August 2, 2021

தமிழக ஹெல்த் செகரட்டரியாக மீண்டும் நியமிக்கப்பட்டார்- ராதாகிருஷ்ணன்!- ஏன்?

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். பீலா ராஜேஷ் வணிகவரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும் தொடர்ந்து நீடிப்பார் என தலைமைச் செயலர் அறிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறையின் செயலராக IAS அதிகாரியான டாக்டர் பீலா ராஜேஷ் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் அந்தத் துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறையின் செயலராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள ஜெ. ராதாகிருஷ்ணன் புதிய சுகாதார துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனிந்த திடீர் மாற்றம் என்று விசாரித்த போது, ‘ நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பீலா ராஜேஷ், முன்பு அரசு மருத்துவமனைகளில் மட்டும் கொரோனா சிகிச்சை அளிக்கப் பட்டது. இப்போது தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுவதால், இறப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறைக்கு கிடைப்பதில் தாமதம் ஆகி இருக்கலாம்.அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இறப்பு விஷயங்களை அந்த கமிட்டி சேகரிக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது.

ஏனெனில், கொரோனா போன்ற நோய்த் தொற்று பேரிடர் காலத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது சுகாதாரத்துறை தான். ஆனால், சுகாதாரத் துறைக்கு தெரியாமல் சென்னையில் மட்டும் இத்தனை மரணங்கள் நடந்துள்ளது.

அது குறித்த கேள்விக்கு இனிமேல் அந்த நம்பர்களை கேட்டுப் பெறுவோம் என்று பீலா ராஜேஷ் பதிலளிக்கிறாரே, என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினார். சுகாதாரத்துறை செயலாளர் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக முணுமுணுப்பு எழுந்தது. இந்த நிலையில்தான் பீலா ராஜேஷ் இன்று அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று மீடியாக்களில் செய்தி பரவுகிறது.

இந்த பீலா ராஜேஷ் சுகாதார துறைச்செயலராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ராதாகிருஷ்ணன் தான் சுகாதாரத் துறைச் செயலராக 2012 – 2019 ஆண்டுகள் வரை பதவி வகித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப் பட்டுள்ளார். ஏற்கனவே, ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்’

அத்துடன் 2012–2019ம் ஆண்டு வரை தமிழக சுகாதாரத் துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சென்னையில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தியது, சுனாமி நேரத்தில் நாகை மாவட்ட ஆட்சியராக திறம்படச் செயல்பட்டது போன்ற அனுபவம்மிக்க அதிகாரி ஆவார். தற்போது தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலை கையாளும் வகையில் அவர் சுகாதாரத் துறை செயலாளராக மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.