September 27, 2022

ஆர்கே நகர் தொகுதியில் வென்றது யார்?

முதல் முறையாக தமிழ்நாட்டில் கட்சி, சின்னம், தலைவர்கள், பாரம்பர்யம்,  சாதி, மொழி கடந்து தங்களின் மன உணர்வை உண்மையாக வெளிப்படுத்தி உள்ளார்கள்….பணம் விளையாடியது என்பதை ஒரு காரணமாக வைத்து டிடிவியின் வெற்றியின் தகுதியை தரம் குறைக்க முடியாது. காரணம் டிடிவிக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் ஒன்றை கவனிக்க மறந்து விட்டார்கள். அவர்கள் கணக்கின்படி ஒரு ஓட்டுக்கு ₹6000 என கணக்கெடுத்தால் டிடிவி வாங்கிய மொத்த ஓட்டுக்களுக்காக அவர் செலவு செய்ய வேண்டிய தொகை ₹ 53 கோடிகள். சுமார் 2 கோடி ரூபாய்களை விநியோகிக்க பிரம்மப் பிரயத்தனப் பட வேண்டும். தவிரவும், தேர்தல்  கண்காணிப்புப் படை, எதிர்க் கட்சிகளின் கழுகுப் பார்வைகளில் படாமல் இத்தனைப் பணத்தை வீடு வீடாக விநியோகிக்க மிகப் பெரும் போர்த் தந்திரமும், பெரும் ஆளுமையும், கால அளவும் தேவை. அப்படி நடந்ததாகத் தெரியவில்லை. ஒரு சில இடங்களில் பிடிபட்டதாகக் கூறப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 35 லட்சங்கள் மட்டுமே. ஆக, பணம் விளையாடியது என்பது வெற்றிக்கான காரணமாகக் கருத முடியாது.

தேர்தலுக்கு இடைப் பட்ட காலத்தில் வெற்றிக் கனி என நினைக்கப் பட்ட இரட்டை இலைச் சின்னமே வெற்றிக்கு வித்து என்றார்கள். ஆனால் தொப்பியைப் பறித்து, குக்கரை சின்னமாகக் கொடுத்தும், மக்கள் சின்னங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளாமல், யாருக்குப் போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்கள்.

தநாட்டின் மிகப் பெரும் பாரம்பரியக் கட்சிகள் என நினைக்கப் பட்ட பல கட்சிகளின் சட்டை மக்களால் கிழிக்கப் பட்டு அலங்கோலப் படுத்தப் பட்டுள்ளன. வாக்கு சதவீதம் அடிப்படையில் தாங்கள்தான் மிகப் பெரும் கட்சி என மமதையில் இருந்தவர்களின் மாயை மக்களால் உடைக்கப் பட்டுள்ளது. ஒருபுறம் 34% ஓட்டு வங்கி உள்ள ஆளும் அதிமுக, மறுபுறம் 24% உள்ள திமுக, உடன் காங், கம்யூ, விசிக, இன்ன பிற கட்சிகளின் மொத்த வாக்கு வங்கியும் டெபாசிட்டை இழக்க வைத்து மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.

நாயுடு இனம் அதிகம் எனக் கூறி அதே இனத்தில் உள்ள மதுசூதனனை தோற்கடித்ததில் சாதி மாயையும் தூள் தூளாக்கப் பட்டுள்ளது. கூடவே காமெடியாக நாடார் இனம் அதிகம் என்பதால் பாஜக நாடார் தலைமை நபரை நிறுத்தி தன் பங்கிற்கு கரியை வாரிப் பூசிக் கொண்டது… ஆக, பணம் இல்லை, தலைவன் இல்லை, அரிதாரக் கவர்ச்சி இல்லை, சின்னம் இல்லை, சாதி இல்லை…… எப்படி ஒரு சுயேச்சை வென்றார்?

அது அவரின் வெற்றி அல்ல. வென்றது தமிழ் மக்கள். 2ஜி வெற்றியை ஏற்காத மக்கள் எதிர்த்துப் போட்ட ஓட்டு, ஆட்சியைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் எனக் கொக்கரித்த ஓபிஎஸ், ஈபிஎஸ் க்கு எதிரான ஓட்டு, எத்தனை கட்சிகள் ஒன்றாக இணைந்தாலும் டெபாசிட் இழக்கச் செய்வோம் என மக்கள் போட்ட ஓட்டு, அப்படியே காசு வாங்கினாலும் தனது ஓட்டை எதிர்ப்பு ஓட்டாகப பதித்த மக்களின் ஓட்டு, ஆளும் அரசாங்கத்தின் அத்தனை இயந்திரங்களும் களத்தில் இறங்கினாலும் தீராத பிரச்சனைகளை பல வருடங்களாக தாங்கிப் பிடித்துள்ள தொகுதிக்கு பண்டிகை விடுமுறைக்கு வருவது போல வராதீர்கள் என மக்கள் நெத்தியடியாக்ப போட்ட ஓட்டு, பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு தன் எதிர்ப்பைப் பதிவு செய்த சாமானியனின் ஓட்டு…..

இன்றைக்கு ஜெயித்த டிடிவியின் மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. அவரும் அவர் குடும்பத்தினரும் நடத்திய 25 ஆண்டுக் கொள்ளயை மக்கள் இந்த ஜென்மத்தில் மறக்க மாட்டார்கள். இந்த வெற்றி அதீத தன்னம்பிக் கொண்ட அதிமுக, திமுக விற்கு எதிராக தங்களின் அதிருப்தியை மக்கள் வெளிப்படுத்திய தேர்தல். நாளைக்கே இன்னொரு தேர்தல் வேறெங்கு நடந்தாலும் டிடிவிக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது.

ஜெயித்தது டிடிவி அல்ல.

ஆர்கே நகர் மக்கள், அரசியல்வாதிகளுக்கு எதிராக……

 – டிமிடித் பெட்கோவ்ஸ்கி