October 27, 2021

வேறு வழியில்லை..இந்த கொரோனா வைரஸூக்கு எதிரா செயல் பட்டே ஆகோணும்!

உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இப்படி நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை. இருந்தும் நாம் இந்த வைரசைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் கூடாது. இதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும் “ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ் தெரிவித்துள்ளார்..

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19′ என்று அந்த அமைப்பு பெயரிட்டது. 2020-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து சீனாவை ஆட்டிப்படைத்து வந்த கரோனா வைரஸின் தாக்கம் தற்போது அந்நாட்டில் சற்று தணிந்துள்ளது. அதேவேளையில், தென் கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட மற்ற நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகளில் கடந்த 24 மணிநேரத்தில் 1500 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் கொவைட்-19’ வைரஸுக்கு சீனாவை தவிர்த்து உலகளவில் சுமார் 64 நாடுகளில் இதுவரை 8774 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதேசமயம் 128 பேர் பலியாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், ”கொரோனா இதுவரை கண்டிராத ஒரு தனித்துவம் வாய்ந்த வைரஸ். நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும், 3,000க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவைத் தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரசால், 8,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஈரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டும் 81 சதவீதம் பேர் உள்ளனர். ஈரானில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அமெரிக்காவில் மேலும் நான்கு பேர் இந்த வைரசால் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.பிரான்சில் நேற்று ஒரேநாளில் மேலும் 61 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, 191- ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் பிரிட்டனில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து, போர்ச்சுக்கல், ஜோர்டான், துனீசியா, அர்மேனியா, லாத்வியா, செனிகல் உள்ளிட்ட ஏழு நாடுகளில் நேற்று முதல்முறையாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது.உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இப்படி நெருக்கடியை எதிர்கொள்ளாததால், இதைக் கையாளுவதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை. இருந்தும் நாம் இந்த வைரசைக் கண்டு அஞ்சி ஒடுங்கக் கூடாது. இதற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே இதை வீழ்த்த முடியும்”என்று அவர் தெரிவித்துள்ளார்.