பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

பிரதமரிடம் கொடுத்த கோரிக்கைகள் என்னென்ன? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்திய கோரிக்கைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் விரிவாக கூறியுள்ளார்.

டெல்லி செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் சொன்னது இதுதான்:

“கொரோனா பெருந்தொற்று பணிகள் காரணமாக முன்கூட்டியே பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. அவருடனான சந்திப்பு மனநிறைவாக உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளித்துள்ளார். எந்த கோரிக்கையாக இருந்தாலும் எங்களிடத்திலே வெளிப்படையாகக் தெரிவிக்கலாம் எனக்கூறியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும், கோரிக்கையையும் அவரிடம் கொடுத்துள்ளோம். கூடுதலான தடுப்பூசிகளை தமிழகத்துக்கு வழங்க வேண்டுமெனவும், செங்கல்பட்டு தடுப்பூசி தொழிற்சாலையை உடனடியாகச் செயல்பட வைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டுமென கேட்டுள்ளோம். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். திருக்குறளை தேசிய நூலாகக்கவும், மேகதாது திட்டத்துக்கான அனுமதியை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 152 அடியாக உயர்த்தப்படவும், இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளோம். கச்சத்தீவு மீட்கவும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமைனையை விரைவராகக் கட்டி முடிக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். மருத்துவத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு தர வேண்டும். புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக குடியேறியுள்ள மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீடு உரிமைகளை மாநில அரசே நிர்ணயித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். குடியரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். இப்படியாக மேலும் சில கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம். அதை நிறைவேற்றவும் அழுத்தம் கொடுப்போம் ” என்றார்.

மத்திய அரசுடனான உறவு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு உறவுக்கு கை கொடுப்போம்உரிமைக்கு குரல் கொடுப்போம் என பதிலளித்தார். ஏழு தமிழர் விடுதலை குறித்த பத்திரிகையாளர்களின் கேட்டதற்கு அது குறித்து ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளோம். குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்போம் என்றார். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் பதிலளித்துள்ளார்.

error: Content is protected !!