October 16, 2021

ஜீவகாருண்யம் என்பதன் அர்த்தம்தான் என்ன?

‘மாட்டிறைச்சி பற்றி நீங்கள் பதிவேதும் போடவில்லையா?’ என்று குறும்புக்கார முகநூல் நண்பர் ஒருவர் இன்பாக்ஸில் வந்து விசாரித்தார். ‘என்னைப் பார்த்து ஏண்டா இப்படி ஒரு கேள்வி கேட்டே?’ என்கிற கவுண்டமணியின் குரல்தான் மனசுக்குள் ஒலித்தது. இருந்தாலும் கேட்டுவிட்டார். எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். ஆட்டிறைச்சி போன்று மாட்டிறைச்சி அவ்வளவு சுவை யாகவோ மிருதுவாகவோ இருக்காது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சர்க்கரைத் தயாரிப்பில் மாட்டு எலும்பு ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்படுகிறது என்றும் கேள்விப்பட்டுள்ளேன். அன்றி லிருந்து, சர்க்கரையைச் சேர்த்துக்கொள்ளும்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாட்டு எலும்பு எனக்குள் செல்வதாக ஒரு நினைப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

‘ஆடு திங்கிறே; மாடு திங்கிறே; குதிரையை, கழுதையையெல்லாம் ஏன் திங்க மாட்டேங்குறே?’ என்று, வேற்று மதத்தைச் சார்ந்த என் நண்பனிடம் பள்ளி வயதில் – குசும்பாக அல்ல; உண்மையிலேயே காரணம் தெரிந்துகொள்ள வேண்டி – கேட்டிருக்கிறேன். ” ‘கால் குளம்பு இரண்டாகப் பிரிந்திருந்தால், அந்த மிருகங்களை உண்ணலாம்; ஒரே குளம்பாக இருக்கும் மிருகங்களை உண்ணக்கூடாது’ என்று எங்கள் பெரியவர்கள் சொல்வார்கள். எங்கள் வேதப் புத்தகத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறதாம்” என்று அவன் சொன்ன பதில் இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது பற்றி மேலே நான் ஆராயவில்லை.

சரி, மாட்டிறைச்சி உண்ணலாமா, கூடாதா என்று என்னைக் கேட்டால், ‘அது அவரவர் விருப்பம்’ என்றுதான் சொல்வேன். ரத்தக்கண்ணீர் படத்தில், “நாங்க ஜீவ காருண்யக் கட்சியைச் சேர்ந்தவங்க” என்று எஸ்.எஸ்.ஆர். சொன்னதும், “அப்படின்னா என்னப்பா அர்த்தம்?” என்று கேட்பார் எம்.ஆர்.ராதா. “நாங்க உயிர்களைக் கொல்ல மாட்டோம்” என்று எஸ்.எஸ்.ஆர். சொல்ல, “அப்போ, ராத்திரில மூட்டைப்பூச்சி கடிச்சதும் என்னப்பா செய்வீங்க? டேய், ஏண்டா டூப் விடறீங்க?” என்பார் எம்.ஆர்.ராதா நக்கலாக.

இது குதர்க்க வாதம்போல் தோன்றினாலும், யதார்த்தம் இதுதான். ஜீவகாருண்யம், இரக்கம், அகிம்ஸை என்பனவற்றின் அளவுகோல்கள் எல்லாம் ஆளாளுக்கு மாறுபடுகின்றன. கரப்பான்பூச்சியைக் கண்டதுமே அதன் வெள்ளை ரத்தம் பிதுங்கி வழிகிற மாதிரி துடைப்பக்கட்டையால் அந்தச் சாத்து சாத்திக் கொலை செய்யும்போது எங்கே போனது ஜீவ காருண்யம்? நேற்று நான் எங்கள் வீட்டுச் சமையலறையில் சுற்றிக்கொண்டிருந்த தடித்த பல்லி மீது ஹிட் அடித்துக் கொன்று வெளியே எறிந்தேன். பார்த்துக்கொண்டிருந்த என் மகன், “ஏம்ப்பா உனக்கு இந்தக் கொலைவெறி? கட்டையால அதும் பக்கத்துல தட்டினா, அது ஓடிப் போகக் போகுது! கொல்லணுமா?” என்றான். ஜீவ காருண்ய அளவுகோல் அப்பனுக்கும் பிள்ளைக்குமே மாறுபடுகிறது என்னும்போது கோடிக்கணக்கான ஜனங்களிடம் அதன் விகிதாசாரம் ஏகத்துக்கும் மாறாதா என்ன?

