நாளை தமிழகத்தில் முழு பந்த் :வெளி வாழ்க்கை முடங்கும்! –

நாளை தமிழகத்தில்  முழு பந்த்  :வெளி வாழ்க்கை முடங்கும்! –

தமிழக விவசாயிகளுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுத்து, தமிழகத்துக்கும் தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகின்ற கர்நாடக அரசையும், அதற்கு துணைபோகின்ற கர்நாடக அரசியல் கட்சிகளையும் கண்டித்து தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நாளை (வெள்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

tn bhandh sep 15

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநில தழுவிய முழுஅடைப்பு போராட்டத்தினையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லரை வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விடுமுறை அளித்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர். குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பொதுமக்களின் நலன்கருதி தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1½ லட்சம் பால் முகவர்களும் தங்களுடைய பால் விற்பனை நிலையங்களையும், வினியோக மையங்களையும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் அடைத்து போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், முழுஅடைப்பு போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் சுகுமார், ”விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். அதன்படி, தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள், 4½ லட்சம் மினிவேன் உள்பட சரக்குகளை ஏற்றி செல்லும் 11½ லட்சம் வாகனங்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது. இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு மாநில மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ‘16–ந் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்து, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் இயங்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாது’ என்றார்.

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தமிழக பதிவெண் கொண்ட 50 பஸ்கள், 100–க்கும் மேற்பட்ட வாகனங்களை கர்நாடகாவில் தீக்கிரையாக்கி உள்ளனர். மேலும் தமிழக முதல்–அமைச்சரின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.
கன்னட வெறியர்களின் மேற்கண்ட செயல்களை கண்டித்தும், 300 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகளை இழந்துள்ள கர்நாடக வாழ் தமிழர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலும் அனைத்து வியாபார சங்கங்களுடன் இணைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்களையும் வெள்ளிக்கிழமை (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்குவது இல்லை என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க அவசர நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 4800 பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் செயல்படாது” இவ்வாறு கே.பி.முரளி தெரிவித்தார்.

இதேபோல், ஆம்னி பஸ் உரிமையாளர்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் கூறும்போது, ‘முழு அடைப்பு போராட்டத்துக்கு நாங்கள் தார்மீக ஆதரவு அளிக்கிறோம். அன்று ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனியார் ஆம்னி பஸ்கள் இயங்காது’ என்றார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய்–கனி வியாபாரிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைக்க முன்வந்துள்ளனர்.இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் காய், கனி, மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், ‘விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதுடன், காய்–கனி வியாபாரிகள் அனைவரும் அன்று ஒரு நாள் (16–ந் தேதி) மட்டும் கடைகளை அடைக்கிறோம். கோயம்பேடு மார்க்கெட் முன்பு போராட்டமும் நடத்த இருக்கிறோம். மலர் வியாபாரிகள் மட்டும் போராட்டத்தில் பங்கு பெறுவதாக தெரிவித்து இருக்கின்றனர்’ என்றார்.

ஆட்டோ–டாக்சி ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ‘16–ந் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவை முழுவதுமாக தெரிவிக்கிறோம்’ என்றார்.

தமிழ்நாடு மருத்துவர் சவரத்தொழிலாளர் சங்க மாநில தலைவர் எம்.செல்வராஜ், பொதுச்செயலாளர் ஆர்.கே.வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”கர்நாடக வன்முறை சம்பவத்தை கண்டித்து 16–ந் தேதி தமிழகம் முழுவதும் ஒருநாள் கடை அடைப்பு போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துக்கொள்கின்றோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!