January 26, 2022

உலகளவில் நம்பகத்தன்மை குறித்த ஆய்வு- பல்வேறு சுவையான தகவல்கள்!

ர்வதேச அளவில் நம்பகமான நாடு குறித்து இப்சாஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. சுவீடன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, துருக்கி, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்த ஆய்வில் மருத்துவர்கள் முதலிடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நம்பகத்தன்மையில் அரசியல்வாதிகளுக்கு கடைசி இடமே கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது பெரிதும் கேள்விக்குறியாகி விட்ட நம்பகத்தன்மை குறித்து பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இப்சோஸ் (IPSOS) என்ற புகழ்பெற்ற ஆய்வு நிறுவனம், நம்பகத்தன்மை குறித்த பன்னாட்டு அளவிலான ஒரு ஆய்வை நடத்தி உள்ளது. அதில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ரஷ்யா, மலேசியா, சவுதி அரேபியா, தென் கொரியா, ஜெர்மனி, கனடா உள்ளிட்ட புகழ்பெற்ற 28 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 2018 முதல் 2021 வரையான ஆண்டுகளில் முதன்மையான 18 துறைகள் குறித்து, அந்தந்த நாட்டின் ஆய்வு அறிக்கைகள் மற்றும் இணைய வழியில் கலந்து கொண்ட 19,700 பேரின் கருத்துகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்று இப்சோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நம்பகத்தன்மை குறித்த ஆய்வு, ஆர்வமூட்டும் பல்வேறு சுவையான தகவல்களை நமக்கு வழங்கி உள்ளது. நம்பகத்தன்மை குறித்த இந்த ஆய்வு 2022 ஜனவரி 1, 2 ந்தேதிகளில் பல நாளேடுகளில் வெளியாகி இருந்ததை கண்டோம். 28 நாடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் நீதிபதிகள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், கருத்துக்கணிப்பாளர்கள், சமய குருமார்கள், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள், குடிமைப் பணியாளர்கள், வணிகத் தலைவர்கள், வங்கியாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், பொதுமக்கள், விளம்பர நிர்வாகிகள் உள்ளிட்ட உலகின் 18 முதன்மை துறைகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 18 முதன்மை துறைகளில் அனைத்து நாடுகளிலும் அதிக நம்பிக்கையை பெற்று முதன்மை இடம் பெற்ற 5 துறைகளில் மருத்துவர்கள் முதலிடமும் அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள்) இரண்டாமிடமும் ஆசிரியர்கள் மூன்றாமிடமும் ராணுவத்தினர் 4 வது இடமும் காவல்துறையினர் 5 வது இடமும் பிடித்துள்ளனர். அதேபோல் மிகக் குறைந்த நம்பகதன்மையை பெற்று கடைசி 3 இடங்களை பெற்றுள்ளவர்கள், விளம்பர நிர்வாகிகளும், அரசின் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளில் மருத்துவர்கள் மீது அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறித்த கணிப்பில் பிரிட்டிஷ் மருத்துவர்களுக்கு 72% மக்கள் ஆதரவுஅளித்துள்ளனர். நெதர்லாந்து மருத்துவர்களுக்கு 71% பேரும், கனடா மருத்துவர்களுக்கு 70% பேரும்ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவர்கள் மீது 64% மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அதே சமயம், இந்த ஆய்வில் பல்வேறு சுவையான தகவல்கள் வெளிப்பட்டு உள்ளது. 28 நாடுகளின் 18 முதன்மை துறைகளில் மருத்துவர்கள் முதலிடம் பெற்று இருந்தாலும், இதில் இந்திய மருத்துவர்கள் 24 வது இடத்தில்தான் உள்ளனர். அதேபோல், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 18 முதன்மை துறைகளில் பன்னாட்டு அளவில் கடைசி இடமே அரசியல்வாதிகளுக்கு கிடைத்து இருந்தாலும் இந்திய அரசியல்வாதிகள் இதில் 3 வது இடத்தை பிடித்து உள்ளனர் என்பது வியப்புக்குரியது. அதேபோல், அமைச்சர்களில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது என்பதும் சுவையான ஒன்று.