November 29, 2022

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏன் வேகமெடுக்கின்றன? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

டந்த 2016 ஆம் ஆண்டின் இறுதியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதிகளவில் பிரபலப்படுத்தப்பட்ட பணப் பரிமாற்ற முறையாகும் இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறை. டெபிட்/கிரெடிட் கார்டுகளைக் கொண்டு கடைகளில் பொருட்களை வாங்குவது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக நடைமுறைக்கு வந்து விட்டது என்றாலும் அவற்றால் பேரளவில் பயன்பாட்டை ஊக்குவிக்க முடியவில்லை. ரொக்கத்தின் அளவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கையாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இடம் பெற்றிருந்தன. ஆன்லைன் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பரிந்துரைக்கப்பட்டது. மொபைல் போன்களில் டிஜிட்டல் பேமண்ட் சேவைகளை வழங்க பே டிம், கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த களம் இறங்கின. இப்போது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் அளவில் தமிழிலும் கூட டிஜிட்டல் பேமண்ட் சேவைகளை வழங்க ஸ்டார்ட்-அப்கள் துவங்கப்பட்டு வருகின்றன.

ஆகையால் ட்ஜிட்டல் பணப்பரிமாற்ற சேவைகள் பாமர மக்களிடையேயும் அதிகளவில் பரவ உள்ளூர் மொழிகளில் சேவைகள் கிடைப்பது அவசியம். அதுமட்டுமின்றி ஆரம்பக்காலம் முதல் இன்றுவரை டிஜிட்டல் சேவைகள் ஸ்மார்ட்போன் என்றழைக்கப்படும் கூகுளின் ஆண்டிராய்டு இயங்குத்தளம் அல்லது அது போன்றவற்றின் தொழில்நுட்ப உதவியோடு மட்டுமே இயங்குகின்றன. இதனால் அத்தகைய போன்களை வைத்திருப்போர் மட்டுமே இச்சேவைகளைப் பயன்படுத்த முடியும். இன்று மொபைல் சந்தையில் ஸ்மார்ட்போன்களே முன்னணியில் உள்ளன. ரூ 3-4000 விலைக்குக்கூட ஸ்மார்ட் போன்கள் கிடைக்கும் காலம் வந்துள்ளது. ஸ்மார்ட் போன்களை மாதாந்திர தவணைகளில் வாங்குவோரின் எண்ணிக்கையும் மிக அதிகம். எனவே டிஜிட்டல் இன்க்ளூசிவ்னஸ் (டிஜிட்டல் சேவைகளை அனைவருக்குமானது) பரவலாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை பேரளவில் பாதிக்கக்கூடிய மற்றொரு நிகழ்வும் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி யூ பி ஐ 123 செயலி எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி இயங்க ஸ்மார்ட்போன்கள் தேவையில்லை என்பதே அதிரடி சிறப்பு. இன்று ஏறக்குறைய 120 கோடி மொபைல் பயன்பாட்டாளர்களில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் ப்யூச்சர் போன்கள் எனப்படும் சாதாரண போன்களையே பயன்படுத்துகின்றனர். வரும் ஆண்டுகளில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 பில்லியன் (நூறு கோடி) அளவில் இருக்கும் என்று டெலாய்ட் எனும் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை பாரத் நெட் திட்டமானது அனைத்து கிராமங்களுக்கும் வைஃ-பை வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்கும் போது மேலும் அதிகரிக்கலாம்.

அத்துடன் 5 ஜி அலைவரிசை சேவையும் விரைவில் துவங்க உள்ளதால் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்கும். இந்தியாவிற்குள்ளேயே ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதால் விலையும் குறையலாம். எனவே டிஜிட்டல் பேமண்ட் வசதி விரிவுபடும் என்பது உறுதி. ஆனால் பாமர மக்கள் பயன்படுத்தும் விதமாக தொழில் நுட்பம் மேலும் எளிமைப்படுத்தப்பட வேண்டும். இன்றும் கூட ஏ டி எம்களில் பணம் எடுக்கத் திணறுவோர் நகரங்களிலேயே அதிகம் பேர் உள்ளனர். கணினியில் பணப்பரிமாற்றம் பாதுகாப்பானதல்ல என்பதால் மொபைல் போன்களில் வங்கிச் சேவைகளைப் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகம். இந்நிலையில்தான் யூ பி ஐ 123 எனும் செயலி பேரளவில் கைக்கொடுக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் எத்தனை யூ பி ஐ பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? அவை எந்த வகையிலானவை என்பதையும் நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. இம்மாதத்தில் 452 பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன் மூலம் ரூ 8.26 இலட்சம் கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரு நபர்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ரூ. 6.63 இலட்சம் கோடிகளாகவும், ஒரு நபருக்கு வணிக நிறுவனத்திற்கும் இடையிலான பரிமாற்றங்கள் ரூ 1.63 இலட்சம் கோடிகளாகவும் உள்ளன. எண்ணிக்கையில் முறையே 263 மற்றும் 189 கோடிகளாகவும் இப்பரிமாற்றங்கள் உள்ளன.

இதில் ரூ. 500 க்கும் குறைவான பரிமாற்றங்களே அதிகம். ரூபாய் மதிப்பில் ரூ. 2000 ற்கும் மேலான மதிப்பிலுள்ள பரிமாற்றங்களே அதிகம். அனைத்தையும் விட சில்லறை விற்பனையில் 50% ற்கும் மேல் டிஜிட்டல் பேமண்ட் முறையிலேயே நிகழ்கின்றன. இந்நிலையில் பிரபல டாடா நிறுவனமும் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து யூ பி ஐ பணப் பரிமாற்ற சேவையில் இறங்க விண்ணப்பித்துள்ளதாம். விரைவில் சேவையும் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா போன்ற நிறுவனங்கள் உப்பு முதல் எஃகு வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவையாகும். தங்களது வணிகச் செயல்பாடுகளுக்கு யூ பி ஐ வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும்போது அவை மேலும் இலாபத்தை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இவற்றுடன் என் பி சி ஐ வால்ட் வசதியையும் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் ரூ 2000 வரையில் வாலட்டில் வைத்துக் கொண்டு பணப்பரிமாற்றம் செய்யலாம். இதன் மூலம் ஒருமுறை ஒருவர் ரூ. 200 வரையில் பரிமாற்றம் செய்யலாம். இச்செயலி மொபைல் போன்களிலேயே இடம் பெறச் செய்யவும் என் பி சி ஐ சிந்தித்து வருகிறது. எனவே தனியே பதிவிறக்கம் செய்ய தேவையில்லை. ஆகையால் அடுத்த முறை நீங்கள் மொபைல் போன், அதுவும் ஸ்மார்ட் போன் வாங்கினால் பணப் பரிமாற்றம் என்பது எளிது மட்டுமல்ல; பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பது உறுதி.

ரமேஷ்பாபு