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் துவக்கத்தில் வெள்ளை நிறத்தினரே அமர்த்தப்பட்டனர். ஆனால் நாளடைவில் இந்தியர்கள் பலர் இப்பொறுப்புக்களுக்கு நியமிக்கப்படுவது அதிகரித்து விட்டது. காரணம் வெளிநாட்டிலேயே உயர் பதவிகளுக்கு இந்தியர்கள் நியமிக்கப்படும்போது ஏன் இந்தியாவில் கூடாது எனும் எளியக் கேள்வியேயாகும்.

தற்போது இந்தியரான பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் பராக் அகர்வால் எனும் 37 வயதுக்காரரை தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது. இதற்கு முன் அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான ஜாக் டோர்ஸி தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வந்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து பராக் இப்போது ஒருமனதாக நிர்வாகக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் டிவிட்டரின் தொழில்நுட்பத் துறையின் தலைவராக இருந்தார். பராக் இந்நிறுவனத்தில் 2011 ஆம் ஆண்டு இணைந்து பின்னர் படிப்படியாக தனது தொழில்நுட்பத் திறனால் முன்னேறியுள்ளார். உலகின் முதல் ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் இளம் வயது தலைமைச் செயல் அதிகாரியாகி இருக்கிறார். பராக். இவர் மும்பை ஐஐடியில் படித்தவராவார்.

ஒரு முறை அதிபர் ஒபாமா சக அமெரிக்க மாணவர்களிடையே பேசும் போது இந்திய மாணவர்கள் உங்களை முந்திச் செல்லும் காலம் விரைவில் வரக்கூடும். எனவே நீங்கள் கல்வியில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார். குறிப்பாக அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அமெரிக்க மாணவர்களுக்கு போட்டி இருக்கிறது. முன்பெல்லாம் அமெரிக்க நிறுவனங்களில் உள்ளூர் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பிருந்தது. இப்போது அயல் நாட்டிலிருந்து வரும் மாணவர்கள் குறிப்பாக இந்தியர்கள், சீனர்கள் மற்றும் ரஷ்யர்கள் நன்கு பயின்ற மாணவர்களாக இருப்பதால் வேகமாக முன்னேறவும் செய்கின்றனர். எனவே உங்களுக்கு எதிகாலத்தில் போட்டி கடினமாகிவிட்டது. இதே போல தொழிலாளர்களும் அதிகம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த 21 ஆம் நூற்றாண்டில் நிறுவனங்கள் பல நாடுகளில் வணிகம் செய்கிறார்கள். அவர்கள் திறமைசாலிகளை அடையாளம் கண்டு நல்ல வேலை, நல்ல சம்பளம் தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தை இந்தியர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டதால் இன்று முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்துள்ளனர்.

மேலும், வேலையுடன் ஒன்றும் தன்மை, சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ளும் திறன், குடியேறும் நாட்டின் சூழலுடன் கலத்தல், வேலையிடத்தில் பண்பாட்டைக் கொண்டு செல்லுதல், குறிப்பாக, வீட்டு விசேஷங்களுக்கு உள்ளூர்க்காரர்களை அழைத்தல் எனப் பலவிதமான நடவடிக்கைகளால் உயர் பதவிகளை நோக்கி முன்னேறுவது எளிதாகிறது என இவ்விஷயத்தில் அதிகம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பல ஆய்வுகளிலும் இது போன்ற கருத்துக்கள் முடிவுகளாக வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய மக்கள் தொகையான 130 கோடியில் மிகச் சிலரே உயர் கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிட்டுகிறது. அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளில் பணிப்புரியவே விரும்புகின்றனர். குறிப்பாக, ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் ஒன்று சொந்தமாக நிறுவனங்களைத் துவங்குகின்றனர். இல்லையென்றால் முன்னணி நிறுவங்களில் பணி செய்யப் போகின்றனர். உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த நிலையிலுள்ள கல்வி நிறுவனங்களிலும் பெரு நிறுவன வேலை வாய்ப்புகளுக்கே செல்வாக்கு அதிகம். அந்நிறுவனங்களும் திறமைசாலிகளை கண்டுத் தேர்வு செய்ய கல்வி வளாகங்களுக்கே வருகின்றனர். இப்போதெல்லாம் பயிற்சிப் பணியாளர் எனப்படும் இண்டெர்ன் முறை பிரபலமாகி வருகிறது. இதில் சம்பளம் கொடுப்பதும் உண்டு; இலவசப் பயிற்சி அளிக்கப்படுவதும் உண்டு. இது ஒருவகையில் உழைப்புச் சுரண்டல்தான், ஆனாலும் மாணவர்கள் தங்களுக்கு வேலை அனுபவம் தேவை என நினைப்பதால் இது போன்ற வேலைகளை ஒப்புக்கொள்கின்றனர்.

”நாளுக்கு நாள் இந்தியர்கள் உயர் பதவிகளில் அமரும்போது கீழ் மட்டத்தில் சராசரி இந்தியர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், அவர்களின் எதிர்காலத்திற்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பது போன்ற எண்ணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறுவோரும் உண்டு. ஏனெனில் இந்தியர்கள் உயர் பதவிகளில் அமர்வது, முன்னணி நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆவதெல்லாம் ஒரு காலகட்டத்துடன் முடிந்து விடக்கூடாதல்லவா?

ரமேஷ்பாபு

error: Content is protected !!