February 6, 2023

இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

விடுதலைப் போராட்ட நாட்களிலேயே சமூக நீதிக் கொள்கைக்கானப் போராட்டங்களும் துவங்கிவிட்டன. தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக தனது செல்வாக்கை நிலை நிறுத்தியுள்ள ஒரு கொள்கையாகும் சமூக நீதிக் கொள்கை. இதன் அடிநாதமாகச் செயல்படுவது இட ஒதுக்கீடு. இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டப்போது அதில் இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. அதுவும் 50 ஆண்டுகள் எனும் வரையறையுடன்.

பல்வேறு வழக்குகள் அதற்கான தீர்ப்புகள் இவற்றுடன் இன்று இட ஒதுக்கீட்டுக் கொள்கைப் புதிய பரிமாணங்களைப் பெற்று வருகிறது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தப் பின் பிற வகுப்பினரும் தங்களுக் குரிய இட ஒதுக்கீட்டைத் துல்லியமாக அளந்துப் பெற கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் வன்னியர் சங்கமும் அதன் அரசியல் வாரிசான பாமகவும் தற்போது 20% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். ஏற்கனவே 1980 களின் மத்தியில் வன்னியர் சங்கம் போராடியதில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்போது ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக கோரியுள்ளது. முதல்வரும் இந்த நோக்கத்திற்கு என்று ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளின் பேரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடலாம் என்று அறிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது முதன் முறையாக ஜாதி வாரியானத் தகவல்களும் சேகரிக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு இதன் விவரங்களை வெளியிடவில்லை.

இட ஒதுக்கீடு உணர்ச்சிகரமானப் பிரச்சினை. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இதை அதிகரிக்கும் வாய்ப்பு குறைவானது என்றாலும் தேவை ஏற்பட்டால் மத்திய அரசுடன் பேசவும் தமிழக அரசியல் கட்சிகள் ஒருசேர குரல் எழுப்புவார்கள். ஏனெனில் பொது இடங்களின் விழுக்காட்டைக் குறைத்துதான் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க இயலும். இட ஒதுக்கீட்டிலும் பங்கு பெற்று பொது ஒதுக்கீட்டிலும் போட்டியிடும் சமூகங்கள் தமிழகத்தில் அதிகம். இவர்களை ஒரேயொரு ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்தால் எதிர்ப்பு எழுவதுத் தவிர்க்க இயலாது. சரி மக்கள் தொகை அடிப்படையில் ஒதுக்கீடு என்றாலும் உள் ஒதுக்கீடு எப்படி இருக்கும்? யாருக்கு வழங்கப்படும் என்பதும் தெரியாது. அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டப்போது மிகவும் பிற்பட்ட சமூகங்களுக்கும் இது விரிவு படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தவிர இட ஒதுக்கீடு பெற்ற சமூகங்களில் பொருளாதார ரீதியாக இனங்கண்டு அவர்களைப் ஒதுக்கீட்டுப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது பின்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் உண்டு.

இத்தகையச் சூழலில்தான் நீட் போன்றத் தேர்வுகளும் வந்துள்ளன. இதற்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது மேலும் விரிவுபடலாம். இட ஒதுக்கீட்டின் அழுத்தத்தைத் தவிர்க்க அரசுக்கு முன்னுள்ள வாய்ப்புகள் ஒரு சிலது மட்டுமே. ஆண்டு வருமானம் ₹8 இலட்சத்திற்கும் மேலுள்ள குடும்பங்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது என அறிவிக்கலாம். ஆண்டு வருமானம்₹3 இலட்சத்திற்கும் குறைவான குடும்பங்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்பது முதன்மையானதாக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் முழுப் பலனையும் பெற முடியும். உயர்க்கல்விக்கானச் செலவையும் அரசே முழுமையாக ஏற்க வேண்டும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது போல உயர்க்கல்விக்கான இடங்களை பெரிதும் அதிகரிக்க வேண்டும். தரமானக் கல்வியை அரசு கல்வி நிறுவனங்களில் உறுதிப் படுத்த வேண்டும். தமிழில் உயர் கல்வி வரை இலவசமாகப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலமே இட ஒதுக்கீட்டுச் சிக்கல்களை எதிர்கொள்ள முடியும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு