October 5, 2022

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் -யார்?

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார்.பாஜகவின் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் தேர்வை அனைவரும் ஒப்புக்கொள்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

ராம்ராத் கோவிந்த் பின்னணி:

ராம்நாத் கோவிந்த் 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், தேராபூர் தாலுகா பராங்க் என்ற கிராமத்தில் தலித் குடும்பத்தில் பிறந்தார். தனது பள்ளி, கல்லூரி நாட்களில் பிற்படுத்த ப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக உரக்க குரல் கொடுத்தார். போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் நலிவடைந்தோரின் பாதுகாவலர் என்ற அடைமொழி அப்போதே அவருக்கு உண்டு.

கான்பூர் பல்கலைக்கழகத்தில் முதலில் பி.காம். படித்தார். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி.(வக்கீல்) பட்டமும் பெற்றார். 1971-ல் டெல்லி பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். இதற்கிடையே சிவில் சர்வீசஸ் தேர்வில் 2 முறை தோல்வி கண்டு 3-வது முறையாக தேர்ச்சி பெற்றார்.

1977-ம் ஆண்டு முதல் 1979-ம் ஆண்டு வரை டெல்லி ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை மத்திய அரசின் வக்கீலாக சுப்ரீம் கோர்ட்டில் பணி புரிந்தார். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலனுக்கான பாராளுமன்ற நிலைக்குழு, சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் பாராளுமன்ற நிலைக்குழு உள்பட பல்வேறு நிலைக்குழுக்களில் உறுப்பினராக அவர் பணியாற்றி இருக்கிறார்.

1977-ல் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது. இதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் குதித்தார். லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வாரிய உறுப்பினராகவும், கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவனத்தில் அரசு நிர்வாக குழு உறுப்பினராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார்.

டெல்லி மேல்-சபைக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து தொடர்ச்சியாக 2 முறை (1994-2000, 2000-2006) தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றினார். தனது எம்.பி. பதவி காலத்தில் உத்தரபிரதேசம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் கிராமப் புற கல்வி வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக பயன்படுத்தி தீவிரமாக பாடுபட்டார்.

தலித், பழங்குடியினர் வகுப்பில் நலிவடைந்தோர், பெண்களுக்கு டெல்லி இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சட்ட உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.2002-ம் ஆண்டு இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். எம்.பி.யாக பதவி வகித்தபோது தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.

பரபரப்பு, தடாலடி அரசியலில் ராம்நாத் கோவிந்த் ஈடுபடாவிட்டாலும் கூட பா.ஜனதாவில் பல்வேறு பதவிகளை வகித்து உள்ளார். பா.ஜனதாவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002-ம் ஆண்டு வரை பணியாற்றினார். இதேபோல் அகில இந்திய கோலி சமாஜ் தலைவராகவும் பதவி வகித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

பா.ஜனதாவின் தேசிய செய்தி தொடர்பாளராக பதவி வகித்த அவர் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 71 வயது ராம்நாத் கோவிந்த்தின் மனைவி சவீதா. . இந்த தம்பதிக்கு பிரசாந்த் குமார் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.

.