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி உண்பவர்கள்கூட, மருத்துவம் படிக்கும் மாணவன் ஒருவன் மாடியிலிருந்து நாயைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்ய முயன்றதை வீடியோவில் பார்த்துப் பதறி, ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்கள். மாட்டிறைச்சி சாப்பிடுவதால் அவர்கள் ஜீவகாருண்யம் அற்றவர்களாக ஆகிவிட்டார்களா என்ன?

இறைவன் படைப்பில் எல்லாம் சமம். நன்றி, கருணை, இரக்கம், கோபம், வன்முறை, வஞ்சகம், பொறாமை, ஜீவகாருண்யம் என எந்தவிதமான உணர்ச்சிகளுக்கும் அங்கே இடமில்லை. இருந்திருந்தால், காடுகளில் புலிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் உணவாக மான்களைப் படைத்திருப்பானா? கூட்டம் கூட்டமாக மனிதர்களும், குழந்தைகளும் இயற்கைப் பேரிடரில் சிக்கி மரணமடையும்போது, “இறைவன் ஏன் இவர்களைக் காப்பாற்றவில்லை?” என்று நாத்திகர்கள் கேள்வி எழுப்புவதுண்டு. அப்போதும் இதுவேதான் என் பதில். நீங்கள் சொல்லும் கருணை, இரக்கம், புகழ், பெருமை போன்ற அத்தனை குணாம்சங்களுக்குள்ளும் அடங்காதவன் அவன். அத்தகைய குணங்கள், உணர்ச்சிகள் யாவும் மனித வளர்ச்சியில் காலப்போக்கில் மனிதனாக வகுத்துக்கொண்டவையே!

வேத காலத்திலேயே மனிதர்கள் மாட்டிறைச்சி உண்டிருக்கிறார்கள் என்று ஒரு வாதத்தை முன்வைக்கிறார்கள் சிலர். ஆதி மனிதன் நர மாமிசம் புசித்தான். அன்று அவனுக்கு அது தவறாகத் தோன்றவில்லை. இன்று யாரேனும் நர மாமிசம் புசித்தால் ஏற்போமா? நவ நாகரிக நாடு ஒன்றில், ஒரு ஹோட்டல். சாப்பாட்டு மேசையின் நடுவில் வட்டமாக ஓட்டை போடப்பட்டு, அதில் தலை கச்சிதமாகப் பொருந்துகிற மாதிரி ஒரு குரங்கை மேசைக்கு அடியில், அங்கே இங்கே நகராமல் கட்டிவைத்துவிடுவார்களாம். பின்னர், குரங்கு உயிரோடு இருக்கும்போதே, அதன் மண்டையை இளநி சீவுவதுபோல் சீவி, துடித்துக்கொண்டிருக்கும் அதன் மூளையில் மசாலா தூவி, அப்படியே ஃபோர்க்கால் எடுத்து உண்பார்களாம். இப்படியான உணவு முறை இங்கே நம் இந்தியாவில் உண்டா? கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்தெடுத்து, அந்த சிசுவை உண்ணும் வழக்கம்கூட சில நாடுகளில் உள்ளதெனப் படித்திருக்கிறேன். அப்படியான கொடூர வழக்கம் இங்கே இந்தியாவில் உண்டா? இல்லையே! எனில், ஜீவகாருண்யம் என்பதன் அர்த்தம்தான் என்ன?

அவரவர் மனப்போக்குதான். இறைச்சி உண்பது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அதைச் செய்யவில்லை. பெருவாரியான மக்களுக்குப் பிடித்திருக்கிறது. உண்கிறார்கள். நான் சரி என்றோ, அவர்கள் சரியல்ல என்றோ இதற்கு அர்த்தமல்ல. ஒரு காலகட்டத்தில், பெருவாரியான ஒரு சமூகம் என்ன முடிவெடுக்கிறதோ அதுவே அன்றைக்குச் சரி!

‘கொன்னா பாவம், தின்னா போச்சு’ என்பார்கள். இறைச்சிக்காகக் கொல்வதில் தவறில்லை என்பதே இதன் அர்த்தம். தேவையில்லாமல் ஓர் உயிரைக் கொல்வதோ, அது வேதனையால் துடிதுடித்துக் கதறுவதில் இன்பம் காணுவதோதான் மன வக்கிரத்தின் அடையாளமே தவிர, இறைச்சிக்காக உண்பதில் ஒரு தவறும் இல்லை. இதைச் சட்டம் போட்டெல்லாம் தடுக்கக் கூடாது; தடுக்கவும் முடியாது! இறைச்சிக் கடைக்காரர்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான்… ஒரே வெட்டில் தலை துண்டாகி விழுகிற மாதிரி உங்கள் கத்தியைத் தீட்டிக் கூர்மையாக வைத்துக் கொள்ளுங்கள்!

ரவிபிரகாஷ்