கொரோனாவின் தாக்கத்தால் பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது!

கொரோனாவின் தாக்கத்தால் பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது!

இதைப் படிப்பதற்கு முன் சொல்ல வேண்டிய வசனம் இதோ: காஞ்சி போன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலடையும்.. அந்த நதியே காஞ்சிப் போயிட்டா..? மனுசங்க ளுக்கு குறை வந்த தெய்வத்துகிட்டே முறையிடுவாங்க.. அந்த தெய்வமே கலங்கி நின்னா..? – ஆம்.. நீங்கள் பத்திரிக்கைகளை வாங்கி புரட்டிப் பார்த்து செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு முன், பத்திரிக்கைகள் படும் பாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா வின் தாக்கத்திற்கு பத்திரி்க்கை உலகம் சுருண்டு படுத்துவிட்டது. உள்ளூர் பிரச்சினைகள் தொடங்கி உலகப் பிரச்சினைகளை வரை அத்தனை பேரையும் இழுத்துப் போட்டு வம்பளத்துக் கொண்டிருந்த பத்திரிக்கைகள், மீடியாக்கள் எல்லாம் வாய்மூடி மெளனியாகிக் கிடக்கின்றன. பத்திரிக்கைகளுக்கு வருமானமே அதற்கு கிடைக்கும் விளம்பர வருவாய் மட்டுமே. தற்போது வணிக நிறுவனங்கள், மத்திய- மாநில அரசுகள், அரசியல்வாதிகள் தரும் விளம்பரங்கள் அடியோடு நிறுத்தப்பட்டு விட்டதால் பத்திரிக்கைகள் எல்லாம் வைட்டமின் களை இழந்து சவலைப் பிள்ளைகளாகிவிட்டன.

இந்தியாவில் பத்திரிக்கைகள், மீடியாக்களை நம்பி சுமார் 30 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பத்திரிக்கையாளர்கள், மீடியாக்காரர்கள் எல்லாம் அரசிடம் சென்று கோரிக்கைகள் வைப்பதற்கு பதிலாக பத்திரிக்கை முதலாளிகள் எல்லாம் முந்திக் கொண்டு அரசிடம் சென்று மனுக்களை அளிக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களவையில் இப் பிரச்சினைகளைப் பேசச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் தற்சார்பு இந்தியா எனும் பேரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 20 லட்சம் கோடி சீரமைப்புத் திட்டத்தில் பத்திரிக்கைகளுக்கு தனித் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. பத்திரிக்கைகளை அச்சடிக்கும் காகிதத்தின் விலை உயர்வு, ஊழியர்களுக்கான சம்பளம், பிரிண்டிங் காஸ்ட், நிர்வாகச் செலவுகள் பத்திரிக்கைகளின் கழுத்தை நெரிப்பதால் இனி பல பத்திரிக்கைகள் உயிரிழக்க வேண்டி நிலைக்கு வந்துவி்ட்டன.

குறிப்பாக வர்னாகுலர் எனப்படும் பிராந்திய மொழிப் பத்திரிக்கைகளுக்கு சிறிய அளவே நட்டம் என்றாலும் ஆங்கிலப் பத்திரிக்கைகள், பெரிய பெரிய மீடியாக்கள் நிலைமை எல்லாம் தலைகீழாகிவிட்டன. பத்திரிக்கை உலகின் டாப்பரான டைம்ஸ் குரூப்பிற்கு டைம் சரியில்லை. இங்கு 1000 கோடி நட்டக்கணக்கு சொல்கிறார்கள். எமெர்சென்சியை எதிர்த்துப் போராடிய இந்தியன் பத்திரிக்கை ஒன்று மூச்சுவிடவே திணறிக் கொண்டிருக்கிறது. ஓரளவு ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கிக் கொண்டிருந்து இந்து குரூப்பையும் கடவுள் கைவிட்டுவிட்டார்.

இந்தியாவில் சிறு சிறு பத்திரிக்கைகள் எல்லாம் மூடப்பட்டு, மின்னஞ்சல் மூலமும், இணைய தளம் மூலம் பத்திரிக்கைகளை நடத்த முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறிய வணிக முதலாளிகள், ஈவண்ட்ஸ்கள் மூலம் லாபம் பார்த்துக் கொண்டிருந்த டிவி மீடியாக்கள் எல்லாம் பழைய படங்களையும், சொதப்பில்லாத செய்திகளையும் வாசித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தினமும் அரண் சொல்லும் சூரிய நாளேடு, தனது ஊழியர் களுக்கு 20 சதவீத சம்பளத்தைக் குறைத்துவிட்டது. 58 வயதிற்கு மேற்பட்ட 40 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. தினமும் மலரும் நாளேடு, சேலம், ஈரோடு பதிப்புகளை மூடிவிட்டு, ஊழியர்களுக்கு நிரந்தர விடுப்பு கொடுத்துவிட்டது.

தமிழகத்தில் தினமும் 1 கோடி வாசகர்கள் படிக்கும் நாளேடு என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கையும் ஊழியர்களுக்கு அரை மாதச் சம்பளத்தை கொடுத்துவிட்டு, அவர்களின் வாய்களை மூடி வைத்துள்ளது. தரமான நாளேடு என்று சொல்லிக் கொள்ளும் மணி பேப்பர், தனது ஊழியர்களுக்கு 10 சதம் முதல் 30 சதம் வரை சம்பளக் குறைப்பை அறிவித்துவிட்டு, ஊழியர்களுக்கும் அந்தச் சம்பளத்தையும் இன்னும் வழங்காமல் உள்ளது. எதிர்காலத்திலாவது சம்பளம் வழங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மீதமுள்ள ஊழியர்களும் இங்கு பணிக்கு வருகிறார்கள். சற்று ஏறக்குறைய எல்லா பத்திரிக்கைகளிலும் 20 சதவீத ஆட்குறைப்பு, 10 முதல் 30 சதவீதம் வரை சம்பளக் குறைப்பு அரங்கேறிவிட்டது. அனுபவசாலிகள் என்று சொல்லப்படும் மூத்த ஊழியர்கள் எல்லாம் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

வார, மாத பத்திரிக்கைகள் பற்றி சொல்லித் தெரியவே வேண்டாம். ரயில், விமான போக்கு வரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் தனது சஞ்சிகைகளை வெளியூருக்கு அனுப்ப முடியாமல், பத்திரிக்கைகளை அச்சடிப்பதையை அந் நிறுவனங்கள் நிறுத்தி்விட்டன. வார-மாத பத்திரிக்கைகளும் பாதிக்கு பாதி ஆட்குறைப்பு, சம்பள நிலுவை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனாவின் பின் தாக்க நடவடிக்கைகள் பத்திரிக்கைத் தொழிலையும் பெரும் சுனாமிக்கு ஆட்படுத்தி வைத்துள்ளது. எல்லோரையும் போல் எதிர்காலத்திற்காக பத்திரிக்கைகளும் காத்திருக்கின்றன. கூடவே பல பத்திரிகை யாளர்களின் குடும்பங்களும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை!

மனோஜ்குமார்

Related Posts

error: Content is protected !!